புதன், பிப்ரவரி 27, 2013


இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு செய்யப்படும்!- சல்மான் குர்ஷித்

ஜெனீவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்கும் திட்டத்திருத்தம் நிறைவேற வலியுறுத்தப்பட்டு வருகிறது. இலங்கையை எதிரி நாடாக கருத முடியாது. இவ்வாறு மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியுள்ளார்.
இந்திய பாராளுமன்றத்தில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான ஞானதேசிகன் எம்.பி. பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினார்.  இலங்கையில் சீனாவின் நடவடிக்கை காரணமாகவே இப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும், போரின் கடைசி கட்டத்தில் இராணுவம் அட்டூழியம் செய்ததில் மாற்று கருத்து இல்லை என்றும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்.
இதேபோன்று பல்வேறு தலைவர்கள் இலங்கை பிரச்சினை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்து வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பேசியதாவது:-
இலங்கையில் போர் நடைபெற்ற காலம் மிக மோசமான காலம். அங்கு மனித உரிமை மீறப்படுவது குறித்த விவாதம் நெகிழ வைத்தது. இலங்கைத் தமிழர்களுக்கு ஜனநாயக ரீதியான அதிகாரப் பரவல் அவசியம் என்று உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கைப் பிரச்சினை மொழி ரீதியிலான பிரச்சினை அல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மனித உரிமை மீறல் விசாரணையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று இலங்கையிடம் தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. 13-வது சட்டத்திருத்தத்தை இலங்கை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்தியா வலியறுத்தி வருகிறது.
பாராளுமன்றத்தில் இது தொடர்பாக காரசாரமான விவாதம் நடத்தினாலும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஜனநாயகத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது. இப்போது நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் ஐ.நா. தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும்.
ஜெனீவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்கும் திட்டத்திருத்தம் நிறைவேற வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் பிரிவு இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும்.
இலங்கை பிரச்சினை குறித்து தமிழக மக்கள் தவிர நாட்டு மக்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இப்பிரச்சினையில் இந்தியா பெரியண்ணன் மனப்பான்மையுடன் செயல்படவில்லை, சகோதரனாகத்தான் செயல்படுகிறது. இலங்கையை எதிரி நாடாக கருத முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

சல்மான் குர்ஷித் பதில் திருப்தி இல்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
- See more at: http://tamilwin.com/show-RUmryCRbNYnq6.html#sthash.WtlVGpGV.dpuf