புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2013





          ந்தியாவுக்கு இப்போது ‘தூக்குத் தண்டனைக் காலம்.’ 

அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட கயிற்றின் முடிச்சை அவிழ்க்கும் முன்பாக வீரப்பன் கூட்டாளிகள் எனப்படும் ஞானப்பிரகாசம், சைமன்,  மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்குபேரின் கருணை மனுவை கடந்த 11-ந் தேதி நிராகரித்திருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. nakkeranஇவர்களின் தண்டனை 14 நாட்களுக்குள் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கிற பெல்காம் சிறையி லேயே நிறைவேற்றப்படும் என கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சுகந்தீப் அறிவித்திருக் கிறார். தூக்கில் தொங்கக் காத்திருக்கும் ஞானப்பிர காசம், சைமன், பிலவேந்திரன் ஆகியோர் கர்நாடக மாநிலம் கொல்லேகால் தாலுகாவைச் சேர்ந்த தமிழர் கள். மீசை மாதையனோ சேலம் மாவட்ட கொளத்தூரையடுத்த கோட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர். தண்டனை குறித்து இவர்களின் குடும்பத் தினரின் மனநிலை யை அறிய அவர் களைத் தேடிப் புறப்பட்டோம்.


முதலில் நாம் போனது கர்நாடக மாநிலம் கொல்லே கால் தாலுகாவில் இருக்கும் சந்தன பாளையம் கிராமத் திற்கு. இங்குதான் ஞானப்பிரகாசத்தின் வீடு இருக்கிறது என்றார்கள். மரங் கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த வீடு துயரத்தில் மிதந்துகொண்டிருந்தது. ஞானப்பிர காசத்தின் மனைவி செல்வமேரியோ கதறலலோடு ’""என் வீட்டுக்காரர் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். அவர் கர்த்தர் மேல் அதீத பக்தி கொண்டவர். நிரபராதியான அவர், 19 வருஷமா குடும்பத்தைப் பிரிஞ்சி ஜெயில்ல கிடக்கார். அவரைப்போய் இப்ப தூக்கில் போடப் போறோம்ன்னு சொல்றாங்களே... இது நியா யமா?''’என தலையில் அடித்துக்கொண்டு கதறினார். நாம் அங்கு இருக்கும் போதே அவரது சொந்த பந்தங்களும் அக்கம்பக்கத்தினரும் துக்கம் விசாரிப்பதுபோல் வந்துகொண்டிருந்தனர். ஞானப்பிரகாசத்திற்கு அருள்தாஸ் என்ற மகனும் பெமினாமேரி, பரிமளாதேவி என்ற மகள்களும் இருக்கிறார்கள்.

அவர்களில் அருள்தாஸ் ‘""எங்க அப்பா 90-ஆம் வருசம் ஒரேதடவை வீரப்பனைக் காட் டில் பார்த்திருக் காராம். அவ் வளவுதான். அவர் வீரப்பனோடு தங் கியதே இல்லை. இவங்க வழக்கில் சொல்லும் சம் பவம் நடந்தப்ப எங்க அப்பா தோமையார் பாளையம் சர்ச்சில் வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அந்த சர்ச் ஃபாதரை சாட்சியா விசாரிச்சிருந்தாலே எங்க அப்பா நிரபராதின்னு தெரிஞ்சிருக்கும். அநியாயமா எங்க அப்பாவை இந்தக் கேஸில் சிக்கவச்சி, இப்ப தூக்குக் கயிறுவரை கொண்டுவந்துட்டாங்க''’ என்றார் கலக்கமாய். ஞானப்பிரகாசத்தின் மகள்கள் சோகத்தில் சுருண்டு படுத்திருந்தார்கள். 

அங்கிருந்து பிலவேந்திரனின் குடும்பத்தினரைப் பார்க்க மாட்டள்ளி கிராமத்துக்குப் போனோம். அங்கும் சோகம் சூழ்ந்திருந்தது. கண்ணீரும் கம்பலையுமாக இருந்த பிலவேந்திரனின் மனைவி கமலாமேரி ‘""எங்க வீட்டுக்காரர் வசதியா வாழ்ந்தவர். காங்கிரஸ்ன்னா அவருக்கு உயிர். அந்த காங்கிரஸ் அரசாங்கமே அவர் உயிரை எடுக்கத் துடிக்கிது. அவர் வழக்குக்காகவே எல்லாத்தையும் வித்து செலவழிச்சும், அவரை மீட்க முடியாம தவிக்கிறோம். இனி என்ன பண்ணப்போறோம்ன்னு தெரியலையே''’என்றார் குரலுடைந்து.
இளையமகள் ஜோசபின் பாஸ்கோ மேரியோ ""எங்க அப்பா நிரபராதிங்க. அந்த தைரியத்தில்தான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயுள்தண்டனையை   ரத்து பண்ணுங்கனு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார். ஆனா இப்படி மரண தண்டனையா உயர்த்திக்  கொடுப்பாங்கன்னு தெரியாமப்போச்சு. இனி எங்க அப்பாவை பார்க்க முடியுமான்னு தெரியலையே''’என்றபடி தேம்பினார். 

சைமனின் குடும்பத்தைத் தேடி ஒட்டர்தொட்டி கிராமத் துக்குச் சென்றோம். அவரது அண்ணன் ஜெயராஜைப் பார்த்தோம். முகத்தில் துயரமான துயரம். ‘""என் தம்பிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. குவாரி வேலைக்குப் போய்க்கிட்டிருந்தவனை இழுத்துட்டுப் போனாங்க. அவன் நிரபராதிங்க. அவனை ஒரு அரசாங்கமே கொலை பண்ண லாமா?''’என்றார். சைமனின் தங்கை ஜெய மேரியோ ‘""என் அண்ணன் அப்பாவிங்க. அவரை விட்ருவாங்களா?''’ என்றார் பரிதவிப்போடு.

அடுத்து மீசை மாதைய னின் குடும்பத்தை சந்திக்க சேலம் மாவட்ட கோட்ட மடுவு கிராமத்துக்குப் போனோம். கரட்டுக் காட்டில் குடிசை வீடு இருந்தது. அங்கு வசிக்கும் அவரது மனைவி தங்கம்மாள் ‘""பெல்காம் ஜெயிலு ரொம்ப தூரத்தில் இருப்பதால் அவரை அடிக்கடி பார்க்கப்போக முடியலை. கடைசியா என் வீட்டுக்காரரை ரெண்டுவருசத்துக்கு முன்ன பார்த்தேன். "தைரியமா இரு. எப்படியும் வந்துடுவேன். அதுவரை பிள்ளைகளைப் பத்திரமா பாத்துக்க'ன்னு சொன்னார். அவரைத்தான் எங்களால் பத்திரப்படுத்த முடியாது போலிருக்கு'' என்றபடி முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதார். மாதையனின் தம்பி மகள் தீபாவோ ""எங்கப்பா முனியனையும் எங்க சித்தப்பா வெள்ளையனையும், மாதையன் பெரியப்பா மகன் மாதேஷையும் கர்நாடக போலீஸ் பிடிச்சிக்கிட்டுப்போய் கொன் னுடுச்சு. இப்படி மூணு உயிரை எடுத்தும் அவங்களுக்கு உசுர் பசி போகலை. எங்க குடும்பத்தில் மிச்சமிருக்கும் ஆம்பிளையான எங்க பெரியப்பாவையும் இப்ப தூக்கு மூலம் கொல்லப்போறாங்க. பேசாம எங்களை குடும்பத்தோட கவர்மெண்ட் கொல்லட்டும். நிம்மதியாப்போய்ச் சேர்றோம்''’என்று கதறத்தொடங்கினார். 


ஊர்க்காரரான அருட்தந்தை சந்தியாகு ‘""கடைசியா முஸ்லிம்களைத் தூக்கில் போட்டாங்க. அடுத்து இந்த நாலு பேரைப் போடப்போறாங்க. இதில் மூன்று பேர் கிறிஸ்துவர்கள். கொலையில் சமத்துவத்தை இந்த அரசு கடைப்பிடிக்கிது போலிருக்கு'' என்றார் வருத்தமாய்.

கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் இந்த நால்வரின் வழக்குதான் என்ன? வழக்கைப் பார்க்கும் முன் வீரப்பன் தொடர்பான சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

93 மார்ச்சில் தர்மபுரி வனப்பகுதியில் இருந்து நெருப்பூர் வனப்பகுதிக்கு தனது சகாக்களோடு போனான் வீரப்பன். அப்போது வழியில் நாகமறை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் தனக்கு அறிமுகமான பூசாரி என்ற விவசாயியைப் பார்த்து வீரப்பன் நலம் விசாரிக்க, ’இளநி சாப்பிட்டுவிட்டுப் போ’ என 15 இளநீரை வெட்டிக்கொடுத் திருக்கிறார் பூசாரி. இதை சின்னப்பொன்னு என்கிற போலீஸ் இன்பார்மர், அப் போது அதிரடிப்படை சிறப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பி.கோபாலகிருஷ்ணனுக்குத் தகவல் கொடுக்க, அன்று இரவே பூசாரி தூக்கப்பட்டார். மறுநாள் அதே நாகமறை கிராமம் வழியாக திரும்பிய வீரப்பன், பூசாரி வீட்டுக்கு போனபோது, அவரது மனைவி நடந்ததைச் சொல்லி கதறினார். 

உடனே அதே வீட்டில் 3 மணி நேரம் ஹால்ட் அடித்த வீரப்பன், தன் ஆட்களை கன்னட போலீஸ் போல இன்பார்மர் சின்னப்பொன்னு வீட்டிற்கு அனுப்பினான். போனவர்கள், "என்னடா வீரப்பனுக்கு நீ உதவி செய்றியா? வாடா' என்று சின்னபொன்னு வை இழுக்க, "நான் வீரப்பன் ஆள் இல்லை. எஸ்.பி .கோபாலகிருஷ்ணன் ஆள். இப்பக்கூட வீரப்பனுக்கு இளநீர் கொடுத்த பூசாரியைக் காட்டிக்கொடுத் தேன். அவனை அடிச்சே கொன்னு ஆற்றில் வீசிட்டாங்க' என்றார் சின்னப்பொன்னு. இன்பார்மர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவரையும் அவர் மனைவி மற்றும் மூன்று மகன்களையும் அங்கேயே கொன்றுவிட்டுக் கிளம்பியது வீரப்பன் கும்பல். 

அடுத்து எஸ்.பி.கோபாலகிருஷ்ணனைக் குறிவைத்தான் வீரப்பன். அதற்கு முன் அவரைக் கோபப்படுத்த அதே மாதம் 6-ந் தேதி இரவு கோட்டையூரில் மளிகைக் கடைவைத்திருந்த இன்பார்மர் அய்யண்ணனைக் காலி செய்ய, தன் தம்பி அர்ச்சுனன் தலைமையிலான டீமை அனுப்பினான் வீரப்பன். அந்த டீம் போய் மளிகைப் பொருட்களை அங்கே வாங்கிவிட்டு ஊருக்கு வெளியே காத் திருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, அய்யண் ணன் போலீஸுக்குத் தகவல் சொல்ல சைக்கிளில் கிளம்ப, காத்திருந்த வீரப்பன் டீம் அவரைக் கொன்றது. இரவோடு இரவாக "நீ ஆம்பளையா இருந்தா பாலாறு பகுதிக்கு வா. காத்திருக்கேன்'’ என கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து வீரப்பன் ஒரு பேனரை  ரெடி பண்ணினான். கொளத்தூர் சந்தையில் அதை இரவே கட்ட ஆட்களை அனுப்பினான். ஆனால் அன்று கட்டமுடியவில்லை. அதனால் 8-ந் தேதி நள்ளிரவில் அந்த பேனரைக் கட்டவைத்து விட்டுக் காத்திருந்தான் வீரப்பன்.


9-ந் தேதி இந்த பேனர் விவகாரம் எஸ்.பி. கோபாலகிருஷ்ணனுக்குப் போக அதிரடிப்படையினர், போலீஸ் இன்பார்மர்கள், கர்நாடக அதிரடிப் படையினர் என ஒரு பெரிய டீமோடு பாலாறு நோக்கி ஆவேசமாகப் புறப்பட்டார். அவர் வரவுக்குக் காத்திருந்த வீரப்பன் டீம், ஸ்பாட்டுக்குக் கொஞ்சம் முன்னதாக சுரக்காய்மடு பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துவிட்டுக் காத்திருந்தது. அங்கே எஸ்.பி. டீம் வரும்போது வெடிகளை வெடிக்க வைத்தனர்'' என விவரிக் கிறார்கள் சம்பவத்தை முழுதாக அறிந்தவர்கள். இதில் கர்நாடக அதிரடிப்படைத் தலைவர்,  எஸ்.ஐ. உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் இன்பார்மர்கள் 15 பேரும் சில வனத்துறையினரும் அடக்கம். எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர். 

‘இந்த சம்பவங்களின் அடிப்படையிலும் வேறு சில கொலை வழக்குகளிலும் நான்கு பேருக்கு தூக்குத் தண் டனை வழங்கப்பட்டுள் ளது. ஆனால், மரண தண்டனை கயிற்றை பரிதாபத்தோடு பார்க்கும் நால்வரில் ஒருவரான ஞானப் பிரகாசம் குற்ற சம்பவங்கள் நடந்த காலத்தில், தோமையார் பாளையம் சர்ச்சில் வேலைபார்த்தார் என்ற தகவலின் அடிப்படையில் அப்போதைய சர்ச் பாதிரி யார் பற்றி விசாரித்தோம்.

""அப்ப இருந்த பாதிரியார்வின் சென்ட் டிசோசா, இப்ப கர்நாடக மாநில மத்தூர் சர்ச்சில் பாதிரியாரா இருக்கார்னு கேள்விப்பட்டோம்'' என்றனர் ஏரியாவாசி கள்.

தீவிர முயற்சிக்குப் பின் "093420 55406' என்ற அவரது செல் எண்ணைத் தேடிப் பிடித்து 14-ந்தேதி மாலை 6 மணிக்கு அவரைத் தொடர்பு கொண்டோம்.

பாதிரியார் வின்சென்ட் டிசோசாவோ ""தம்பி, இப்ப எனக்கு 74 வயதாகுது. ஞானப்பிரகாசம் ரொம்ப நல்ல பையன். அவனைத் தூக்கில் போடப் போறாங்கன்னு கேள்விப்பட்டு துடிச்சிப் போயிட்டேன். 93-ல் நான் தோமையார் பாளையம் சர்ச்சுக்கு வந்தேன். நான் வர்றதுக்கு 4 வருடம் முன்னதாகவே ஞானம், அங்க தோட்டக்காரரா இருந்தார். ரொம்ப அமைதியானவர். அந்த சமயத்தில் ஒருநாள் மாதேஸ்வரம் மலையில் இருந்து, அதிரடிப்படைக்காரங்க வந்து, "பாதர், இவரை ஒரு வழக்கில் விசாரிச்சிட்டு, திருப்பி கொண்டு வந்துடுறோம்'னு சொல்லி அழைச்சிக்கிட்டுப் போனாங்க. ஆனா ஞானம் திரும்பலை.

பிறகு ஊர்க்காரரான மகிமைதாசனோட மாதேஸ்வரமலை அதிரடிப்படை முகாமுக்குப் போய் விசாரிச்சேன். நாங்க கூப்பிட்டுட்டுப் போகலைன்னு மறுத்தாங்க. ஒருநாள் முழுக்க விசாரிச்சிப் பார்த்துட்டு, அனூர் ஸ்டேஷனுக்குப் போய் "அதிரடிப்படை கூட்டிட்டுப் போன எங்க தோட்டக்காரர் ஞானப்பிரகாசத்தை காணோம். கண்டுபிடிச்சித்தாங்க'ன்னு புகார் கொடுத்து, அதுக்கு ரிசிப்ட்டும் வாங்கினேன். அடுத்த கொஞ்சநாள்ல நான் மைசூருக்கு டிரான்ஸ்பர் ஆனதால் நிலைமை இப்படி போய்டிச்சி. நான் ஞானப்பிரகாசம் குடும்பத்தையும் வக்கீலையும் சந்திக்கப் போய்க்கிட்டு இருக்கேன். கர்த்தர் மகிமையால் அவரது தூக்கை தடுக்க முயற்சிப் பேன்'' என்றார் உணர்ச்சிவசப்பட்டவராக.

நிரபராதிகள் இப்படித்தான் சட்டத்தின் பெயரால் கொல்லப்படுகிறார்களோ?

-சிவசுப்பிரமணியன், ஜீவா தங்கவேல்

ad

ad