புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


'யுத்த சூனிய வலயம்" ஜெனீவாவில் திரையிடப்பட்டபோது நடந்தது என்ன?

எனக்குத் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது. ஒரு செய்தியாளன் என்ற வகையில் இது வரையில் செய்து வந்திருப்பது போன்று அதுவும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் நான் எனது கடமையை இப்போது செய்திருக்கின்றேன் என்று கலும் மக்ரே தனது ஒளிப்படத்தை ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குத் தனது மூன்றாவது ஒளிப்படத்தை திரையிடுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.


கலும் மக்ரே , சனல்-4 இன் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஒளிப்படத் தொகுதியின் தயாரிப்பாளர் ஆவார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிழற்படங்களை வெளியிட்டு உலக நாடுகளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் மனித நேயமுள்ளவர்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனீவாவில் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற 22 ஆவது கூட்டத் தொடரையொட்டி இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க் குற்றங்கள் எனக் குறிப்பிடத்தக்க வகையிலான சம்பவங்களை மூன்றாவது தொகுப்பாக அவர் தயாரித்துள்ள ஒளிப்படம் கடந்த முதலாம் திகதி மதியம் 12 மணிக்கு அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் திரையிடப்பட்டது.
ஐ.நா.வில் மனித உரிமை பேரவையில் கலந்துகொண்டுள்ள இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு, மனித உரிமை கூட்டத்தொடருக்கு வெளியே இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான அனுசரணையை சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இணைந்து வழங்கியிருந்தன.
சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச மன்னிப்புக் குழுவின் தலைவரான போல் ஹொவ்மன் தலைமையில் இந்த ஒளிப்படம் திரையிட்டபோது மண்டபம் நிறைந்து வழிந்தது. எல்லோரும் மிகுந்த ஆவலோடு அங்கு வருகை தந்திருந்தனர். இலங்கையின் ஐ.நா.வுக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவும் அங்கு சமுகமளித்திருந்தார்.
சனல்-4 வெளியிட்டுள்ள இந்த ஒளிப்படம் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமுகமளிக்கும் பேராளர்களுக்கு காட்டப்படும் என்ற தகவல் முன்கூட்டியே வெளியாகியிருந்தது. ஆயினும் அந்த ஒளிப்படம் அங்கு திரையிடப்படக்கூடாதென்று இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
இருந்த போதிலும் இந்த ஒளிப்படம் எப்படியாவது அங்கு திரையிடப்பட்டுவிடும் என்ற அச்சம் இலங்கை அரசாங்கத்திற்கு மேலோங்கியிருந்தது.
கடந்த மாதம் 24ஆம் திகதி ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முந்தையதினம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனையை கடிதம் மூலமாக ஐ.நா.விற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் நேரடியாக கையளித்திருந்தார்.
எனினும் இந்த ஒளிப்படம் அங்கு திரையிடப்படுவதை தடுக்க முடியாதென்று மனித உரிமைகள் பேரவையினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். எனவே தான் இலங்கை அரசாங்கத்தின் கடும் ஆட்சேபனைக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் இலங்கையின் கொலைக்களங்கள் 'நோ பயர் ஸோன்" என்ற ஒளிப்படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
.

ad

ad