புதன், பிப்ரவரி 27, 2013


கிறீஸ் மனிதர்கள்!இலங்கையை சில மாதங்களுக்கு முன்னர் பீதியில் உறையவைத்திருந்த மனிதப் பயங்கரம்.

இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்வம் ஒன்றையடுத்து அங்கு மர்ம நபர்கள் நடமாடுவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. அதனையடுத்து அதே நிலை இலங்கையில் பல்வேறு பாகங்களுக்கும் பரவத் தொடங்கியது.


கிறீஸ் மனிதர்கள் பற்றி அறியாதவர்கள் இல்லை எனலாம்.

இது இவ்வாறிருக்க பேஸ்புக் வழியாக கிறீஸ் மனிதர்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கியிருப்பதுதான் புதுக் கதை.
ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்! சமூக வலைத்தளங்களில் இளையோரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது பேஸ்புக். பெரும்பாலான இளைஞர்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இது மாறிவிட்டது. சுருக்கமாகச் சொல்வதானால் பேஸ்புக் இல்லை என்றால் அன்றைய நாளில் சுவாரஷ்யமே இல்லை என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சில விஷமிகள் ‘கிறீஸ் யகா’ (கிறீஸ் மனிதர்கள்) என்ற பெயரில் தமது விளையாட்டுக்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

காமம் கலந்த வார்த்தைகளை மற்றொருவரின் தனிப்பட்ட கணக்குக்கு அனுப்புதல், நிர்வாண தோற்றமுடையோருடைய தோற்றங்களை உண்மை முகங்கொண்டோருக்குப் பொருத்தி புகைப்படமாக வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகளில் இந்த கிறீஸ் மனிதர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

“எனக்கு இப்படிச் செய்வார்கள் என நான் நினைக்கவேயில்லை. யார் என்று தெரிந்தால் கொலை செய்யக் கூடத் தயங்கமாட்டேன்” எனக் கூறுகிறாள் கொழும்பில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் கற்கும் ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இந்தப் பெண்ணுக்கு கிறீஸ் மனிதன் கொடுத்த தொந்தரவை விரிவாக எழுதிவிட முடியாது.

ஆறு மாத காலங்களுக்கு முன்பு கிறீஸ் யகா என்ற பெயரில் நட்பு விண்ணப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தனது நண்பர் கூட்டங்களில் யாராவதுதான் இந்தப் பெயரில் விளையாட்டுக்காக இப்படிச் செய்திருக்கிறார்கள் என் நினைத்து அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் ஆஷா.

யார் நீங்கள்? எங்கு இருக்கிறீர்கள்? விபரம் சொல்லுங்கள்? என்று ஆஷா கேள்விகள் கேட்க, சின்னச் சின்ன குறும்புத்தனமான பதில்களுடன் உறவு தொடர்ந்திருக்கிறது.

தனிப்பட்ட மெசேஜ்களைத் தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கைகளையும் பேஸ்புக்கில் இவர்கள் மேற்கொண்டதில்லை.
இப்படியிருக்கையில் இம்மாத முதல் வாரத்தில் ஒருநாள் இரவுதான் பிரச்சினைக்குரிய அந்த உரையாடல் ஆரம்பமானது.

‘ஹாய் ஆஷா உங்களுக்கு செக்ஸில் ஆர்வம் இல்லையா?’இது அந்த மர்ம கிறீஸ் மனிதரிடமிருந்து கிடைத்த முதல் மெசேஜ்.
இதற்குப் பதில் அனுப்ப விரும்பாத ஆஷா தொடர்பை துண்டித்துக்கொள்வதாகக் தெரிவித்துள்ளார்.

‘கொஞ்சம் பொறு, படம் ஒன்றை அனுப்புகிறேன். பார்த்துவிட்டு முடிவை சொல்’- என அந்த நபரிடமிருந்து மீண்டும் மெசேஜ் வந்த மறு நிமிடம் பார்க்கவே சகிக்க முடியாத அந்தப் படம் ஆஷாவுக்குக் கிடைத்தது.

ஆம்! பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில சஞ்சிகையொன்றுக்கு நடிகையொருவர் கொடுத்த நிர்வாண போஸ் ஒன்றின் தலைப் பகுதியை மாற்றி ஆஷாவின் படம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் கூட எண்ணியிராத கனத்தில் வானமே இடிந்துவிழுந்தாற்போல இருந்தது ஆஷாவுக்கு!

இந்தப் பிரச்சினை ஆஷாவுக்கு முதல் தடவையாக ஏற்பட்ட போதிலும் இளவயதுப் பெண்கள் பலர் கிறீஸ் மனிதர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஷாவைப் போன்று துணிந்து முறைப்பாடு செய்ய முன்வராதவர்கள் பலர் இருக்கிறார்கள்.
கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பல்வேறு பேஸ்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயரில் உருவாக்கப்பட்ட கணக்குகள் நிச்சயமாக நல்ல நோக்கத்துக்காக இல்லை என்பதை அவ்வந்த கணக்குகளுக்குச் சொந்தமான படங்களே வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.

நாம் மேற்சொன்னது ஒரு சம்பவம்தான். இன்னும் பல சம்பவங்கள் இருக்கின்றன.

அநேகமானோருக்கு கிறீஸ் மனிதர்களிடமிருந்து கடுமையான தொனியில் எச்சரிக்கை மடல்கள் கிடைத்திருக்கின்றன.

இரவில் நடமாட வேண்டாம், நான் பின்தொடர்வேன், மரணம் வெகுதூரத்தில் இல்லை, நான் மீண்டும் பிறப்பெடுத்துள்ளேன் போன்ற வசனங்கள் அடங்கியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கணனி அவசர உதவி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரி இணையத்தளத்துக்கு தகவல் தருகையில்,
கிறீஸ் மனிதன் என்ற பிரச்சினை நம் நாட்டில் இருந்த காலகட்டங்களில் இவ்வாறான கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இணையவழிகளில் பெரும் பிரச்சினையாய் இருந்தது. எனினும் நாம் அவ்வாறான பல கணக்குகளை நீக்கினோம். இப்போது மீண்டும் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பாதிக்கப்படும் பலர் முறைப்பாடு செய்யத் தயங்குகிறார்கள் என்பதுதான்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் வெளியிடுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் முறையிட விரும்புவதில்லை. அதேபோன்று வெளிநபர்களுக்கும் சொல்வற்கு கூச்சப்படுகிறார்கள்.

இதனால் இவ்வாறான விஷமிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துச் செல்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு அறியத்தந்தால் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உரிய ஆலோசனைகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் கிறீஸ் மனிதர்கள் குறித்து நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் இவ்வாறு முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதன் நிர்வாகத்துக்கு அறிவிப்பதன் ஊடாக பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.

ஆனால் அவ்வாறு அறிவிப்பதில் தமது விபரங்கள் வெளியிடப்படுமோ எனப் பலர் அஞ்சுகின்றனர். இந்த அச்ச உணர்வைத் தவிர்த்து குற்றச் செயல்கள் புரிவோர் தொடர்பாக உடனடியாக அறிவிப்பதே சாலச் சிறந்ததாகும்.