புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013


வேலை நிறுத்தம் வெற்றி! இனிமேலாவது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்!- கருணாநி
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இலங்கைக்கு எதிரா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத் தமிழர் இன்னல் தீரவும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை உரிய திருத்தங்களோடு இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரியும்,
“டெசோ” இயக்கத்தின் சார்பில் பெப்ரவரி திங்கள் 8ம் தேதியன்று கறுப்புடை அணிந்து என் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், மார்ச் திங்கள் 5ம் தேதியன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம், மார்ச் திங்கள் 7ம் தேதியன்று தலைநகர் டெல்லியில் கருத்தரங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து,
மார்ச் 12ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
பல இடையூறுகள், எதிர்ப்புகளையெல்லாம் மீறி தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்த பட்ச அலுவலர்களைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவதற்கு முயற்சி எடுத்த போது கழகத் தோழர்கள் மறியல் செய்து எங்கள் மாவட்டத்தில் இத்தனை பேர் கைது, எங்கள் நகரத்திலே இவ்வளவு பேர் கைது என்று தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தமிழகம் முழுவதிலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து பல ஊர்களிலிருந்து வந்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கழகப் பொருளாளர் ஸ்டாலின், தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் தாங்களும் மறியல் செய்யப் புறப்பட்டுச் சென்று அவர்களும் கைதான செய்தி கிடைத்தது.
இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக நாம் நடத்திய இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கித் தந்த வணிகப் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஏன் தமிழ் உணர்வு படைத்த பொதுமக்கள் அனைவருக்கும் “டெசோ” இயக்கத்தின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும், என் தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் பெரிய வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகாவது மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உரிய அக்கறை செலுத்தி, தெளிவான முடிவினை மேற்கொள்ள முன் வரவேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ad

ad