புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2013


விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர்கள்
 கூட்டத்தின் 9 தீர்மானங்கள்!

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 27-3-2013 அன்று சென்னை, வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
.  கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1.  வீரவணக்கம்
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகமே போர்க்கோலம் பூண்டது. சிங்கள அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டுக் குற்றப் புலனாய்வு விசாரணை வேண்டுமென்றும், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் இந்திய அரசு அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கைகளுக்காக கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரும், சென்னை அருகே நெற்குன்றத்தைச் சேர்ந்த தோழர் விக்ரம் என்பவரும், மதுரையைச் சேர்ந்த ஒருவரும் தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்தனர்.

அவர்களுக்கு இக்கூட்டம் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.  அத்துடன் பாலியல் வல்லுறவு மற்றும் அமில வீச்சு ஆகிய ஆணாதிக்க வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு புதுதில்லியிலும் தமிழகத்திலும் உயிரிழந்த இளம்நங்கைகளுக்கு இக்கூட்டம் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
 

2.  தமிழினத்தை ஏமாற்றிய இந்திய அரசுக்குக் கண்டனம்
உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களும், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பல்வேறு தொடர் போராட்டங்களின் மூலம் வலியுறுத்தியும்கூட, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடத்தியது இனப்படுகொலை என்றோ, அதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தாமல், சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் துரோகம் இழைத்திருக்கிற இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
 

3.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விசிக விலகல் - வரவேற்பு
தமிழகத்தில் திமுக தலைமையில் இயங்கி வந்த சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று விடுதலைச் சிறுத்தைகள் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்றது.  திமுக தலைமையிலான அக்கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தமது ஆதரவை நீட்டித்தது.  தற்போது ஈழத் தமிழர்ச் சிக்கலிலும் தமிழகத்திற்கான நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான சிக்கல்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து இழைத்து வருகிற துரோகத்தைக் கண்டித்து மைய அரசுக்கு இதுவரை கொடுத்துவந்த ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் தற்போது விலக்கிக் கொண்டுள்ளது.  தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் எடுத்த இந்த முடிவை இச்செயற்குழு வரவேற்றுப் பாராட்டுகிறது.
 

4.  இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது
காமன்வெல்த் நாடுகளின் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.  இனப்படு கொலைக் குற்றம் இழைத்த இலங்கையில் இம்மாநாட்டை நடத்தக் கூடாது என ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 

தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்காமல் தொடர்ந்து அவர்களை ஒடுக்கி வரும் இராஜபக்சே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.  ஒருவேளை அம்மாநாடு இலங்கையில் நடைபெறுமெனில் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.
 

5. பதவி உயர்வில் - தனியார் துறையில் இடஒதுக்கீடு 
   இந்திய அரசின் தலித் விரோதப் போக்குக்குக் கண்டனம்
தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு உரிமை காப்பாற்றப்பட வேண்டுமென்றும் இந்தியாவெங்கும் தலித் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டும், மக்களவையில் நிறைவேற்றப்படமாலிருப்பதால் அது சட்டமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.  இதற்குக் காரணமான காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் தலித் மக்களுக்கு எதிரான போக்கைக் கைவிட்டு, மக்களவையில் எதிர்வரும் கூட்டத்தொடரில் இம்மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.  இந்திய அரசின் இத்தகைய மெத்தனப்போக்கைக் கண்டிப்பதுடன், உடனடியாக அதற்கான சட்டத்தைக் நிறைவேற் றுமாறு இந்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
 

6.  தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தை செயல்படுத்த சட்டம் இயற்றுக
மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளில் மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின பிரிவினரின் மக்கள் தொகைக்கு இணையான விழுக்காட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்று 6வது திட்டக் காலத்திலேயே முடிவெடுக்கப்பட்டது.  ஆனால், அதை மத்திய அரசோ, மாநில அரசுகளோ இதுவரை நிறைவேற்றவில்லை.  வெறுமனே கணக்கில் மட்டும் காட்டிவிட்டு, அந்தத் தொகையை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

இப்படி தாழ்த்தப்பட்ட-பழங்குடியின பிரிவினருக்கான நிதியை தவறாகக் கையாள்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என திருமதி சோனியா காந்தி அவர்களைத் தலைவராகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்திருக்கிறது.  எனினும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கண்டுகொள்ளப்படவில்லை.  இந்நிலையில், ஆந்திர மாநில அரசு அதற்கான சட்டத்தை இயற்றியுள்ளது. 

ஆந்திர அரசுக்கும் அதனுடைய முதலமைச்சர் மாண்புமிகு கிரண்குமார் ரெட்டி அவர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.  அந்த வகையில் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின பிரிவினருக்காக ஒதுக்கப்படும் நிதியை திட்டக் குழுவின் வழிகாட்டுதலின்படி உரியவகையில் செலவிட நடவடிக்கை எடுக்குமாறும், அதற்குரிய சட்டத்தை உடனே இயற்றிடுமாறும் இந்திய அரசையும் தமிழக அரசையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
 

7. சென்னையில் மக்கள் ஒற்றுமைப் பேரணி
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் மாபெரும் மக்கள் ஒற்றுமைப் பேரணி மற்றும் விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடத்துவதென்று கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.  அப்பேரணியில் ஈழத் தமிழர்களுக்கான கோரிக்கைகள் மற்றும் தலித் மக்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய முழக்க அட்டைகள், பதாகைகள், இயக்கக் கொடிகள் ஆகியவற்றுடன் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
 

8.  கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்திட சட்டம்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா ஆணையம் சாதிப் பஞ்சாயத்துகளையும், கவுரவக் கொலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கென சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றிடுமாறு பரிந்துரை செய்திருந்தது.

தற்போது வர்மா ஆணையத்தின் பரிந்துரைப்படி பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஆனால், கவுரவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் இயற்றப்படுவதற்கு எந்தவொரு முன்னெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை சாதியவாதிகளையும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.  எனவே, காலம் தாழ்த்தாமல் மைய அரசு, சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடைபெறம் கவுரவக் கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
 

9.  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - சிங்களர்கள் இடம்பெறக்கூடாது
பல நூறு கோடி ரூபாய் இலாபம் ஈட்டுகிற கிரிக்கெட் போட்டிகளை ஐ.பி.எல். அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  இந்த ஆண்டுக்கான அப்போட்டிகள் தொடங்கவுள்ளன.  அதில் இடம்பெற்றுள்ள 9 குழுக்களில் 8இல் சிங்களக் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இரண்டு அணிகளுக்கு சிங்களர்களே தலைவர்களாகவும் உள்ளனர்.  சென்னையில் 10 போட்டிகள் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெறும் போட்டிகளிலும் சிங்களர்கள் இடம்பெறக் கூடாது.  அதற்கான நடவடிக்கைகளை ஐ.பி.எல். அமைப்பைச் சார்ந்தவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
 


ad

ad