புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013

10-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து,
இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு தகுதி பெறும். 

இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் 105 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 32 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 

இந்த நிலையில் இந்திய அணி இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதியது. இப்போட்டியில் வென்றால்தான் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு இலங்கை வீராங்கனைகள் பேட்டிங்கில் மிரட்டினர். தீபிகா ரசாங்கிகா 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். சசிகலா சிர்வார்டேன் 59 ரன்களும், யசோதா மென்டிஸ் 55 ரன்களும், கவுசல்யா 56 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனை பூனம் ராவத் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் மிதாலி ராஜ் 20 ரன்களும், திரிஷ் காமினி 22 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். 69 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணிக்கு மல்கோத்ரா-கோஸ்வாமி ஜோடி ஆறுதல் அளித்தது.

இந்நிலையில் அணியின் ஸ்கோர் 106ஐ தொட்டபோது இந்த ஜோடியும் பிரிந்தது. 22 ரன்களில் கோஸ்வாமி பெவிலியன் திரும்பினார். சற்று நேரம் தாக்குப்பிடித்த மல்கோத்ரா 38 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்கள வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 42.2 ஓவர்களில் 144 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

இதனால் இலங்கை அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கும் தகுதி பெற்றது. 3 லீக் போட்டிகளில் 2 போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள 7-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.

குரூப் ஏ பிரிவில் இலங்கை தவிர இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் 8-ம் தேதி தொடங்குகின்றன.

ad

ad