புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013





          சில ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பு, திருமணத்திற்கு அப்பாற் பட்ட ஆண்-பெண் உறவுகள் பற்றி கூறிய சில கருத்துக்களுக்காக இங்குள்ள சில அரசியல் இயக்கங்கள் அவர்  தமிழ்ப் பண்பாட்டின் எதிரி என்று கூறி கடுமையாகத் தாக்கியதுபோது குஷ்புவை உறுதியாக ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். போகிற போக்கில் சொன்ன ஒரு கருத்திற்காக அவரது படத்தை செருப்பால் அடித்தார்கள். அவரது வீட்டின் முன் விளக்குமாறோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஊர்ஊராக வழக்குப் போட்டு அலைக்கழித்தார்கள். தமிழ்நாட்டில் கலாச்சார பாசிச சக்திகள் வளர ஆரம்பித்துவிட்டன என்பதன் முதல் அடையாளமே குஷ்பு விற்கு எதிரான அந்த தாக்குதல்கள்தான். அன்று தொடங்கிய இந்த வெறியாட்டம் இன்று காதலை தடை செய்வது, சினிமாவை தடை செய்வது என்று என்னென்ன வடிவமெல்லாமோ எடுத்துவிட்டது. இந்த அபாயத்தை அன்றே உணர்ந்த சிலர் இந்த போலி தமிழ்ப் பண்பாட்டுவாதிகளை கடுமையாக எதிர்த்தோம்.

குஷ்புவின் மீது நடத்தப்பட்ட இந்த மோசமான தாக்குதல் ஒரு நடிகை என்ற நிலையிலிருந்து அரசியல் ரீதியான ஈடுபாடுகளை அவருக்கு உருவாக்கத் தொடங்கியது. முன்னர் அ.தி.மு.க.வுடன் அனுசரணையான நிலையில் இருந்த அவர் பின்னர் தி.மு.க.வில் இணைந்து தன்னுடைய செல்வாக்கினை படிப்படியாக வளர்த்துக்கொண்டார். பொதுவாக சினிமா நடிகர் கள் தேர்தல் காலங்களில் கூட்டம் கூட்டுவதற்குப் பயன்படு வார்கள் என்பதால் அவர்கள் எந்த அரசியல் கட்சிகளுக்குள்ளும் நுழைவதில் எந்தத் தடையும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே இவ்வாறு அவ்வப்போது நடிகர், நடிகைகளின் புகழ் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்கின்றன. இதில் அவர்களுக்கு பகோடா காதர் தொடங்கி சிம்ரன் வரை எந்த பாரபட்சமும் இல்லை. இதில் சிலர் தேர்தல்கால தற்காலிக ஆதாயங்களுடன் தங்கள் வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். வடிவேல் போன்றவர்கள் இந்த அரசியல் சூதாட்டத்தில் சிக்கி தங்கள் தொழிலையே இழந்த அவலமும் நமக்குத் தெரியும். ஆனால் குஷ்பு போன்ற வெகு சிலரே சினிமா வெளிச்சத்தை அரசியல் வெளிச்சமாக மாற்றி அதிகாரத்திற்கான பயணத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். இதில் கட்சிக்குள் இருக்கும் பல்வேறு அதிகார மையங்களுக்கு இடையே பிரச் சினைகளை உருவாக்குகிறது என்றால் கட்சிக்கு வெளியே அவர் பிரச்சினைக்குரிய ஒரு மனிதராக தொடர்ந்து மாற்றப்படுகிறார்.

சமீபத்தில் தெய்வ உருவப் படங்கள் பொறித்த சேலையை அணிந்து வந்தார் என்று சில இந்து அமைப்புகள் அவரைக் கடுமையாகத் தாக்கின. கழுத்தில் அணியும் டாலரில் தொடங்கி தீபாவளி அன்று வெடித்து தீர்க்கும் பட்டாசுகள் வரை எங்கு வேண்டுமானாலும் தெய்வப் படங்கள் இருக்கலாம். ஆனால் குஷ்பு அணியும் ஒரு சேலையின் பார்டரில் இருக்கக்கூடாதாம். மேலும் அந்த சேலை ஏதோ குஷ்புவுக்காகப் பிரத்யேகமாக தயார் செய் யப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை அந்த அமைப்புகள் உருவாக் கின. ஆனால் அதுபோன்ற ஆடைகள் எல்லா இடத்திலும் தாராள மாகக் கிடைக்கின்றன என்பது போன்ற உண்மைகள் மறைக்கப் பட்டு குஷ்புவை வைத்து ஒரு மலிவான அடையாள அரசியல் செய்யப்பட்டது.

குஷ்புவைப் பற்றிய சமீபத்திய இன்னொரு சர்ச்சை ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தது. அவர் ஸ்டாலினின் தலைமையை ஏற்காமல் பேட்டி அளித்தார் என்பதுதான் அது. இன்று தி.மு.க. வில் வலுவான முதன்மையான தலைவராக உருவாகி வரும் ஸ்டாலினுக்கு எதிராக அப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்க குஷ்புவுக்கு ஒருபோதும் துணிச்சல் வராது. அப்படிச் சொல்லி தனது அரசியல் எதிர்காலத்தை பலவீனப்படுத்திக்கொள்ள அவர் விரும்பவும் மாட்டார். ஆனால் குஷ்பு போன்ற வளர்ந்து வரும் அரசியல் தலைவர்கள்  தி.மு.க.விற்குள் கலைஞரின் வாரிசுகளுக்கு இடையே நிலவும் பனிப்போரில் எந்த தரப்பையும் சாராத ஒரு சம நிலையை, நடுநிலையைப் பேண முற்படு கிறார்கள். அதனால்தான் கலைஞரே தலைவர், ’பொதுக்குழுவே முடிவு செய்யும்’ என்பது போன்ற வாக்கியங்களை அடிக்கடி பயன் படுத்த வேண்டியதாகிறது. ஆனால் சிலசமயம் ஊடகங்களில் இதுபோன்ற சமாளிப்புகளில் ஏதேனும் ஒரு வாக்கியம் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்போது அது சம்பந்தப்பட்ட வர்களுக்கு சிக்கலில் முடிகிறது.


குஷ்புவும் அப்படித்தான் இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் மீது செருப்பு வீச்சு, வீட்டின் மீது கல்லெறிதல் போன்ற நாடகங்கள் அரங்கேறின. ஸ்டாலி னுக்கு ஆதரவாகச் செய்யப்பட்டதாகச் சொல் லப்பட்ட இந்தச் செயல்பாடுகள் உண்மையில் ஸ்டாலினின் இயல்புகளுக்கு எதிரானது. அவர் இதுபோன்ற செயல்பாடுகளை தனது அரசியல் நலனுக்காக ஒருபோதும் தூண்டியவர் அல்ல. மேலும் அவர் குஷ்புவை தி.மு.க.வில் ஒரு அரசியல் சக்தியாகப் பொருட்படுத்தி இந்தத் தாக்குதலை ஆதரிப்பார் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கட்சிக்குள் ஸ்டாலின் செல்வாக்கின் முன் குஷ்பு எந்தவிதத்திலும் பொருட்படுத்தக்கூடியவரும் அல்ல. ஆனால் சிலரது பைத்தியக்காரத்தனமான எதிர்வினை யால் தி.மு.க.விற்குள் ஏதோ குஷ்புவை வைத்து மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் நடப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. எந்த அரசியல் அடித்தளமும் இல்லாத குஷ்புவை ஸ்டாலினுக்கு எதிரானவர் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது உண்மையில் தி.மு.க.வையும் ஸ்டாலினையும் அவமானப் படுத்த விரும்புகிற ஒரு முயற்சியே. ஆனால் குஷ்புவை முன்வைத்து ஸ்டாலினை அவமானப்படுத்துகிற இந்த முயற்சி இப்போது கலைஞர்வரை வந்துவிட்டது. ஒரு பத்திரிகை கலைஞரையும் குஷ்புவையும் வைத்து வெளியிட்ட “"இன்னொரு மணியம்மை?'’’ என்கிற கட்டுரை தி.மு.கவினரை மட்டுமல்ல தி.மு.கவை கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், ஜனநாயக சக்திகளிடமும் கூட கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக இதழியல் வரலாற்றில் ஒரு இதழ் இதுபோன்ற ஒரு அவமானகரமான கட்டுரையை இதற்குமுன் வெளியிட்டிருக்குமா என்பது சந்தேகமே. பெரியார் தனது வயோதிக காலத்தில் தன்னிடம் உதவியாளராக இருந்த மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இதற்கு சமமாக கலைஞரையும் குஷ்புவையும் சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையில் "பெரியார்' படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்புவின் கதாபாத்திரம் கிராபிக்ஸ் செய்யப்பட்டு கலைஞரின் படத்துடன் ஒட்டப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் தன் கட்சிக்குள் நிகழும் மோதல்களையும் முரண்பாடுகளையும் தீர்த்து வைப்பது அந்தக் கட்சியின் தலைவருடைய கடமை. அந்த வகையில் அவர் குஷ்புவை தாக்கியவர்களைக் கண்டிப்பது இயல்பான ஒன்று. எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் இதையேதான் செய்திருப்பார். ஆனால் அதை இவ்வளவு கேவலமாக, கொச்சையாக சித்தரிப்ப தன் வாயிலாக இலட்சோப இலட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக் கத்தின் தலைவர் இழிவுபடுத்தப் பட்டிருக்கிறார். தி.மு.க. அதிகாரத் தில் இருந்தபோது அதனை அண்டிப் பிழைத்த சில பத்திரிகை கள் இன்று அது அதிகாரத்தை இழந்து நிற்கும்போது யாரோ சிலருக்கு சேவகம் செய்வதற்காக எத்தகைய கேவலமான தாக்கு தலில் இறங்கிவிட்டன என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. 

திருமணமாகி, குடும்ப வாழ்க்கை யில் இருக்கும் ஒருவரை இன்னொருவரின் மனைவி என்ற  நிலைக்குப் பகிரங்கமாக எழுதத் தயாராக இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடும், தனித்து வாழும் பெண்களைப் பற்றி என்னவெல்லாம் சொல்வார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இதுபோன்ற தனிப்பட்ட பாலியல் அவதூறுகள் தமிழகத்தில் எப்போதோ தொடங்கிவிட்டன. 

பொதுவாக அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொள்வதும் கட்சிப் பேச்சாளர்கள் அந்தரங்கமான இழிசொற்களைப் பயன்படுத்துவதும் தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒன்றுதான். ஆனால் பத்திரிகைகள் இதைவிட மேலான ஒரு அரசியல் நாகரிகம் கொண்டவை என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. அந்த நாகரிகம்  இன்று முற்றாகத் துடைத்து எறியப்பட்டுவிட்டது. இது தமிழ் இதழியல் உலகிற்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவமானம். 

எல்லாவற்றையும் விட பொது வாழ்க்கைக்கு, அரசியலுக்கு வரும் பெண்களின்மீது தொடுக்கப்பட்ட அவமானகரமான தாக்குதலாக இதைக் கருதுகிறேன். இதுபோன்ற சித்தரிப்புகள் அரசியலுக்கு வரும் பெண்கள் அனைவரையும் பற்றி மிக மோசமான கருத் தாக்கத்தை பொதுமக்கள் மத்தியில் விதைக்கக்கூடியது. பெண்கள் பாலியல் உறவுகளின் வழியாகத்தான் அரசியல் அதிகாரத்தை அடைகின்றனர் என்பதுதான் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் செய்தி. இது அரசியல் வாழ்க்கையிலிருந்து பெண்களை அவமானப்படுத்தி வெளியேற்ற விரும்புகிற ஒரு முயற்சி. அரசியலில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் அந்தக் கட்சியின் பொறுப்பில் உள்ள ஒரு ஆணோடு சேர்த்து இத்தகைய ஒரு அவதூறைப்  பரப்ப இது துணிச்சலைக் கொடுக் கும். 

இதுபோன்ற அவதூறுகளை முதலில் எதிர்க்க வேண்டியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். ஒரு பெண் என்ற வகை யிலும் கடும் போராட்டங்களின் வழியே அரசியல் அதிகாரத்திற்கு வந்தவர் என்ற முறையிலும் கட்சிப் பகைமையைத் தாண்டி குஷ்புவின் மீதான இந்த அந்தரங்கமான தாக்குதலை அவர் கண்டிக்க வேண்டும். பெண்கள் இந்தியாவில் அரசியலில் தலையெடுப்பது இந்தியாவில் அவ்வளவு எளி தானதல்ல. ஒவ்வொரு நிலை யிலும் அவர்கள் கடும் சவால் களை சந்தித்தே தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள் கிறார்கள்.

இதுபோன்ற அவதூறு களின் வழியே  பொதுவாழ்வில் பெண்களின் இடம் பெரிதும் சிறுமைப்படுத்தப்படுகிறது. 

"மாட்டிற்கு சொறிந்து கொடு... மனிதனுக்குச் சொறிந்து கொடுக்காதே...'’என்று எழுதி னார் சுந்தர ராமசாமி. 

அதிகாரத்தின் அற்ப ஆதாயங்களுக்காக அடிப்படை நெறிமுறைகளை கைவிடத் தயாராக இருப்பவர்கள் ஒரு பண்பாட்டையே அவமதிக்கத் துணிகிறார்கள். இதில் அவர்கள் அடையப் போவதைவிட இழக்கப் போவதே அதிகம்.

ad

ad