புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013


மாத்தளையில் கோயில் கொண்டு எமையாளும் அன்னை முத்துமாரி
 

தெளிவாக்குகிறது.தேவிகா லெச்சுமணன்
மாத்தளை
திருமூலரால் "சிவபூமி" எனச் சிறப்பாகப் போற்றப்படும் இவங்கைத் திருநாட்டில் வரலாற்றை பொறுத்த வரையில் சில தெய்வ வழிபாடுகள் கொண்ட நாடாகவே விளங்கியது. இதற்கான காரணத்தை நாம் எடுத்து நோக்கினால் இலங்கையை ஆட்சி செய்த இலங்காதிபதிகளில் பலர் சிவபக்தர்களாக விளங்கியதுடன் அவர்களின் பெயர்களின் முடிவில் 'சிவ' என்று பிரதிபலிப்பதை நாம் காணலாம்.
இந்து சமயத்தில் சிவ வழிபாடு எவ்வளவு தொன்மையானதோ அதேபோல் சக்தி வழிபாடும் தொன் மையானது என்பதை சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின் றன. சக்தி வழிபாடு சாக்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத் தோற்றம், செயல்முறை என்பன சக்தியின் விளைவு, இதன் காரணமாக சக்தியை பெண் வடிவமாக வழிபடுகிறார்கள் சிவனின் ஒரு பாகமாக சக்தி போற்றப்படுகிறாள். சிவனே சக்தியை வழிபட்டவர் என்பதும் வரலாற்று சான்றாகும்.
அந்த வகையில் பன்னாகமம் என்னும் பொன் நகரிலே எமது மூதாதையர் சக்தி வழிபாட்டை வேரூன்றச் செய்தனர். வாழை, கமுகு போன்ற சோலைகளுக்கு மத்தியில் அழகு மலை அடிவாரத்தில் மழை வளமும் கலை வளமும் மாண்புற்று விளங்கும் மஞ்சு தவிழ் மாத்தளையில் சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன். அன்று சிறு குடிலாக அமைத்து வழிபட்ட அன்னையின் ஆலயமானது இன்று மலையகத்தில் மட்டுமல்ல ஈழத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயமாக திகழ்ந்து வருகிறது என்றால் அது அம்பாளின் திருவருள் என்றால் மிகையாகாது. மாத்தளை வந்து அமர்ந்து மாத்தளை மக்களை மட்டுமல்ல அவளின் திருவடியில் தஞ்சம் என்று வருபவர்களை ஜாதி, மத, மொழி பேதமின்றி காத்து வருகிறாள் அன்னை முத்துமாரி.
அந்த வகையிலே இவ்வாலயத்தின் சிறப்பையும் பக்தர்களின் பக்திப் பரவசத்தையும் எடுத்துக் காட்டுவது மாசி மக மகோற்சவமும், அந்நாளில் இடம்பெறும் பஞ்சரத பவனியும் ஆகும். இவ்வாலயத்தினுடைய மகத்துவத்தையும், சிறப்பையும் எடுத்துக் காட்டும் வகையில் வருடா வருடம் மாசி மக மகோற்சவம் நடத்தப்பட்டு வருவதை யாவரும் அறிந்ததே. கொடியேற்றம் முதல் தினமும் பகல், இரவு உள் வீதி திருவிழாக்கள் தொடர்ந்து இருபத்தாறு தினங்கள் நடைபெறுவதோடு, இருபத்தாறு தினங்களும் அம்பாளுக்கு நூற்றி எட்டு சங்காபிஷேகமும் தினமும் பகல் பக்த அடியார்களுக்கு அன்னதானமும் அம்பிகை திருவருளால் நடத்தப்பட்டு வருகிறது. இறுதி நாளன்ற தேவி பஞ்ச ரத்தத்தில் பவனி வந்து மக்களுக்கு அருள் தருவது கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்று வருவது வழக்கம்.
வருடாந்த மாசி மக மகோற்சவம் சிறப்பாக நடைபெறும் அதேவேளை திருவிழாக்களும் அற்புதமாக நடைபெறுவதை குறிப்பிடலாம். பக்த அடியார்கள், சோளிய வெள்ளாளர் சமூகம், திருவிளங்க நகரத்தார், விஸ்வ பிரம்ம குலத்தவர்கள் போன்ற சமூகத்தினர் திருவிழாக்களை மிக அருமையாக அலங்கரித்து பக்திப் பரவசத்துடன் நடாத்தி ஆனந்தம் அடைவார்கள். பஞ்சரத பவனிக்கு முதல் அதாவது இருபத்திரண்டாம் நாள் நடைபெறும் சப்பரத் திருவிழாவும் மிக விமர்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
1955 ஆம் ஆண்டளவில் அமரர் குமாரசுவாமி அவர்கள் தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயம் பாரிய முன்னேற்றம் கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. மற்றும் ஆலய சுற்றுப் பிரகாரத்தில் பிள்ளையார் வள்ளி தெய்வானை, சமேத முத்துக்குமார சுவாமி ஆலயம் என்பன 1960 ஆம் அமைக்கப்பட்டதோடு 1963 ஆம் ஆண்டு ஈசான மூலையில் ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோம சுந்தரேச்வரர் ஆலயம் நிர்மாணிக்கப் பட்டது. மேலும் நடராஜர் சபை, முப்பெரும் தேவியர், ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ ரங்கா நாதர் எனப் பல பரிவார மூர்த்திகளும் அமைக்கப் பட்டு 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடந்தேறியது. இவ்வால யத்தின் நேரம் தவறாது காண்டாமணி ஓசையுடன் கூடிய ஐந்து கால பூஜை இன்றும் நடைபெறுகிறது.
1934 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விநாயகர் தேர், சிவனம்பாள் தேர், முருகன் தேர் என முத்தேர் வீதியில் இறங்கியது. ஒரு தேரை ஆறு வடிவங்களைக் கொண்டு அமைப்பார் கள். அதாவது கலை, தத்துவம், வண்ணம், புவனம், பதம், மந்திரம் என ஆறு திருத்தேரை வடிவமைத்து ஒரு உடம்பாக கருதி அதன் நடுவில் அம்பிகையை வைத்து வழிபடுவது ஆகம விதி முறையாகும்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மாத்தளை மா நகரில் பஞ்சரத பவனியை எழுப்பி சரித்திரம் படைக்கச் செய்தது என்றால் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானமே ஆகும். 1977 ஆம் ஆண்டு சித்திரத்தேர் வெள்ளோட்டம் மாத்தளை நகரில் விடப்பட்டது. தேரை கண்ட மாநகர் மாத்தளை தேவலோகமாக விளங்கியது. இவ்வாறாக 1983 ஆம் ஆண்டு நாட்டின் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய ஐந்து தேர்களும் விஷமிகளால் ஏறியூட்டப் பட்டது.
துன்பம் கண்டு துவண்டு விடாது மீண்டும் அம்பிகையின் அனுக்கிரகத்தால் 1992 ஆம் ஆண்டு ஐந்து சித்திரத் தேர்களை மீண்டும் உருவாகுவதற்கு திருவருள் கிடைத்தது என்பது அம்பாளின் அருளால் என்பதை யாரும் மறுக்க முடியாது. மீண்டும் உயிர்பெற்று சித்திரத்தேர் வீதியில் வெள்ளோட்டம் காண 1993 ஆம் ஆண்டு மார்ச 5ம் திகதி வீதியில் இறங்கி அடியார்களின் மனதை குளிர வைத்தது. அதேபோல எதிர்வரும் திங்கள் பெளர்ணமி தினத்தன்று (25.02.2013) காலை பஞ்சரதத் தேரிலே பவனி வந்து பக்தர்களின் துன்பங்களை தீர்த்து எல்லோரையும் வாழ வைப்பாள் அன்னை முத்துமாரி.
"பஞ்சரதம் அசைந்து வர....
பாவையரர்கள் வடம் பிடிக்க
பொன் நகர்....
மாத்தளையில்
மாரியம்மன் அருள் புரிய
மாசி மகம்.....
மகிழ்ச்சியில்..... மின்னுதடா"!....

ad

ad