புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013

கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா கடும்தாக்கு


தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.



எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

2009-ம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி. அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவோ நடவடிக்கை எடுக்காமல், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தி தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி.

இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று பிரகடனப்படுத்தி தமிழினத்தை நம்ப வைத்து பதுங்குக் குழிகளில் பாதுகாப்பாக இருந்த இலங்கைத் தமிழர்களை வெளிவரச் செய்து அவர்கள் அனைவரும் ஈவுஇறக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்டதற்கு கருணாநிதிதான் காரணம்.

இந்தச் சமயத்தில் கருணாநிதி மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை கருணாநிதி செய்யவில்லை. இது தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய துரோகம்.

இதைத்தான் செய்யவில்லை என்றாலும், இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்து போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவாவது மத்திய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். இதையும் கருணாநிதி செய்யவில்லை. இது கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த இரண்டாவது துரோகம்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஓரளவு வலுவான தீர்மானத்தை இந்திய அரசு வலுவிழக்கச் செய்த போதாவது கருணாநிதி அதனைக் கண்டித்து இருக்க வேண்டும். கருணாநிதி இதிலும் தான் ஏமாற்றப்பட்டதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததே இந்தியாதான் என்று பட்டவர்த்தனமாக அனைவருக்கும் மத்திய அரசே பாரதப் பிரதமரின் கடிதத்தை வெளியிட்டு தெரியப்படுத்தியது.

அப்போதும் கருணாநிதி அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.

ஒருவேளை, அவ்வாறு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போக செய்த சூழ்ச்சியில் கருணாநிதிக்கும் பங்கு உள்ளது போலும்! எனவேதான் அதைப்பற்றி அப்போது அவர் எதையும் சொல்லவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வாறு மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், இப்பிரச்சனையில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்புமிக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை வலுவடையச் செய்ய என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் நான் விரிவான கடிதம் ஒன்றை பாரதப் பிரதமருக்கு நேற்று எழுதியுள்ளேன்.

இந்த நிலையில், 18.3.2013 அன்று ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்ததும் கருணாநிதி அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால்தான் இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால், கருணாநிதி, இந்திய நாடாளுமன்றத்தில் இதைப்போன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

அவரது இன்றைய (19.3.2013) பேட்டிக்குப் பின் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 21.3.2013 வரை காலம் இருப்பதாகவும், அதற்குள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் உறுதியான பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக்கூட்டத்தில்தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதுவும் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இதுபோன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள நீங்காத பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறாது. இந்த கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம்.

ad

ad