புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013

இலங்கை நட்புநாடு என்ற பல்லவி மட்டும் பலன் தராது – தீக்கதிர்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் உத்தியோகபூர்வ நாளேடான தீக்கதிர் [9-3-13-] இதழில் ‘இலங்கை : இனியேனும்’ தலைப்பில் வெளிவந்த தலையங்கம் இது. 

நாடாளுமன்ற மக்களவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் இலங்கை கடற்படை யினரால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் மட்டு மின்றி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

பல்வேறு கட்சிகளின் தொடர்ச்சியான நிர்ப்பந்தம் காரணமாகவே இத்தகையதொரு விவாதத்திற்கு மன்மோகன் சிங் அரசு முன்வந்தது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை ராஜபக்சே அரசை மட்டுமின்றி மன்மோகன் சிங் அரசின் பொறுப்பற்ற நழுவல் போக்கையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட மோதலின்போது கடுமையான போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பது உலகறிந்த உண்மை. ஐ.நா. சபை நியமித்த குழு மட்டுமின்றி இலங்கை அரசு நியமித்த போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவும் இதை உறுதிசெய்துள்ளது. ஆனால், தவறிழைத்தவர்களைத் தண்டிக்க இதுவரை இலங்கை அரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

மாறாக, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வகையில் போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவின் பரிந்துரைகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று இலங்கை சாதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.தமிழர்கள் குருதியில் மூழ்கடிக்கப்பட்ட அந்த நாட்களில் இழைக்கப்பட்ட அநீதிகள், பறிக்கப்பட்ட மனித உயிர்கள் குறித்து வெளி வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மனித இதயம் படைத்த யாரையும் நடுங்கவைப்பதாக உள்ளது.

அதில் ஒன்றுதான் எல்டிடிஇ தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான படங்களாகும். ஆனால், இந்தப்படம் போலியானது என்று இலங்கை கூறுகிறது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதில் மட்டுமல்ல, பல பத்தாண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரினால் வாழ்க்கையை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துவைத்துள்ள எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதிலும் ராஜபக்சே அரசு மனித இதயத்துடன் நடந்துகொள்ளவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை பொறுப்பற்ற முறையிலேயே இந்தப் பிரச்சனையை அணுகி வருகிறது. இந்தியா அளித்துவரும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் போய்ச்சேரு கிறதா என்று உறுதிப்படுத்தக்கூட மன்மோகன் சிங் அரசு தயாராக இல்லை.

இந்நிலையில்தான் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறவுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை தன்னுடைய சர்வதேச நலன்களுக்கேற்பவே இந்தப் பிரச்சனையை அணுகு கிறது என்பது வெளிப்படை.

இந்நிலையில், சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட விசாரணை வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன் சிலில் இந்தியா வலுவாக வாதாட வேண்டும். அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ச்சியாக தாக்கப்படுவது குறித்து கடுமையான முறையில் இலங்கை அரசுடன் பேசுவதும் அவசியமாகும். இலங்கை நட்புநாடு என்ற பல்லவி மட்டும் பலன் தராது.

ad

ad