புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013




      

          மாணவர்கள் மத்தியில் வெடிக்க ஆரம்பித்திருக்கும் ஈழ ஆதரவுப் போராட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் தகிக்கவைக்கும் அளவிற்கு உருவெடுத்து வருகிறது..

nakkeran

சரணடைந்த பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை பிஸ்கட் சாப்பிடவைத்து, விசாரணைக்கு உட்படுத்தி அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் படுகொடூரமாக சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்ற புகைப்படங்கள் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தமிழக மாணவர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் ஆவேசத் தீயாய்க் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. இதற்கான முதல் பொறியைப் பற்ற வைத்திருப்பது சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள்.



"ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் ஐ.நா.சபைத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்'’என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, லயோலா கல்லூரி மாணவர்களான  ஜோ பிரிட்டோ, திருக்குறள் திலீபன், மணி, சண்முகப்பிரியன் என்கிற செம்பியன், பார்வை தாசன், பால் கென்னத், லியோ ஸ்டாலின், அந்தோணி ஆகிய 8 மாணவர்கள், கடந்த 8-ந் தேதி காலையில் கல்லூரிக்கு அருகிலேயே இருக்கும் ஐகப் வளாகத்தில், சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் தீயாய்ப் பரவ, பதட்டமாய் ஐகப் வளாகத்தை நோக்கி அவர்கள் அணி திரள ஆரம்பித்தனர். அங்கு இடநெருக்கடி ஏற்பட்டதால் மறு நாள், கோயம்பேடு செங்கொடி அரங்கிற்கு இந்த உண்ணாவிரதம் மாற்றப்பட்டது. இங்கும் மாணவர்களும் ஈழ ஆதரவு இயக்கத்தினரும் குவியத்தொடங்கினர். உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை வைகோ, பழ.நெடுமாறன், நல்லகண்ணு, சீமான், சி.பி.ஐ.ராஜா போன்றோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். டெசோ சார்பில் சிறுத்தைகள் திருமா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வந்தபோது நாம் தமிழர் இயக்கத்தினரும், மே-18 இயக்கத்தினரும் ’துரோகிகளே வராதீர்கள்’ என எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டப் பரபரப்பு உண்டானது, மாணவர்களோ, ‘"அவர்களும் இன உணர்வாளர்கள்தான். எங்கள் போராட்டத்தை அரசியலாக்கிக் கொச்சைப்படுத்தாதீர்கள்'’என அவர்களை அமைதிப்படுத்தினர்.

அப்போது பேசிய சுப. வீரபாண்டியன் ""ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. நமது உள்ளூர் அரசியலை இங்கே காட்டி போராட்டத்தை நாம் பலவீனப்படுத்திவிடக் கூடாது. ஆளுக்கோர் பாதையில் நடக்கிறோம் என்றாலும் நமது இலக்கு தமிழீழம் ஒன்று தான்''’என்றபோது  மாண வர்கள் மத்தியில் ஆரவாரம் கிளம்பியது. 

"அடங்கமாட்டோம் அஞ்சமாட்டோம்... போராட் டத்தைக் கைவிடமாட்டோம்! கேடுகெட்ட டெல்லியே தமிழன் என்றால் அலட் சியமா? மானம் கெட்ட காங்கிரஸே, தன்மானத் தமிழனைச் சீண்டாதே!' என்றெல்லாம் விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.

லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதம் இருக்கும் தகவல் தமிழகமெங்கும் பரவ, மாணவ சமூகம் அங்கங்கே ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. தொடர் போராட்டங்களால் ஆட்சி பீடங்களின் கவனத் தை திருப்ப முடிவெடுத்த மாணவர்கள், திங்கட் கிழமையில் இருந்து தமி ழகம் முழுக்க உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் என்று நடத்த முடி வெடுத்தனர். போதாக் குறைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மாண வர்கள், சென்னையில் திங்கட்கிழமை அணி திரண்டு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர். இந்தத் தகவல் உளவுத் துறை மூலம் ஆட்சி மேலிடத்திற்குப் போக, 60-களில் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போல், மீண்டும் தமிழகம் தணல் காடாகிவிடுமோ என்று அது கை பிசைந் தது.  மாணவர்களின் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்பது குறித்த ஆலோசனைகள் தொடங்கின. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தங்கபாலு தனது ஆதரவாளர்கள் சிலரோடு, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை சந்திக்க வந்தார். அவர் தலையைப் பார்த்ததுமே மாணவர்கள் மத்தியில் கோபாவேசம் கொப்பளிக்கத் தொடங்கியது. ‘"காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்காரனே இங்கிருந்து ஓடிப் போ! ராஜபக்ஷேவுக்கு சேவகம் பண்ணும் காங்கிரஸே, தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போ!'’என கோஷம் எழுப்பினர். இதைப் பார்த்த காக்கிகள், தங்கபாலுவை வழிமறித்து "நிலைமை சரியில்லை. மாணவர்கள் நீங்கள் வருவதை விரும்பவில்லை. அதனால் இங்கிருந்து கிளம் புங்கள்'’என்றனர். தங்கபாலுவோ "நானும் தமிழன்தான். மாணவர்களை சந்தித்தே தீருவேன்'’என்றார். இதைக்கேட்டு மேலும் கொதிப்படைந்த மாணவர்கள் "காங்கிரஸ்காரன் தமிழனே இல்லை. தங்கபாலுவே ஓடிப் போ'’என்றபடி செருப்பு களையும் தண்ணீர் பாட்டில்களையும் கற்களையும் சரமாரியாக தங்கபாலு மீது வீச ஆரம்பித்தனர். தன் மேல் விழுந்த செருப்புகளைக் கண்டு விக்கித்துப்போய் நின்றார் தங்கபாலு. அப்போது வீசப்பட்ட ஒரு கல் அவரோடு வந்திருந்த தாமோதரன் என்பவர் மண்டையை உடைத்து ரத்தத்தை ஒழுக வைத்தது.


கொதிப்பில் இருந்த மாணவர்கள் ""நாங்கள் இந்த ஒரு தங்கபாலு மீது செருப்பை வீசவில்லை. ஒட்டுமொத்த காங்கிரஸ் மீது வீசியிருக்கிறோம்''’என்றனர் அனல் குறையாமல். 

11-ந் தேதி திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப் படும்போது, மாணவர்கள் ஆர்த்தெழுவார்கள் என்று கணக்குப் போட்ட ஆட்சி மேலிடம், அதற்குள் உண்ணா விரதம் இருக்கும் லயோலா மாணவர்களை அடக்கிவிடும் முயற்சியில் இறங்கியது. காக்கி அதிகாரிகள், லயோலா கல்லூரி நிர்வாகத்திடம் "உங்கள் மாணவர்களை எப்படி போராட அனுமதித்தீர்கள். இவர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் உங்களுக்கும் சிக்கல்'’என்று மிரட்டி நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரி சார்பில் சில பாதிரியார்கள் போய், மாணவர்களை சந்தித்தனர். களம் கண்ட மாணவர்களோ "நாங்கள் கல்லூரியை எதிர்த்து இந்தப் போராட்டத்தைச் செய்ய வில்லை. நம் இனத்துக்காக அறவழியில் எங்களை நாங்களே வருத்திக்கொள்கிறோம். அவ்வளவுதான்'’என்று உண்ணா விரதத்தை கைவிட மறுத்தனர்.

இந்த நிலையில் 10-ந் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்கு சரசரவென காவல்துறை வாகனங்கள் வந்து நின்றன. 500-க்கும் மேற்பட்ட காக்கிகள் இறங்கினர். கூடவே 10 ஆம்புலன்ஸ்களும் வந்தன. இதைக்கண்ட மாணவர்கள், ஏதோ திட்டத்தோடுதான் போலீஸ் டீம்கள் வந்திருக்கிறது என்று புரிந்துகொண்டு,  அரங்கின் கதவைச் சாத்தி, உட் பக்கமாகப் பூட்டிக்கொண்டனர். திபு திபுவென வந்த காக்கிகள் கதவை உடைத்துக்கொண்டு அரங்கிற்குள் நுழைந்தனர். அங்கு உண்ணாவிரத சோர்வில் இருந்த மாணவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து, ’"உடனே இங்கிருந்து கிளம்புங்கள்'’என்றனர். இதை தமிழுணர்வாளர்கள் தடுக்க, அங்கே தள்ளுமுள்ளுகள் நடந்தன. தமிழுணர்வாளர்களைத் தூக்கிப் பந்தாடிய போலீஸ், அவர்களைக் கைதுசெய்து நேராக அரும்பாக்கம் ஜெயின்நகர் சமூகநலக் கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய், ராயப்பேட்டை ஜி.ஹெச்.சில் அட்மிட் பண்ணியது.

மாணவர் கனல் நம்மிடம், ""மாணவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தை ஒடுக்க இந்த அரசு எடுத்துவரும் அராஜக நடவடிக்கைகளே, இந்த அரசின் முகமூடியைக் கிழித்துக் காட்டுகிறது. எத்தனை அடக்குமுறைகளைப் பிரயோகித்தாலும், மாணவர்களின் ஈழ ஆதரவுக் குரலை நிறுத்திவிட முடியாது. மாணவர்களின் சக்தி, பிரளயத்திற்கு நிகரானது என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்''’ என்றார்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைச்செயலாளர் தினேஷ், ""உலகத்தில் நடந்த போர்க் குற்றங்களில் இலங்கையில் நடந்திருப்பதுதான் உச்சம். மற்ற நாடுகளில் நடந்தது போர்க்குற்றம். ஆனா, இலங்கையில் ராஜபக்ஷே அரசால் நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட இனப் படுகொலை. இதற்கான ஆதாரங்கள் நிறைய வந்துவிட்டன. அந்த ஆதாரங்கள் உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான், இலங்கையில் நடந்த இனப் படுகொலை போர்க்குற்றவாளிகள் மீது சர்வதேச விசா ரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை அவர்களே தீர்மானிக்க ஐ.நா. வழிகாண வேண்டும், இதற்கான முன் முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்திற்காக பட்டினிப் போராட்டத்தில் இறங்கினர் 8 மாணவர்கள். இவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், ஈழ ஆதரவு அமைப்புகள், சமூக நல அமைப்புகள், ஈழ சிந்தனையாளர்கள் என பல தரப்பிலும் ஆதரவு பெருகி வந்த நிலையில்... ஈழப் பிரச்சினை மாணவர்கள் கையில் சென்று மக்களின் வெகுஜன போராட்டமாக மாறிவிடக் கூடாது என கருதியே மாணவர்களை கைது செய்திருக்கிறது போலீஸ். பொது இடத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வில்லை. தனியார் இடத்தில் நடத்தினர். அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து கைது செய்தது அராஜகம். மாணவர்களின் உணர்வுகளை அடக்குமுறைகளால் எல்லாம் ஒடுக்கிவிட முடியாது. நாங்கள் இன்னமும் வீறு கொண்டு எழுவோம்'' என்கிறார் உணர்வுபூர்வமாக.


மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தை அந்த 8 மாணவர்களும் தொடர, அவர்களை சாப்பிடச்சொல்லி தொடர்ந்து மிரட்டியது காவல்துறை. இவர்கள் இருக்கும் ராயப்பேட்டை ஜி.ஹெச். பக்கம் மாணவர்கள் எவரும் வராதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் தன் மகன் பார்வைதாசனைப் பார்க்க வந்த அவரது அம்மா கலைச்செல்வி ""எங்க மகன் உணர்வோடு போராடுகிறான். அவனையும் அவனோடு உண்ணாவிரதம் இருந்த மாணவர்களையும் தீவிரவாதிகளை வளைப்பதுபோல் முரட்டுத்தனமாக தூக்கிவந்து மருத்துவமனைக்குள் சிறை வைத்திருக்கிறது இந்த அரசு''’ என்றார் ஆத்திரமும் ஆவேசமுமாக. தங்கள் சக மாணவர்களின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அரசின் தொடர் நெருக்கடியால் திங்கள் மாலை உண்ணாவிரதத்தை கைவிட்ட லயோலா மாணவர்கள், ""தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட ஆரம்பித்ததே எங்கள் உண்ணா விரதத்திற்குக் கிடைத்த வெற்றி'' என்றனர்.

லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் தீரன் மற்றும் சரவணக்குமார் தலை மையில் காலை வகுப்புக்களை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது "ராட்சஷ ராஜபக்ஷேவை தூக்கில் போடு! தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும்  சிங்கள ராணுவத்தைக் கூண்டில் ஏற்று!'’என கோஷங்களை எழுப்பினர். அப்படியே, கல்லூரி அருகில் உள்ள வணிகவரித் துறை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஸ்டேட் வங்கிக்குள் புகுந்து  உள்பக்கமாக கதவைச் சாத்திக் கொண்டனர். இலங்கைக்கு ஆதரவான இந்திய அரசின் போக்கை கண்டிக்கும் விதத்தில்,  இந்திய ரூபாய் நோட்டுக்களை கிழித்து எரிப்பது என்ற அவர்களின் போராட்ட திட்டத்தை அறிந்த தமிழக காவல்துறையினர் "உடனே வங்கியை விட்டு வெளியேறுங்கள்.. இல்லையென்றால் வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடிக்க முயன்றதாக வழக்கு போடுவோம்'’என்று மிரட்டினர்.  இதனால் வெகுண்ட மாணவர்கள் "ராஜபக்ஷேவை விட மோசமானவர்களாக இருக்கிறீர்களே...'’என்று காக்கிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 

திருச்சி புனித தூயவளனார் கல்லூரி மாணவர்கள், தமிழீழ விடுதலைக்காக அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பை உருவாக்கி தொடர் உண்ணாவிரதத்தை கல்லூரி வளாகத்திலேயே நடத்த கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டலால் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்துள்ளளனர். இவர்கள் நிர்வாகத்தையும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறது போலீஸ்.

நெல்லை செயின்ட் சேவியர் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர் களும் தொடர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள னர். இதேபோல், தமிழகம் முழுக்க இருக்கும் மாணவர்கள் அங்கங்கே  மறியல், ஆர்ப்பாட்டம் என்று உணர்வுபூர்வமாக குதித்து வருகின்றனர்.  தமிழகத்தின் அத்தனை கல்லூரி வளாகங்களை யும் முற்றுகையிட்டிருக்கிறது போலீஸ். நிமிடத் திற்கு நிமிடம் மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் வேகமெடுப்பதால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலகம் உற்றுப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

-நமது நிருபர்கள்

ad

ad