புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2013


ட்டாசு ஆலைகள் அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிர்ப்பலிகளை தொடர்ந்து வாங்கினாலும், அரசு அதிகாரிகளின் குறட்டை கலைவதாக இல்லை. இதன் விளைவு... சேலம் மாவட்ட வேடன்கரட்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண்களும் குழந்தைகளும் பெரியவர்களுமாய் சாந்தி, சூர்யா, சிவகாமி, ஈஸ்வரி, தீபா, தங்கம், கேசவன், விஜயா, சதீஷ் ஆகிய 9 பேர் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள். 

வேடன்கரடு கிராமம், சேலம் மாவட்ட மேச்சேரி அருகே இருக்கிறது. அங்கு சாந்தி என்ற விதவைப் பெண்மணி அனுமதிக் காலம் முடிந்தும் வாணவேடிக்கை தொழிற்சாலையை நடத்திவந்தார். அன்று வழக்கம் போல் 17 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டி ருக்க, அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்ப தால் அவர்களில் சிலரின் குழந்தைகளும் பட்டாசு ஆலைக்கு வந்திருந்தன.

மதியம் 1.50-க்கு அந்த தொழிற் சாலையில் இருந்து ’டமார்’ என்ற சத்தம், பிராந்தியத் தையே நடுங்க வைக்கும் விதமாய்க் கிளம்ப... ஒரு பிரளயத் தீப்பிழம்பு அங்கே குபீர் என கிளம்பியது. ஒரே புகைமூட்டம்.

வீசியெறியப்பட்ட கட்டிடத்தின் கற்கள்... அடியோடு பெயர்ந்த சிறு  மரங்கள்..... வீசி எறியப்பட்ட டிபன் பாக்ஸ்கள், சிதறிய சோற்றின் எச்சங்கள்.... .கருகிப்போன மரக்கிளைகள்... என ஏரியாவே ரணகளமாய்க் காட்சியளித்தது.

அங்கு கிடந்த ஒரு டிபன்பாக்சை பார்த்த ஒரு பாட்டி "என் பேத்தியோட சோத்து டப்பா கிடக்கே... அய்யோ என் பேத்தி போயிட்டாளா?'’என்றபடி மாரில் அடித்துக்கொண்டு  கதறினார். ஒரு மர இடுக்கில்  ஏதோ தென்பட, அதை ஓடிச்சென்று எடுத்த அந்த இளைஞர், அப்படியே தலை சுற்றிக் கீழே விழுந்தார். அது எரிந்து கரிக்கட்டையாகிப் போன யாரோ ஒருவரின் கால். மற்றொருபுறம் சில மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு, எரிந்து சிதறிக் கிடந்தான் 13 வயது சிறுவன் கேசவன். அவன் சடலத்தருகே விழுந்து புரண்ட அந்த முதியவர் ‘""பட்டாசு மருந்து சுத்துனா பத்து ரூபாய் கெடைக்கும். தேனு மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்னு சொல்லிட்டுப் போனியே பேராண்டி. அப்படியே போயிட்டியேடா.. உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பதிலைடா நான் சொல்லுவேன்''’என நெஞ்சில் அடித் துக்கொண்டு கதறினார். இப்படி அங்கே எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒப்பாரியும், ஓலமுமாக இருந்தது.

சம்பவ இடத்திலேயே  கம்பெனி உரிமையாளர் சாந்தியும் அவரது 10 வயது மகன் சூர்யாவும் எரிந்து கரிக்கட்டையாகிவிட்டனர். அதேபோல் ஈஸ்வரி அவரது மகள் தீபா என அந்த அம்மாவும் மகளும் கூட வெடித்துச் சிதறிவிட்டனர். 

எஸ்.பி.அஸ்வினுடன் சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் மகர பூஷனத்திடம் ""சின்ன குழந்தைகள் எப்படி இறந்தனர், அவர்களும் பட்டாசு ஆலையில் வேலை செய்தார்களா?'' என்றோம். கலெக்டரோ ""கிறிஸ்துமஸ் லீவ் விட்டதால் இங்கு  வேலை செய்கிற அப்பா, அம்மாக் கூட அவங்க  குழந்தைகள் வந்துருக்காங்க. மற்றபடி சிறுவர்-சிறுமியர்கள் யாரும் இங்கு பணி புரியவில்லை'' என்று மறுத்தார்.

""இந்த பட்டாசு ஆலைக்கு 2009-ல் சாந்தி லைசன்ஸ் வாங்கியிருக்காங்க. அது போன மார்ச் மாசமே காலாவதி ஆய்டிச்சி. மீண்டும் லைசென்சை ரெனீவல் பண்ண சாந்தி விண்ணப்பிச்சும், அதிகாரிகள் அதை கண்டுக்கலை. அவங்க மறுபடியும் லைசென்ஸுக் காக இங்க ஆய்வு நடத்தி, குறைகளை களைஞ்சிருந்தா இந்த விபத்தே நடந்திருக்காது''’என்று வேதனையை வெளியிட்டனர் அக்கிராம மக்கள்.

இதையும் நாம் கலெக்டரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றபோது, ""நாங்க சரியான முறையில்தான் அனுமதி கொடுத்துருக்கோம். இது எதிர்பாராமல் நடந்த விபத்து. அவ்வளவுதான்'' என்றார் சம்பிரதாயமாக. வேடன்கரடு கிராமத்துக்கு அன்று இரவு வந்த சில அதிகாரிகள் ""சின்னப் பசங்க பட்டாசு ஆலைக்கு வேலைக்குப் போய் இறந்தாங்கன்னு சொல்லாதீங்க. சொன்னா, பிள்ளைகளை வேலைக்கு அனுப்பியவங்க மேல் வழக்கு பதிவாகும். அரசின் நிவாரண உதவியும் கிடைக்காது. அதனால் அங்க விளையாடப் போகும்போதுதான் இப்படி ஆச்சுன்னு சொல்லுங்க. கலெக்டர்தான் இப்படி சொல்லச் சொன்னார்''’என பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் சொல்லிவிட்டுச் சென்றனர்.

விபத்து எப்படி நடந்தது? என விசாரித்த போது,’""மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வர்ற மாசம் நடக்க இருக்குது. அதற்காக வாணவேடிக்கை, நாட்டு வெடி இதெல்லாம் நிறைய வேணும்னு ஆர்டர் கிடைக்கவும்தான் சாந்தி விடிய விடிய வேலை செஞ்சுருக்கு. தன் பையனோட வந்த பழநியப்பன் என்பவர் வாணவேடிக்கை வாங்கி, அதை இந்த பட்டாசு கொடோனுக்கு பக்கத்திலேயே டெஸ்ட்டுக்காக வெடிச்சுருக்காரு. முதல் வெடி நல்லா வெடிச்சுருக்கு. அந்த நேரம் வெளில போயிட்டு வந்த சாந்தி, வெடிப்பதை தடுக்குறதுக்குள்ள ரெண்டாவது வெடியை அவர் வெடிக்க, அது அப்படியே கொடோன்ல போய்விழ, இப்படியொரு விபரீதம் நடந் துடுச்சி''’என்றார்கள் விபரமறிந்தவர்கள்.

பட்டாசு ஆலை நடத்த வேண்டுமானால் போலீஸ், தீயணைப்புத் துறையிடம் என்.ஓ.சி. சான்றிதழ் வாங்கவேண்டும். பட்டாசு தயாரிப்புக் கண்காணிப்பு டி.ஆர்.ஓ. மூலம் கலெக்டரின் கீழ் நடக்க வேண்டும். பட்டாசு ஆலையைச் சுற்றி லும் வீடுகள் இருக்கக்கூடாது. மரங்கள் வைத் திருக்க வேண்டும். குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. காட்டன் ட்ரெஸ் போட்டுதான் பணி புரிய வேண்டும். 15 கிலோ வெடிப்பொருட் களுக்கும் மேல் ஸ்டாக் வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் நிறைய விதிகள் இருக்கிறது. ஆனால் இங்க சாந்தி பட்டாசு ஆலையில  சிதறிக் கிடந்த பட்டாசு வெடிப்பொருட்களே 100 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆக எதையுமே அதிகாரிகள் கவனிக்கவே இல்லை இங்கே.

இனியாவது பட்டாசு மரணங்களுக்கு முற் றுப்புள்ளி வைக்க முன்வருவார்களா? இல்லை அலட்சியத்தால், அடுத்தடுத்த விபத்துக்களுக்கு அதிகாரிகள் ஆரத்தி எடுக்கப் போகிறார்களா? 

-சிவசுப்ரமணியம், இளங்கோவன்

ad

ad