புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2013



பிரதமர் அவர்களே, இலங்கைத்தமிழர் பிரச்சனையில்
துணிச்சல் மிக்க முடிவை இந்தியா எடுக்கும் என நம்புகிறேன் : ஜெ., கடிதம்
இலங்கைத்தமிழர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

’’இலங்கையில் நடைபெற்ற கடைசி கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள கண்டனங்களையும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானங்களையும் இலங்கை அரசு நிராகரித்து இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் வேதனையும், ஆத்திரமும் அடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.


இந்த தருணத்தில் ஐ.நா. சபையில் 22வது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது இந்தியா வலுவான நிலையை எடுப்பதும், தீர்மானத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் சுதந்திரமான திருத்தங்கள் கொண்டு வருவதும் அவசியமாகும்.
இந்த விஷயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகவும், இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுகுடி அமர்த்தப்பட்டு, அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெறும் வரை இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8.6.2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், 14.6.2011 அன்று தங்களிடம் நான் மனு கொடுத்ததையும், அதனை தொடர்ந்து 25.6.2011 அன்று கடிதம் எழுதியதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
இதனை தொடர்ந்து 2012 பிப்ரவரி 29ம் தேதியன்றும், 2012 மார்ச் 6ம் தேதியன்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 19வது கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக வலுவான ஒரு நிலையை எடுக்குமாறு நான் உங்களை வலியுறுத்தி இருக்கிறேன்.
தமிழக மக்களின் உணர்வு, சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் எனது கடிதங்கள் மூலமாக மனித உரிமை கவுன்சிலின் 19வது கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்த தீர்மானத்தின்படி பாடம் கற்றல் மற்றும் மறுசீரமைப்பு குழு அளித்துள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்.
இந்த தீர்மானம் மிதமானது என்பது மட்டுமின்றி ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த நிபுணர் குழு தெரிவித்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது அல்ல. மேலும், இந்திய அரசின் வழிகாட்டுதல் படியே இந்த குழுவின் அறிக்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆன பிறகும் கூட இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருப்பதற்கு  ஐ.நா. மனித உரிமைக்குழுவின் அலுவலகம் அளித்துள்ள அறிக்கையே சாட்சியாகும். பாடம் கற்றல் மற்றும் மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை இலங்கை அரசு இன்னும் அமல்படுத்தப் படவில்லை என்பதையும் மனித உரிமை குழு தெரிவித்திருக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கி தமிழர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் இன்னமும் 2ம் தர குடிமக்கள் போல் நடத்தப்பட்டு, அடிக்கடி வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், இலங்கை அரசு நியாயமான விசாரணை நடத்தவும், இனபடுகொலை தொடர்பான போர்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த  அறிகுறியும் தென்படவில்லை. இந்த தருணத்தில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 22வது மனித உரிமை கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை ராணுவம் நடத்திய அராஜகம் மற்றும் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சர்வதேச அளவில் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் அரசியல் சட்டப்படி சமஉரிமைகள் பெற்று கண்ணியமுடன் வாழ்வதற்கு வழிவகை செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். அதோடுமட்டுமின்றி மனித உரிமைகளை காப்பதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் இந்தியா உலகளவில் தலைமையேற்க வேண்டியதும் அவசியமாகும்.
ஆனால், கடந்த சிலநாட்களுக்கு முன் இந்த விஷயத்தில் நீங்களும், வெளியுறவு அமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகள் எனக்கு வருத்தத்தை தருகிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றை பிரதிபலிப்பதாக உங்களது அறிக்கைள் அமையவில்லை. ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வரும் வேளையில் கூட, இந்தியா மவுனம் சாதிப்பது ஏமாற்றம் தருகிறது.
இந்த விஷயத்தில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்பு மிக்க துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். நடந்த தவறுகளுக்கு இலங்கையை பொறுப்பாக்கி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தும் அமெரிக்காவின் நகல் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி இந்த தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து அதனை வலுப்படுத்தி தீவிரமாக அமல்படுத்துவதற்கும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஐ.நா. பொதுச்செயலாளர் அமைத்த குழுவின் அறிக்கை இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி. குழுவின் அறிக்கையை விட கூடுதலான அம்சங்களை கொண்டதாகும்.
* இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நீடித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாகும்.
* அரசியல் அதிகாரங்கள் வழங்குவதற்காக இலங்கை அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.
* சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை 6 மாதத்தில் முடிக்கப்பட்டு அதன் அறிக்கை 2014ல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை குழுவின் 25 கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவற்றை கவனத்தில் கொண்டு இதுபற்றிய திருத்தங்களை அமெரிக்காவின் தீர்மானத்தில் இணைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதுமட்டுமின்றி மனித உரிமைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறவும், குறிப்பாக தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளுடன் பேசி அவற்றின் ஆதரவை பெறவும் முயற்சிக்க வேண்டும்.
பிரதமர் அவர்களே, இந்த தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சல் மிக்க முடிவை ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளை காப்பதற்காகவும் இந்திய அரசு எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இத்தகைய முடிவை எடுத்து இலங்கையில் பாரபட்சம் காட்டப்பட்டு, அவதிப்பட்டு வரும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், உலகெங்கும் வாழும் பிற தமிழர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad