புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013





              "என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை... நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என கன்னங்களில் உருளத் துடித்த கண்ணீர்த் துளிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கமல் பேசிய பேச்சு இந்தியாவையே உலுக்கியெடுத்து விட்டது.


""முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று "விஸ்வரூபம்' படத்திற்கு இரண்டு வார தடை போட்ட அரசு... தங்களையும் கூப்பிட்டு பேசாமலே முடிவெடுத்ததால்தான் அரசின் தடையை நீக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் போனது கமல் தரப்பு.

"முஸ்லிம்கள் எதிர்ப்பால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக்கூடாது' என்கிற நோக்கம் மட்டுமே அரசுக்கு இருக்கிறது... என நம்பிக் கொண்டிருந்தார் கமல். ஆனால் "விஸ்வரூபம்' படத்திற்கான தணிக்கைச்சான்று உரிய விதிகளின்படி பெறப்படவில்லை' என்கிற வாதத்தை அட்வகேட் ஜெனரல் வைத்தபோதுதான் "படத்தையே முடக்கிப் போட அரசியல் சதி நடக் கிறதோ' என்கிற எண்ணம் கமலுக்கு வந்தது.

"விஸ்வரூபம்' ரிலீஸுக்கு 31 மாவட்ட கலெக் டர்கள் விதித்த 144 தடைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இடைக்கால தடை விதித்ததும், அரசு "மேல் முறையீடு செய்வோம்' என்றது.


"மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதற்குள் இரண்டு காட்சிகளாவது ஓட்டிவிட வேண்டும்' என கமல் தீவிரமானார். ஆனால் அரசு, போலீஸ், வருவாய்த் துறை மூலம் தியேட்டர்களை முடக்கியது. இந்நிலையில் சில காட்சிகளை நீக்குவதன் மூலம் முஸ்லிம் அமைப்புகளோடு சமரசத்துக்கு தயாராகிவிட்ட கமல் நக்கீரன் "விஸ்வரூபம்' பிரச்சினையில் அரசியல் புகுந்து விஸ்வரூபம் எடுப்பதை வெளி உலகிற்கு தெரியப்படுத்த விரும்பினார்.

30-ந்தேதி 11.30 மணிக்கு ராஜ்கமல் அலுவலகத்தில் கமல் சந்திப்பார் என மீடியாவுக்கு 11 மணிக்கு தகவல் வந்தது. அதன்பிறகு நடந்தது தான் உங்களுக்குத் தெரியுமே?!'' என்றார்கள் கமல் வட்டாரத்தில்.

11.30 மணிக்கு கமல் வந்ததும் நிரம்பி வழிந்த மீடியாவினர் ஆளாளுக்கு ஒரு கேள்வியை எழுப்ப... அந்த இடமே கூச்சல் குழப்பமானது. வழக்கமான இப்படிப்பட்ட சமயங்களில் கொஞ் சம் கடுமையும், நிறைய கிண்டலும் காட்டும் கமல்... நிதானமாகவே மீடியாவைப் பார்த்து "ப்ளீஸ்' பண்ணினார்.

"நீங்க கேள்வி கேட்டு நான் பதில் சொல்றது வேணாம். நானே பேசுறேன். நான் மட்டுமே பேசுறேன். நான் எழுதி வச்சுக்கிட்டு படிக்கலைங்க. ஞாபகம் வச்சுக்கிட்டு எனக்கு தெரிஞ்ச நியாயங்கள பேசுறேன்' என்றதும் மீடியாவினர் நிசப்த மானார்கள்.


""என்னுடைய படம் நடக்கும் களம்... ஆப் கானிஸ்தான். அது அமெரிக்காவிலும் நடக்கிறது. இது இந்திய முஸ்லிம்களை கேலி செய்யும் படமாக எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். அது ஒருபுறமிருக்க... நான் உட்பட அனைவருமே கருவிகளாக இருக்கிறோம். என்னுடைய முஸ்லிம் சகோதரர்கள் உட்பட... என்றே எனக்கும் தோன்றுகிறது''.

("கருவிகள்' என கமல் சொல்ல... மீடியாவின் காதுகள் இன்னும் விறைப்பானது!).

"என்னுடைய ரசிகர்கள் தியேட்டருக்குப் போய்... வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள் போலீஸ்காரர்களால். இப்ப எனக்கென்ன அவசரம் என்பதை நான் சொல்கிறேன். மற்றவர்களுக்கு என்ன அவசரமோ... எனக்குத் தெரியாது. என்னுடைய இந்தப் படத்தை எடுப்பதற்காக பெருஞ்செலவாகியிருக்கிறது. எனக்கு பெரிய சொத்துக்கள் கிடையாது. சென்னையில் எனக்கு இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கு' 

(எனச் சொல்லிவிட்டு கமல் சிரித்தபோது அவருக்குள் இருந்த மன அழுத்தம் மௌனமாக வெடிப்பதை மீடியாவால் உணர முடிந்தது. தனது அலுவலகமாக செயல்படும் அந்த வீட்டின் மீது கமல் தன் பால்யத்திலிருந்து வைத்திருந்த பிரியத்தையும் பல தலைவர்கள் அங்கு வந்து போனதையும், தன் தந்தையிடமிருந்து பணம் கொடுத்து அந்த வீட்டை வாங்கியதையும், அந்தப் பணத்தை தந்தை தங்களுக்கே பிரித்துக் கொடுத்ததையும் குறிப்பிட்டது... அந்த சூழலையே நெகிழ்வாக்கியது).


"ஒரு தனி மனிதனுக்கு செலவானது முக்கியமா? நாட்டின் ஒற்றுமை முக்கியமா?' என்று நீதிபதி கேட்டது என்னை உறுத்தியது. எனக்கு நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம். நான் வீழ்ந்தாலும் பரவா யில்லை. ஆனால் வீழ்ந்தால் விதையாக வீழ்வேன். மரமாகும் மீண்டும் விதைகள் விழும். சோலையாகும். காடாகும். 

(என கவிதையாய்ச் சொல்லி வந்த கமல்...)

"ஆனால்... வெத... நான் போட்டது' (என்று சொல்லும் போது கர்வமும், கம்பீரமாக கைகளை ஆட்டிப் பேசினார்.

(இது... கமலின் "தேவர்மகன்' பட வசனம் என்பதால்...)

"என் வசனமே எனக்கு கை வருவது சந்தோஷமாக இருக்கிறது' என்றவர் தொடர்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை சொத்துக்களை இழந்து திறமையால் எழுந்து மீண்டு வந்ததாகவும், மூன்றாம் முறையாகவும் மீண்டு எழுவேன் என்றும் குறிப்பிட்டார்.

"நான் வரிகட்டாமல் இருந்ததில்லை. ஜீரோடாக்ஸ் அரியர். "திமிர்'னு சொன்னேனே. "நான் கலைஞன்' என்ற திமிரு கிடையாது. நேர்மை யானவன் என்பதில் திமிர் இருக்கிறது எனக்கு.'

(எனச் சொன்ன கமல்... அதன்பிறகு பேசிய விஷயங்கள்தான் உலுக்கியெடுத்துவிட்டது).

"இப்பொழுது நான் சொல்வது... நிலை விளக் கம். என் தன் நிலை விளக்கம் அல்ல. எனக்கு நெறைய்ய வீடு இருக்கு சாப்பிடுறதுக்கு. தங்கத்தானே எடமில்ல. என்னை குடியமர்த்துவது எப்படி என்று தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும்.

"உனக்கு உலக நாயகன்னு பேரு வச்சது புரியலயா?

உள்ளூர்ல இருக்காத, வெளியே போன்னு சொல்றாங்க'னு என் சகோதரர் சாருஹாசன் சொன்னார். எனக்கு மதச்சார்பற்ற ஒரு இடம் வேண்டும். அது தமிழகமாக இல்லாமல் போய் விட்டால்... மதச்சார்பற்ற மாநிலம் இந்தியாவில் உள்ளதா என்று தேடி குடியமர்வேன். இருந்த தெல்லாம் போய்விட்டு, இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும்பொழுது குடியமர நான் உகந்ததாகக் கருதும் மாநிலத்தில் தங்கலாம் என்றிருக்கிறேன். காஷ்மீர் முதல் கேரளம் வரை... தமிழகத்தை ஒதுக்கி வைத் திருக்கிறேன். நீங்கள் பார்ப்பீர்கள்... எனக்கு இடம் கிடைக்க வில்லையென்றால் மதச்சார்பற்ற ஒரு நாடு தேடிப் போவேன்''

(என கமல் சொன்னபோது... நேரடியாக கமலின் பேச்சைக் கேட்ட மீடியாவினரும்  டி.வி."லைவ்'வில்  பார்த்துக்கொண்டிருந்த மக்களும் அதிர்ச்சியாகிப் போனார்கள்.)

""எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை... இப்ப பணம் இல்லைங்கிறதப் பாத்துக்கலாம். பணம் எப்ப வேணாலும் சம்பாதிச்சுக்கலாம். அப்படின்னா "தமிழர்களைப் புடிக்கலையா ஒங்களுக்கு?'னு கேட்றாதீங்க. புண்பட்டது போதும். தமிழர்களே என் உயிர். அதனால்தான் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்றெல்லாம் சொல்வார்கள். நான் என் உடலையும், மக்களுக்காகத்தான் கொடுத்திருக்கேன். இதுதான் நான். இதுதான் என் திமிரு'' (என... மருத்துவத்துறை ஆராய்ச்சிக்காக இறப்பிற்குப் பின் தனது உடலை தானம் செய்திருப்பதை மறைமுக மாகக் குறிப்பிட்டார்.)

""வெற்றி, தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம்  என்னவென்றால்... நான் குழந்தையாக நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் அணைத்து எடுக்கப் பட்டிருக்கிறேன். நடை பயின்றது திரு.ஜெமினி கணேசன் அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு. மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறியிருந்தது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் "ஆனந்தஜோதி'யில் "முடியும்... உன்னால. ஏறு... ஏறு...' என்று தூக்கிவிடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால்.

வெத... நான் போட்டது... அவ்வளவுதான் என் சந்தோஷம். வேறென்ன இருக்கு? இருந்து  பார்க்க நான் இருந்தால் சந்தோஷம். இல்லையென்றால் சோலைக்காற்று சுதந்திரக்காற்றா வீசட்டும்.''

கமலின் இந்த நிலை விளக்கம் அனைவரிடமும் பெரிய தாக்கத்தை  உண்டாக்க... ரசிகர்கள் கமலின் ஆழ்வார் பேட்டை அலுவலகம் முன் குமியத் தொடங்கினார்கள். ஆழ்வார்பேட்டை மேம்பாலமும் நெரிசலில் திணறும் அளவிற்கு பொதுமக்களும் வாகனங்களோடு நின்றிருந்தார்கள். 

கமலின் அறிவிப்பால் அதிர்ச்சியாகி அவருக்கு ஆறுதல் சொல்ல பாரதிராஜா, வைரமுத்து, குஷ்பு, ராதிகா, ராதாரவி, சிவகுமார், கார்த்தி, சிம்பு என பலரும்  வந்தபடி இருந்தனர்.

கமல் சக நட்சத்திரங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ""முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவர்கள் போராட்டத்தில் ஒரு வகையில் நியாயம் இருக்கு. ஆனா இப்போ எனக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினை தீர்ந்துவிட்டது. இப்போது அரசுத் தரப்பில் பிரச்சினை பண்றாங்க'' என்றார்.

அமீர் உள்ளே வந்த சமயம்... ""எங்க ஊரில் நாங்க இருந்த அக்ரஹாரம்  தெருவில் முதன் முதலா ஒரு முஸ்லிம் குடும்பத்தை எதிர்ப்பை மீறி எங்கள் குடும்பம்தான் குடியமர்த்தியது. அதன்  பிறகு அக்ரஹாரம் முஸ்லிம் தெருவாகவே ஆகிவிட்டது. அதற்குத்தான் இப்போ பலனை அனுபவிக்கிறேனோ, என்னவோ...'' என கமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமிருந்து போன்வர... கமல் வெளியே போய் பேசப்போனார். அந்த சமயம் அமீர்-சிம்பு இடையே வாக்குவாதம் நடந்தது.

""இனிமே ஒவ்வொரு படத்துக்கும் முஸ்லிம்ல ரெண்டு பேரு, கிறிஸ்டியன்ல ரெண்டு பேரு, தேவர் பேரவையில ரெண்டு பேரு, நாடார் பேரவை யில ரெண்டுபேரு... என கூட வச்சிக்கிட்டா படம் எடுக்க முடியும்? அப்படி எடுத்தா... என்னத்த படம் எடுக்க முடியும்?'' என சிம்பு சொல்ல...
""தனிப்பட்ட முறையில் யாரும் கருத்துச் சொல்லாம இருக்கிறதுதான் நல்லது'' என அமீர் சொல்ல...

""பார்டர்ல ரெண்டு இந்திய வீரர்களை தலைவெட்டி கொன்னிருக்காங்க. பாகிஸ்தானை கண்டிச்சு நீங்க ஏன் போராடல? இது சினிமா. இதுக்குப் போய் பிரச்சினை பண்ணலாமா?'' என சிம்பு கேட்க... டென்ஷனை அடக்க தண்ணீர் குடித்தார் அமீர்.

ரங்கசாமியிடம் பேசிவிட்டு கமல் உள்ளேவர... அப்போது வந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ""சார் ஒவ்வொரு குடும்பமும் ஒங்க படம் பார்க்க ஒருலட்ச ரூபாய் தர்றோம் சார்'' எனச் சொல்ல... அவரை கட்டிப்பிடித்துக் கொண்டார் கமல். 

அதன்பின் ரஜினியிடமிருந்து கமலுக்கு போனில் அழைப்பு. வெளியே போய் பேசினார் கமல்.

கமல் அலுவலகத்திற்கு ரஜினி வர விருப்பப்பட... பிரச்சினை வேறு மாதிரி திசை திருப்பப்படலாம் என்பதால் "வேண்டாம்' என கமல் மறுத்தார்.

""கமல் சார் நல்லவரா... இந்திய முஸ்லிமாத்தான் இந்தப் படத்துல நடிச்சிருக்கார். அப்புறம் ஏன் பிரச்சினை பண்றாங்க?'' என மும்தாஜ் கேட்டுக் கொண்டிருக்க...

" "விஸ்வரூபம்' படத்திற்கு முஸ்லிம் கள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது' என ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த காங்கிரஸ் எம்.பி.யான ஜே.எம். ஆரூண், கமல் அலுவலகத்திற்குள் வந்தார். உள்ளே இருந்த நட்சத்திரங்கள் பலரும் ஆரூணிடம் ""கமல் சாருக்கு இப்படி நெருக்கடி கொடுக்கலாமா?'' என கேள்வி மேல் கேள்வி கேட்க...

""எங்களுக்கும், கமலுக்கும் இடையே இருந்த பிரச்சினை தீர்ந்துவிட்டது. இப்போது... இந்த கேம்ல பந்து... கவர்மெண்ட் கைக்குப் போயிடுச்சு'' என்றார் ஆரூண்.  அதன்பின் கமல் மற்றும் ஆரூண் தரப்பும் பேசி முடித்து வெளியே வந்தனர்.

""முஸ்லிம்கள் மனம் வருந்தும்படி இருக்கும் சில காட்சி களையும், குர்-ஆன் வாசகம் ஒலிக்கும் காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கிவிடு வோம்'' என கமல் அறிவித்தார். மறுபடியும் கமலுக்கு போன் செய்து நிலைமையை விசாரித்தார் ரஜினி.

நேரம் ஆக... ஆக... ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக எமோஷனலாக வந்தபடி இருக்க... வெளியூர்களிலும் ரசிகர்கள் கும்பல், கும்பலாக பதட்டமான சூழலில் இருப்பதாகத் தெரியவர...

இரவு 7 மணிவாக்கில் வெளியே வந்த கமல் ரசிகர்களைப் பார்த்து கும்பிட்டு "இது ஒரு சினிமா பிரச்சினைதான். அதனால் எந்த அசம்பாவிதத்துக்கும் இடம் தராம நீங்கள்லாம் கிளம்பிப் போகணும்'' என கேட்டுக்கொள்ள... ரசிகர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

""இப்ப... என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு சரிவரப் புரியவில்லை. ரொம்பவும் புரிந்துகொள்ள முயற்சி செய்தால் நான் அரசியல்வாதி ஆயிடு வேனாங்கிற  பயம் எனக்கு இருக்கு'' என மீடியாவிடம் பேசிய கமல் சொன்னார். 

ஆனால்... கமல் பேச்சு நாட் டை உலுக்கியதோடு, "விஸ்வரூபம்' இந்தி ரிலீஸுக்கும் மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்துவிட்டது.

"அதிகார அரசியல் நெருக் கடிக்கு எதிராக கமல் நடத்திய ராஜதந்திர அரசியல்தான் மக்க ளிடம் மனம் விட்டுப் பேசியது' என்கிறார்கள் கமல் வட்டாரங்களில்.

-இரா.த.சக்திவேல்
படங்கள்: சுந்தர், ஸ்டாலின் & அசோக்

 ""வெளியேறுவது உறுதி''
-மும்பையில் கமல்!

"விஸ்வரூபம்' இந்திப் பதிப்பு வெளியீட்டிற்காக 31-ந்தேதி மும்பை சென்றிருந்த கமல் மீடியாக்களிடம் பேசும்போது... ""இதில் அரசியல் இருக்கிறது. நான் காயப் பட்டிருக்கிறேன். கலைஞர்களை காயப்படுத்தாதீர்கள். இந்த விஷயத்தில் தாமாக முன்வந்து பட வெளியீட்டிற்கு உதவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. படத்தை வெளியிடக் கூடாது என எனக்கு மிரட்டல்கள் வருகிறது. மிரட்டல் தொடர்ந்தால் நான் நாட்டை விட்டு வெளியேறுவது உறுதி!'' எனத் தெரிவித்தார்.


 ஒரு மணி நேர காட்சிகள் கட்!
-வலியுறுத்தும் அமைப்புகள்!

"விஸ்வரூபம்' விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த ஜெ., ""இரு தரப்பும் பேசி உடன்பாடு செய்து கொண்டால் படம் ரிலீஸாக அரசு உறுதுணையாக இருக்கும்'' என்றார். இதனையடுத்து, படத்தின் தடைக்கு காரணமாக இருக்கும் 24 முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த கூட்டமைப்பினர், த.மு.மு.க. மூத்த தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள முஸ்லிம் தலைவர்கள், அந்த பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் பலவற்றை நீக்க வலியுறுத்தும் வகையில் என்னென்ன காட்சிகள் என்பதை ஒரு பட்டியலாக தயாரித்திருக்கிறார்கள். அது நீண்ட பட்டியலாக இருக்கிறது. அந்த பட்டியல்படி சுமார் 1 மணி நேர காட்சிகள் நீக்கப்பட வேண்டியதிருக்கும்.

ஜெ.வின் பேட்டிக்கு நன்றி தெரிவித்துள்ள கமல், இரண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் 1 மணி நேர காட்சி களை வெட்டித் தள்ள சம்மதிப்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.


 

2012 நவ.17-20 தேதியிட்ட இதழில் "பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட கவலைகள் கமலைச் சூழ்ந் திருக்கிறது' என்றும் 2012 டிச.19-21 தேதியிட்ட இதழில்... "சொந்த வீடு இல்லை! கடன் நெருக்கடியில் உலக நாயகன்' என்ற தலைப்பில் "விஸ்வரூபம்' படத்திற்காக பி.வி.பி. நிறுவனத்திற்கு செட்டில்மென்ட் பண்ண கமல் கஷ்டப் படுவதையும் விரிவாக எழுதியிருந்தோம்.

"பாதுகாக்க வேண்டிய கலைஞன் கமல். அவனைப் பற்றி இப்படி எழுத லாமா?' என பத்திரிகையாளர் சந்திப் பொன்றில் பாரதிராஜா சாடினார்.
"ஐயோ... பாவம்... "கமல் நல்ல கலைஞன்' என்கிற அக்கறையில் இப்படி எழுதியிருக்கலாம்' என கமல் சொன்னார். "நான் வசதியாகத்தான் இருக்கிறேன்' என்றும் சொன்னார்.

2013 ஜன.26-29 இதழில்... "தடை மேல் தடை' என்ற தலைப்பில் "இந்தப் படம் குறித்து நிறைய நெருக் கடிகளை சந்தித்து விட்டேன். குறிப்பாக பணநெருக் கடி, கைவசமிருந்த ஓரிரு சொத்துக்களை வைத்து பெர்ஸனல் கியாரண்டி கொடுத்தும், நெருக்கடியை சமாளித்து விட்டேன்' என தனது நட்பு வட்டத்தில் கமல் சொன்னதையும் எழுதியிருந்தோம்.
30-01-2013ந்தேதி மீடியா முன் தனது பொருளாதார நெருக்கடி குறித்து கமல் பேசியது...

""எனக்கென்று இருப்பது கொஞ்சம். மற்றவர்கள் மாதிரி நிறைய சேர்க்கவில்லை நான். ஆனால் இருக்கும் அந்தச் சொத்தையும் வைத்து விளையாடியிருக்கிறேன். 
நான் எடுத்திருக்கும் படம் எனக்கிருக்கும் சொத்துக்களை விட சற்று அதிகமான செலவுகள் உள்ள படம். அதனால் எனக்கு பணம் தந்த முதலீட்டாளர் வட்டியோடு இதை நான் சரியான நேரத்தில் கட்டவில்லையென்றால் "இந்தச் சொத்துக்களை தனதாக ஆக்கிக் கொள்வேன்' என்று சொல்லியும், என் படத்தின்பாலும், இது பெறப்போகும் வெற்றியின்பாலும் இருந்த நம்பிக்கையில் எழுதிக் கொடுத்துவிட்டேன். ரிலீஸ் தேதி தள்ளிப் போகப் போக எனக்கு பணம் கொடுத்தவர் இதை அவர் பெயருக்கு மாற்றிக் கொள்வார். ஆக... ஒருவேளை தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவில்லையென்றால்... இனிமே பிரஸ்மீட் இங்க நடத்த முடியுமா?னு தெரியாது.
அதனால் சந்தோஷமா ஒரு பிரஸ்மீட் நடத்திரலாம்னுட்டு உங்களையெல்லாம் இங்க கூப்பிட்டிருக்கேன்'' என பேசினார் கமல்.

ad

ad