புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன.

கொழும்பு நகர மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய கட்சிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உடன்பாட்டில் கையெழுத்திட்ட போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் கையெழுத்திடவில்லை.

ஐதேக தலைவர் ரணில் விக்கரமசிங்க, நவசம சமாசக் கட்சியின் விக்கிரமபாகு கருணாரத்ன, ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் மற்றும் ஐக்கிய சோசலிச கூட்டணி, மௌபிம மக்கள் கட்சி, றுகுணு மக்கள் கட்சி, புதிய சிஹல உறுமய, தமிழ் முஸ்லிம் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டணி உடன்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்திடாதது குறித்து, நேற்று கொழும்பு திரும்பிய இரா. சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,

“எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவது குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடும்.

அதன்பின்னரே எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்திடும்.

எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது ஒரு ஆரோக்கியமான விடயம்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு இந்த விடயத்தை ஆராய்ந்து தான் முடிவை எடுக்க வேண்டும்“ என்று தெரிவித்தார்.

தென்னாபிரிக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன், தமிழ்நாடு சென்று விட்டு நேற்று பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு திரும்பியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலர் மாவை சேனாதிராசா ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில், விரைவிலேயே எதிர்கட்சிகளின் கூட்டணி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் என்று தெரிகிறது.

ad

ad