புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013



        துரை மண்ணை ஏறக் குறைய பத்தாண்டு காலம் கிடு கிடுக்கும்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொட்டு சுரேசுக்கு முடிவுரை நாளாக ஜனவரி-31 2013 அமைந்துவிட்டது. யார் இந்த பொட்டு சுரேஷ்?

நக்கீரன்
விருதுநகரில் சாத்தூருக்கு அருகாமையில் இருக்கிற ஒரு குக்கிராமம்தான் சுரேஷ்குமாருக்கு பூர்வீகம். அதிகம் படித்திராத போதிலும் கணக்கு வழக்கு பார்ப்பதில் படு நேர்த்தியான சுரேஷ்குமாருக்கு "காண்ட்ராக்ட்' தொழில் கைகொடுக்க... விருதுநகரில் இருந்து மெல்ல நகர்ந்து தமிழ் வளர்த்த மதுரைபக்கம் வந்தார்.

சாத்தூரில் இருக்கும்போது அ.தி.மு.க. உறுப்பினர் கார்டை பிஸ்னஸ் பாதுகாப்புக்காக வாங்கி வைத்துக் கொண்ட சுரேஷ் குமாருக்கு அந்த கார்டு மதுரையில் பலளளிக்கவில்லை. சுரேஷ் திரும்பிப் பார்த்த அத்தனை வீதியும் தி.மு.க. வீதியாக அழகிரி ஆதரவு போஸ்டர்களாக ஜொலிக்க... "வணிகமூளை' வேகமாக வேலை செய்தது. அதே வேகத்தோடு சுரேஷ்குமார் போய்நின்ற இடம், அழகிரியின் நம்பிக்கைக்குரியவரான தளபதியின் வீடு. அங்கிருந்து தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கிய சுரேஷ்குமார், வெகுவிரைவில் இதே ரூட்டிலேயே தி.மு.க.வின் தென்மண்டல செயலாளரும் மத்திய அமைச்சருமான அழகிரியின் இதயத்தில் இடம் பிடித்தார். முன்னதாக 20 ஆண்டுகளுக்கு மேலாக அழகிரியின் உதவியாளராக இருந்த பாஸ்கர் என்பவரை ஓரங்கட்டி அழகிரியின் வீட்டில் இடம்பிடித்தார். இரண்டாவதாகத்தான் அழகிரியின் இதயத்தில்...

நெற்றியில் செந்தூரப்பொட்டு அதற்கு சப்போர்ட்டாக பெண்கள் வைத்துக் கொள்ளும் சிவப்பு குங்குமப் பொட்டு என்று வலம் வந்த சுரேஷ்குமாரை ஒருமுறை "ஏம்ப்பா... அந்த பொட்டு சுரேஷ்குமார் எங்கேப்பா?' என்று பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கேட்க... அன்றிலிருந்து பொட்டு சுரேஷ்குமார் என்றானார். பெயரிலிருந்து மெல்ல குமார் விடுபட "பொட்டு சுரேஷ்' உருவானார் இப்படி...

எவர் போய் சொன்னாலும் அசைந்து கொடுக்க மாட்டார் இந்த விஷயத்தில்... அஞ்சா நெஞ்சன் கேட்க வேண்டு மென்றால் பொட்டு சுரேஷ் மூலமாக போய்ப் பாருங்கள்... என்று "பொட்டு' பற்றிய மதிப் பீடு பவர்ஃபுல்லாக மாவட்டம் முழுவதும் பட்டுத் தெறிக்க...

பொட்டு சுரேசுக்கென்று மதுரையில் தனி சிம்மாசனம் உருவானது.


அதிகார பலமுள்ள அழகிரியின் பெயரைப் பயன்படுத்தி விரும்பியவரை விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் செய்வது தொடங்கி... உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டு "போஸ்டிங்' போடுவதில் சீனியர்களை ஓரங் கட்டி ஒரு தனிக்காட்டு ராஜா வாக பொட்டு சுரேஷ் வலம் வந்தார்.

"நான் படிச்சது எட்டாவது வரைக்கும்தான்' என்று பலமுறை ஓப்பனாய் சொல்லியிருக்கும் பொட்டு சுரேசிடம் மெத்தப் படித்த அரசு அதிகாரிகள் முதல், அதையும் தாண்டிய நிலையி லுள்ளவர்கள் வரை சரணா கதியில் கிடந்தனர்.

ஊரே பொட்டு சுரேஷை பார்த்து நடுங்கினாலும் பொட்டு சுரேஷை நடுங்க வைத்தது அதே மதுரையின் அட்டாக் பாண்டி. கட்சி நடத்திய போராட்டங்கள் ஒருசிலவற்றில் சிறை சென்று திரும்பிய பொட்டு சுரேஷ், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த பீரியடில் குண்டாசில் "உள்ளே' இருந்தபோதுதான் "அட்டாக் பாண்டி' பற்றிய தன் பயத்தை முதன்முதலில் சிறைத் தோழர்களிடம் விவரித்திருக்கிறார். அதே பயத்தில்தான், உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம். போதும் இதுவரை சம்பாதித்தது என்று ரொம்பவும் பவ்யமாக ஏரியாவில் தன்னுடைய ஸ்டைலை மாற்றியிருக்கிறார் பொட்டு. ஆனாலும் பலனில்லை. மொத்த எதிர்ப்புகளும், தொழில் போட்டியும், அரசியல் விவகாரமும் மும்முனைத் தாக்குதலை தொடுக்க அதிலிருந்து தப்பிக்க முடியாமல் பரிதாபமாய் கொல்லப்பட்டிருக்கிறார் பொட்டு. நாம் தொலைபேசியில் பொட்டு சுரேசின் அண்ணன் அசோகனிடம் கேட்டபோது, ""என் தம்பியின் மரணத்துக்கு அரசியலும், தொழில்போட்டியும் தான் காரணம்'' என்று சொல்லி கதறி அழுதார்.

எப்படி நடந்தது சம்பவம்... 31-ந்தேதி இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து பொட்டு சுரேஷ் வெளியே புறப்பட்டார். அழகிரி வீட்டைத் தொடுகிற சத்யசாய் நகர் அருகே பொட்டு சுரேஷ் கார் வர... ஒரு மோட்டார் சைக்கிள் அந்த கார் மீது செயற்கையாய் மோத "பொட்டு' என்னவென்று கவனிக்க காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் டிரைவர் ரமேஷிடம். கார் நிறுத்தப்பட்ட மறுநிமிடம் அருகில் வந்த டாடா ஏஸ் குட்டி யானையிலிருந்து குதித்த கும்பல் பொட்டுவை வெட்டிக் கொன்று பொட்டுவின் இல்லத்துப் பொட்டை அழித்துவிட்டு அங்கிருந்து சென்றது...

மேம்பாலப் பணி நடப்பதால் வழக்கமான ரூட்டில் போகாமல் பாதை மாற்றி முருகன் கோயில் சந்து வழியாக சென்றபோதுதான் மரணம் தேடி வந்திருக்கிறது. 27 வெட்டுக் களுடன் சம்பவ இடத்திலேயே உயிரை விட்டிருக்கிறார் பொட்டு.

பிள்ளைமார் சமூகத்தவரான பொட்டு தேவரின மக்களை அழகிரியின் நெருக்கத்தில் இருந்து பிரித்து தன் இனத்தை பரவ லாக உள்ளே கொண்டு வந்ததும் உச்சகட்ட வெறுப்பை உள் கட்சியில் தேடிக் கொடுத்தது என்கிறார்கள் மதுரைவாசிகள்.

போலீஸ் என்ன சொல்லப் போகிறதோ...

ad

ad