புதன், பிப்ரவரி 27, 2013பாலசந்திரனிடம் நடத்தப்பட்ட கடைசி விசாரணை

  இறுதிகட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளன
. பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும் இந்த டி.வி.தான் வெளியிட்டது. 

‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.

 பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?
பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.
உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்களை எடுத்த இரண்டு சிங்களப்படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்பட்டவை. அவர்கள் இருவரும் 53ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.
எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் ரகசியமாக எடுத்தவைதான்.
இறுதிக்கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
2009 மே மாதம் 18-ந் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் ராணுவம் கொளுத்தியது. அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்திருக்கிறார். காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53ம் படையில் சரணடைந்தனர்.
மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர். சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.
கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கிறார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பிவிட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்து விடலாம். எல்லோரையும்போல அவனையும் கொன்று விடலாம்’ என்று கோத்த பாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்.
அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவதும்தான் அந்த படைப்பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்று விட்டனர்.
பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.
பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?
பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும் போது இடையில் அம்மாவைக் காணோம். அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டியபோதுகூட, தன்னைச் சுடப்போசிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.
வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?
அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத் தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை. இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை.