புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். 
கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே,
இம்முறை ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமையில், வெளிவிவகார அமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவே இம்முறை ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. 

தாம் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, அது பற்றி மேலதிக கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார். 

மகிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தோ, அமைச்சர்கள் எவரும் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனரா என்பது குறித்தோ கருத்து எதையும் வெளியிட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. 

மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் தூதுவர் பொறுப்பில் இருந்து சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, நிரந்தரமாகவே நீக்கப்பட்டு விட்டாரா என்பது குறித்தும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட மறுத்துள்ளது. 

அதேவேளை, சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும், ஜெனிவா செல்லும் குழு உறுப்பினர்களும் இன்று தெரிவு செய்யப்படுவர் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்காவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் இன்று கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இதற்கிடையே, ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அவசர கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இன்று சிறிலங்கா வரும் அவர், இரண்டு நாட்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிறிலங்கா அரசின் மூத்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கான உபாயங்கள் குறித்து ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார். 

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடருக்கு சிறிலங்காவின் சார்பில் ரவிநாத் ஆரியசிங்கவே தலைமை தாங்கவுள்ளார். 

இவரது தலைமையிலான குழுவில், சட்டமாஅதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த 5 சட்டவாளர்கள், நீதி அமைச்சின் செயலர், பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஆகியோர் அங்கம் வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே ஜெனிவா சென்று அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ad

ad