புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013

ஐ.நாவுக்கு இலங்கை ரகசியமான அறிக்கை; பான் கீ மூனிடம் நேரில் வழங்கினார் பாலித
இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் இலங்கை அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் வகையிலும் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவரவுள்ள தீர்மானம் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையிலுமே இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டித் தகவல்கள் தெரிவித்தன.
 
நேற்று முன் தினம் காலை இந்த அறிக்கை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
 
பாலித கொஹன்னவுடன் இணைந்து ஜப்பானிய நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, பங்களாதேஷின் நிரந்தரப் பிரதிநிதி அபுல் கலாம் அப்துல் முமேன், ருமேனியாவின் நிரந்தரப் பிரதிநிதி சிமோனா மிரேலா மிகுலெஸ்கு, நைஜீரியாவின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி உஸ்மான் சர்க்கா ஆகியோரும் ஐ.நா பொதுச்செயலருடனான இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
 
இந்தச் சந்திப்பில், பாக் கீ மூனுடன் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரிகள் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ, ஹிரோகி டென் ஆகியோரும் உடனிருந்தனர்.
 
மூடப்பட்ட அறையில் நடந்த இந்த இரகசியச் சந்திப்புத் தொடர்பான விபரங்கள் ஏதும் பான் கீ மூனின் அதிகாரபூர்வ சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருக்கவில்லை.
சந்திப்புக்கு முன்னதாக, இன்னர்சிற்றி பிரசிடம் கருத்து வெளியிட்ட ஜப்பானியப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, இலங்கை முக்கியமான நாடு என்றும், பான் கீ மூனிடம் தமது அறிக்கையைக் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
அதேவேளை, பான் கீ மூனிடம் இலங்கையின் சார்பில் பாலித கொஹன்ன மற்றும் ஜப்பான், பங்களாதேஷ், ருமேனியா, நைஜீரியா நாடுகளின் பிரதிநிதிகள் கையளித்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பாக தகவல் எதையும் வெளியிட இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம மறுத்துள்ளார்.
 
அதேவேளை, இலங்கை தொடர்பான அறிக்கைகளை, அந்தந்த நாட்டு அரசுகளிடம் வழங்குமாறு வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதுவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 

ad

ad