புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013


ஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா? அமெரிக்காவுக்கா?
ஜெனிவாவில் எதிர்வரும் 25ம் திகதி தொடங்கப் போகும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.tamilwin
முன்னதாக இந்த அறிக்கையின் பிரதி ஜெஸனிவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மூலம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
18 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையைப் படித்துவிட்டு அரசாங்கம் எதைச் சொல்லப் போகிறது என்பது எவருமே இலகுவாக ஊகித்திருக்கக்கூடிய விடயம்தான்.
ஏனென்றால் அரசாங்கம் ஒருபோதுமே தனது பக்கமுள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை. இது முதலாவது விடயம்.
அடுத்தது ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையே கண்ணில் காட்ட முடியாத போது அவரது அறிக்கையை மட்டுமா அரசாங்கம் வரவேற்கப் போகிறது?
வழக்கம் போலவே அரசாங்கம் இது பக்கச் சார்பானது நியாயமற்றது என்று நிராகரித்து விட்டது.
நவநீதம்பிள்ளையின் அறிக்கை காட்டமானதாக இருக்கும் என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்டது தான்.
ஏனென்றால் ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடையும் சூழலில் கூட அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்காத நிலையில் ஏமாற்றமும் கோபமும் அந்த அறிக்கையில் கண்டிப்பதாக எதிரொலிக்கும் என்பது தெரிந்ததே.
அந்த வகையிலேயே அரசாங்கம் வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக நவநீதம்பிள்ளையின் அறிக்கை கூறுகிறது.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் குறித்த உள்ளூர் விசாரணைகள் நடுநிலையாகவோ நம்பத்தகுந்த வகையிலோ நடக்கவில்லை. மீறல்கள் குறித்த இராணுவ விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்த அறிக்கையில் அடுக்கப்பட்டுள்ளன குற்றச்சாட்டுகள்.
அதுமட்டுமன்றி கடந்த ஆண்டிலும் நீதிக்குப் புறம்பான கொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்ந்தன. சிறைப்படு கொலைகள் நடந்துள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது.
இப்படியே நீளும் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படுவதோ தண்டனை அளிக்கப்படுவதோ குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதை தடுப்பதற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் தலைமையிலான மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், தம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முனைகிறது என்று கலக்கம் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு வந்துவிட்டது.
தன்னை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சர்வதேச சமூகம் முனைவதாக மகிந்த ராஜபக்சவே பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இப்போது யார் குற்றவாளி என்ற பிரச்சினை எழவில்லை.
நியாயமான விசாரணைகளை நடத்து என்று தான் சர்வதேச சமூகம் அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கிறது.
அவ்வாறானதொரு விசாரணை அதாவது சுதந்திரமான உள்ளக விசாரணை என்பது இலங்கையில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பது சர்வதேச சமூகத்துக்கு நன்றாகவே தெரியும்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத்தை அடுத்தே இந்த முடிவுக்குப் பல நாடுகள் வந்திருந்தன.
ஆனால் ஒரு முன்னாள நீதிபதி என்ற வகையில் இதனை நவநீதம்பிள்ளை ஏற்கனவே அறிந்திருந்தார்.
ஆதனால் தான் அவர் ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குகின்ற அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை.
ஏன் ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனுக்குக் கூட கிடையாது.
அதனால் தான் அவர் நிபுணர் குழு தன்க்கு அளித்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டு விட்டு சும்மாவிருந்தார்.
அந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவரால் ஒரு சுதந்திரமான விசாரணைக்குழுவை நியமிக்க முடியாது.
அதனால் தான் அந்த அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பியிருந்தார்.
அதேபோன்ற நிலையில் தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிலையும் உள்ளது.
அவரால் ஆக மிஞ்சினால் ஒரு அறிக்கையை மனித உரிமைகள் பேரவையிலோ ஐநா பாதுகாப்புச் சபையிலோ சமர்ப்பிக்க முடியும் அவ்வளவு தான்.
இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற இந்தத் துணிச்சலும் பாதுகாப்புச் சபையில் உள்ள சீனா, ரஷ்யா ஆகிய வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளின் பக்கபலமும் தான். இலங்கை எதற்கும் மசியாமல் நின்று பிடிக்கிறது.
இலங்கை அரசுக்கு ஒன்று விளங்கி விட்டது.
உலகைக் கவரும் பெற்றோலிய வளம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அதற்கு நிகரான இடஅமைவு தனக்குச் சாதகமாக உள்ளது என்பதால் எந்த வல்லரசும் தன்மீது கைவைக்காது என்று இலங்கை உறுதியாக நம்புகிறது.
இத்தகைய பின்னணியில் தான் இந்தியா, அமெரிக்கா, மேற்குலகம் என்று மிரட்டல்கள் வந்தாலும் அசைந்து கொடுக்காமல் நின்று பிடிக்கிறது.
இந்தநிலையில் வரும் ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கப்போகும் இந்த அறிக்கையும் சரி அதன் பின்னர் அமெரிக்கா கொண்டுவரப்போகும் தீர்மானமும் சரி எதைச் சாதிக்கப் போகின்றன என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால் மீண்டும் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் மூலம் இலங்கை அரசாங்கத்தை பணிய வைக்க முடியாத என்பது நவநீதம்பிள்ளைக்கும் சரி, அமெரிக்காவுக்கும் சரி இந்தளவுக்கும் விளங்கியிருக்க வேண்டும்.
உள்நாட்டில் மிகப்பெரிய பலத்துடனும், அரசியல் செல்வாக்குடனும் இருப்பதால், வெளிநாடுகளால் எதுவும் செய்ய முடியாது என்று இலங்கை அரசாங்கம் நினைக்கிறது.
அதேவேளை அடுத்த கட்டமாக ஐநா பாதுகாப்புச் சபைக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றாலும் கூட, அங்கு சீனாவும், ரஷ்யாவும் காப்பாற்றத் தயாராக இருக்கின்றன என்ற மிகப்பெரிய மனோபலம் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.
சிரியாவில் போரும் அழிவுகளும் நீடிப்பதற்கும் இதுவே காரணம்.
என்னதான் ஜெனிவா கூட்டத்தொடரில் கண்டனத் தீர்மானங்கள் கொண்டு வரப்'பட்டாலும் காட்டமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டாலும் அவையெல்லாம் இலங்கை அரசாங்கத்தை அவ்வளவாக அசைக்க முடியாது.
இத்தகைய நிலையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கும் அதேவேளை, கடுமையான முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்குள்ளேயும் தான் மேற்குலகம் சிக்கிக்கொள்ளப் போகிறது.
ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கை அரசுக்க கடுமையான நெருக்கடிகளைக் கொடுப்பதாக இருந்தாலும் கூட மேற்குலகிற்கும் கூட இது சோதனையாகவே அமையப் போகிறது.
ஹரிகரன்

ad

ad