புதன், பிப்ரவரி 27, 2013


இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆவேசம்!
போர்க்குற்ற நாடான இலங்கையுடன் நட்புறவு வேண்டுமா? தென்னிந்திய சகோதரர்களுடன் நட்புறவு வேண்டுமா? என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய மாநிலங்களவையில்  இன்று நடைபெற்ற இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விவாதத்தில் சிவா பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி மீண்டும் இரத்தம் கசியும் இதயத்துடன் இங்கே நான் பேசுகிறேன்.
தமது சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்கிற ஒரு மனிதாபிமானமற்ற நாட்டுடன் இந்தியா உறவு வைத்திருக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13-வது அரசியல் சாசன திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை.
அண்மையில் தமிழர்களுக்கு சுயாட்சி இல்லை என்று அறிவித்திருக்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்ச.
தமிழருக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக தலைமை நீதிபதியை தூக்கி எறிந்தவர் ராஜபக்ச.
அந்த நாட்டை இன்னமும் நட்பு நாடு என்கிறீர்களே. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது என்கிறீர்கள். அந்த நிதி தமிழருக்காகத்தான் செலவிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகில் எங்கெங்கோ மனித உரிமைகள் பாதிக்கப்படும் போதெல்லாம் இந்தியாவின் குரல் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் குரல் அப்படி ஏன் கேட்கவில்லை?
இலங்கையை தொடர்ந்து இந்தியா ஆதரிக்கிறது...இலங்கை வேண்டுமா? அல்லது இந்தியாவின் தென்பகுதியில் வாழும் மக்கள் வேண்டுமா? யாருடன் நட்புறவு வேண்டும் என்று மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கை வெளிநாடு என்கிறீர்களே..அப்புறம் எப்படி அமைதிப் படையை அங்கு அனுப்பினீர்கள்? அப்புறம் எப்படி எங்களது தமிழ் மக்களை அழிக்க உதவினீர்கள்?
இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியே இல்லை. பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனின் நெஞ்சில் 5 குண்டுகள் பாய்ந்திருக்கிறது. அதுவும் சுடப்படுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக உணவு கொடுத்துவிட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அல்லது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை இனியும் இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஆவேசமாக பேசினார் திருச்சி சிவா.
தாம் பேசும் போது, பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் புகைப்படங்களையும் ராஜ்யசபாவில் எடுத்துக் காண்பித்தார்.
- See more at: http://tamilwin.com/show-RUmryCRbNYnq2.html#sthash.HaKbGBVk.dpuf