புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013

இந்திய நாடாளுமன்ற மேலவையை கலக்கிய சிறிலங்கா விவகாரம் – உரைகளின் தொகுப்பு
புதினப்பலகை 
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் சிறிலங்கா தொடர்பாக, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் கொண்டு வந்த கவனஈர்ப்புத் தீர்மானம், இன்று இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூடாக இடம்பெற்ற இந்த விவாதத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு -

அதிமுக உறுப்பினர். மைத்ரேயன்: 
சபையில் வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கை கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஸ்ணா என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறது.

சில புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன், சம உரிமையுடன், சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு.

ஆனால் சிறிலங்கா தமிழர் பிரச்சினையின் அடிப்படையை அதன் மூலம் என்ன என்பதை இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள் காரணம் அல்ல.

அந்த நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலாச்சார இனப்படுகொலை தான் காரணம்.

அமைதிவழிப் போராட்டங்களை சிறிலங்கா அரசு ஒடுக்கியதாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது.

அதுவே அரசியல் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

சிறிலங்கா ஒரு நட்பு அல்ல. அது ஒரு எதிரி நாடு.

இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சரால் வழிநடத்தப்படவில்லை.

கொள்கை வகுப்பாளர்களால் நடத்தப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது சிறிலங்கா தமிழர் நலன் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

பாஜக உறுப்பினர் வெங்கய்ய நாயுடு:

12 வயது சிறுவனை சிறிலங்கா இராணுவம் பிடித்து வைத்துக் கொன்றது மனிதாபிமானமற்றது.

புலிகளின் நடவடிக்கையை காரணம் காட்டி சிறிலங்கா இராணுவத்தின் செயலை நியாயப்படுத்த முடியாது.

சிறிலங்காவில் நடப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது சரியா?

சிறிலங்கா மீது செல்வாக்கை செலுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.

சிறிலங்காவுக்கு அமைதிப்படையை அனுப்பியது இந்தியா.

போரின்போது இராணுவ உதவியும் சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டது.

இராணுவ உதவியை பெறும் நாட்டை தட்டிக்கேட்க முடியாது என்பதை ஏற்க முடியாது.

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.

சிவசேனா உறுப்பினர் சஞ்சய் ராவுத்:

ஈழத்தமிழர்களை பாதுகாக்க அன்றே குரல் கொடுத்தவர் பால் தாக்கரே.

ஈழத்தமிழர்களுக்காக தமிழ்“நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே குரல் கொடுக்க வேண்டும்.

சிறுவன் பாலசந்திரன் கொல்லப்பட்ட விடயத்தில் இந்திய அரசின் பதில் என்ன?

குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா அதிபருக்கு செங்கம்பள வரவேற்பு அளிப்பது ஏன்?

அமைதிப்படையை அனுப்பி தவறு செய்த இந்திய அரசு, அதற்கு பரிகாரம் தேட வேண்டியது அவசியம்.

காங்கிரஸ் உறுப்பினர் ஞானதேசிகன்:

"சிறிலங்கா தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சிறிலங்காவில் சீனாவின் நடவடிக்கை காரணமாகவே இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுகிறது.

போரின் கடைசிக் கட்டத்தில் சிறிலங்கா ராணுவம் அட்டூழியம் செய்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

திமுக உறுப்பினர் திருச்சி சிவா:

தமது சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்யும் ஒரு மனிதாபிமானமற்ற நாட்டுடன் இந்தியா உறவு வைத்திருக்கிறது.

சிறிலங்கா தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியல்திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.

அங்கு என்ன நடக்கிறது என்பதே வெளிவிவகார அமைச்சருக்கு தெரியவில்லை.

அண்மையில் தமிழர்களுக்கு சுயாட்சி இல்லை என்று அறிவித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டார் என்பதற்காக தலைமை நீதிபதியை தூக்கி எறிந்தவர் ராஜபக்ச.

அந்த நாட்டை இன்னமும் நட்பு நாடு என்கிறீர்கள், சிறிலங்கா தமிழர் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது என்கிறீர்கள், அந்த நிதி தமிழருக்காகத் தான் செலவிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகில் எங்கெங்கோ மனிதஉரிமைகள் பாதிக்கப்படும் போதெல்லாம் இந்தியாவின் குரல் கேட்கிறது.

ஆனால் சிறிலங்கா தமிழர் விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் குரல் ஏன் கேட்கவில்லை?

சிறிலங்காவை தொடர்ந்து இந்தியா ஆதரிக்கிறது,

சிறிலங்கா வேண்டுமா அல்லது இந்தியாவின் தென்பகுதியில் வாழும் மக்கள் வேண்டுமா- யாருடன் நட்புறவு வேண்டும் என்று இந்திய மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும்.

சிறிலங்கா வெளிநாடு என்றால், எப்படி அமைதிப்படையை அங்கு அனுப்பினீர்கள்?

எப்படி தமிழ் மக்களை அழிக்க உதவினீர்கள்?

இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா: 

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும்.

சிறிலங்காலில் போர் முடிவுற்ற பின்னரும் திட்டமிட்டபடியான தமிழர் இனப்படுகொலை தொடர்கிறது.

ராஜபக்ச தமிழர்களுக்கு சுயாட்சி கிடையாது என்கிறார். ஆனால் நீங்களோ 13-வது அரசியல் திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.

எதற்காக நீங்கள் தமிழர்களை ஏமாற்றுகிறீர்கள்? இந்தியா 13-வது அரசியல்திருத்தம் என்று பேசுவதே ஏமாற்று வேலை.

சிறிலங்காவில் புத்தர் சிரிக்கவில்லை. இரத்தக்கண்ணீர் வடிக்கிறார்.

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. அதை இந்தியா ஆதரிக்கிறது. இது மிகப் பெரிய அவமானமாகும்.

ஈழத் தமிழர்களை கைவிட்டு விட்டது இந்தியா.

இந்திய அரசு சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன்:
‘‘இலங்கைத் தமிழ்மக்களின் அவல நிலை குறித்து தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளும், கோபாவேசமும் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளாலும் முழுமையாக பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஓர் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் இந்த அவை ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து கடந்த மூன்றாண்டுகளாக இங்கே உரையாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது பாலச்சந்திரனின் புகைப்படத்தை தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்த்தோம். மிகக் கொடூரமான கொலை. தொலைக்காட்சிகளில் இதனைப் பார்த்த மக்கள் கதறி அழுதார்கள். பார்க்கும்போதே அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடின.

இலங்கையை நம்முடைய நட்பு நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இதே உறவினை நாம் அவர்களுடன் தொடர வேண்டும்தான். இதுதான் நம் நிலைப்பாடும் ஆகும். இலங்கையுடனான நம் உறவினை வெட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

ஆனால் அதே சமயத்தில் இலங்கை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை. ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமல்படுத்த இலங்கை மறுக்கிறது. அதைத் தட்டிக்கேட்க ஐமுகூ அரசு ஏன் தயங்குகிறது? இதனால் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது.

இந்த அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்கிறது. ஏன் உங்களால் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியவில்லை? இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வலுவாக தலையிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை மீது ஓர் அரசியல் தீர்வுக்கு வர, தன் ராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்தி, இலங்கை அரசை வலுவாக நிர்ப்பந்தத்திட வேண்டும்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசு, இலங்கையின் வட பகுதியில் யுத்தம் நடைபெற்ற சமயத்தில் அங்கே நடைபெற்ற அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறித்து ஒரு சுயேச்சையான, உயர்மட்ட, நம்பிக்கைக்குரிய விசாணையைக் கோர வேண்டும்."

ad

ad