புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013

கவர்ச்சியான சுவரொட்டி திண்ணும் தாய்ப்பசு – கவிக்கோ அப்துல் ரஹ்மான்

இரத்தம் வெவ்வேறு நிறம். அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன. நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் இருட்டுக் காடுகளுக்கு வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள் சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை. அவர்கள் கவரிமான்கள். நாம் கவரிகள். இதோ தேவவேடம் போட்ட சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!
இதோ இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள் நீரைக் கலக்கிய பழியை ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!
இதோ சித்தாந்த வித்துவான்கள். ஒப்பாரியில் ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்!
இதோ வெள்ளைக் கொடி வியாபாரிகள். விதவைகளின் புடவைகளை உருவிக் கொண்டிருக்கிறார்கள்!
அன்று அசோகன் அனுப்பிய போதிமரக் கன்று ஆயுதங்கள் பூக்கின்றது. இன்று அசோகச் சக்கரத்தின் குருட்டு ஓட்டத்தில் கன்றுகளின் இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது!
தாய்ப் பசுவோ கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்றுஅசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!

ad

ad