புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


''அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்'' என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. திரட்டிய ஆதாரம்!
இலையுதிர் காலம், வசந்தகாலம் போல் ஜெனீவா காலம் என்ற புதிய காலத்தை தமிழர் வாழ்வில் இணைத்திருக்கிறது ஈழப் படுகொலை.
2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பூண்டோடு அழிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பெரும் சோகத்தையும், ஆறாத காயங்களையும், தழும்புகளையும், மிச்சசொச்சத்‌ தடயங்களையும் ஏகாதிபத்தியங்களின் நிழலான ஐ.நா-விடம் காட்டி, நீதி கேட்டு கைகட்டி வரிசையில் காத்திருக்கிறது கையறுந்த தமிழ்ச் சமூகம்.
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இறந்தவர்​களைவிட, படுமோசமான நிலையில்தான் இன்றும் ஈழம் இருக்கிறது.
இலங்கை அரசின் கொடூரங்களைத் தட்டிக்கேட்காமல் உலக சமூகம் இன்னமும் வேடிக்கை பார்க்கிறது.
நீதி வழங்கவேண்டிய ஐ.நா. மீண்டும் கை விரிக்கப் போகிறது எனத் தெரிந்தும், வேறு வழி இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் பார்வையும் ஜெனீவா நோக்கி இருக்கிறது.
ஐ.நா. சபையில் பெப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய மனித உரிமை கவுன்சில் கூட்டம் மார்ச் 22-ம் தேதி வரை நடக்கிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.
தீர்மானத்தை நிறை​வேற்றாமல் இருக்க‌ இலங்கை அரசு வாஷிங்டனில் ஆரம்பித்து டெல்லி வரை எல்லாத் திசைகளிலும் படுமும்முரமாக 'லாபி’ செய்கிறது.
ஈழத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வழங்கும்படி புலம்பெயர் அமைப்புகளும், தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி-க்களும் ஜெனீவாவில் முகாமிட்டுள்ளனர்.
ஜெனீவாவில் என்ன நடக்கிறது? பிரித்தானியா தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம்.
கடந்த பத்து நாட்களாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் மனித உரிமை மீறல், ஆட்கள் கடத்தல், பெண்களுக்கு எதிரானக் கொடுமைகள் என பல்வேறு கட்டங்களாக விவாதங்கள் நடந்தன.
இலங்கையில் நடந்த போர் குறித்து ஆய்வுசெய்த‌ ஐ.நா. அமைப்பின் மனித உரிமைக் கவுன்சிலின் செயலாளர் ஜான் பெட்ரிக் தலைமையிலான குழு பரிந்துரைத்த 'மக்கள் பாதுகாப்புடன் வாழ்வ​தற்கான உரிமை’ தொடர்பான விதிகள் குறிப்பிடுகிற எந்த விடயங்களையும் இலங்கை அரசு பின்பற்றவில்லை.
மாறாக போர் நிறுத்தம் செய்யாமை, போர்க்குற்றம், இனப் படுகொலை, இன சுத்திகரிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு இலங்கை அரசு செய்தது என்பதை அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளிடமும் வலியுறுத்தினோம்.
போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, குடிசனத் தொகைக் குறைப்பு, இனத்தை அழிப்பது என இலங்கையில் சட்டரீதியான இனப் படுகொலை நடக்கிறது என, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினோம்.
கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வலியுறுத்திய எல்.எல்.ஆர்.சி-யின் குறைந்தபட்ச செயல்திட்டங்களைக்கூட இலங்கை அரசு செய்ய முன்வரவில்லை. அதனால், கடுமையான கண்டனம் எழுப்பப்பட்டது.
1956-ல் இருந்து 2013 ஜனவரி மாதம் வரை இலங்கையில் நடந்த தமிழினத்துக்கு எதிரான அத்தனை படுகொலைகளையும் 'அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்’ என்ற பெயரில் ஐ.நா. ஆவணமாக்கி இருக்கிறது. அதில் 105 மிக முக்கியமான ஆவணங்கள் அடங்கி இருப்பதால், இலங்கை அரசு அந்த ஆவணங்களை மறுக்கிறது.
தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சனல்-4 தொலைக்காட்சி, கொலைக்கள ஆவணப்படங்களை எடுத்த கேலம் மெக்ரே, லாபி வேலை​களில் ஈடுபடும் தமிழர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு 50 டிப்ளமெட்களையும் அவர்களுக்கு டிரைவர்களாக 50 பேரையும் ஜெனீ​வாவில் களம் இறக்கி இருக்கிறது.
ஆனால் அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் படித்த இளம் தமிழர்களின் வழியாக 'அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்’ ஆவணங்களை சர்வதேச மனித உரிமைக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் அனுப்பி​இருக்கிறோம்.
இதுவரை இலங்கையில் நடந்த படுகொலைகளுக்காக‌ ஒருவரைக்கூட சட்டரீதியாக இலங்கை அரசு தண்டிக்கவில்லை என்பதை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடம் சொன்னபோது, அதிர்ந்துபோனார்கள்.
இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் பரிந்துரைக்கும் எதையுமே ஏற்காமல் காலம் தாழ்த்துவது அங்கே மிச்சம் இருக்கும் தமிழர்களைச் சத்தமில்லாமல் கொன்று அழிப்​பதற்காகத்தான்.
தினமும் தாயகத்தில் இருந்து நிறைய சாட்சியங்கள் ஜெனீவா நோக்கி வந்தபடி இருக்கின்றன. இதை அறிந்த இலங்கை அரசு சாட்சியங்களைக் கடத்திக் கொன்று விடுகிறது.
இதையெல்லாம் ஐ.நா-வின் மனித உரிமைக் கவுன்சில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறது என்பதை இப்போதுதான் இலங்கை அரசு உணரத் தொடங்கி இருக்கிறது.
நாங்கள் பிடித்து வைத்திருந்த 11,250 பேருக்கும் புனர்வாழ்வு அளித்துவிட்டோம்’ என்று தானாக முன்வந்து தகவல் சொல்கிறார்கள்.
மொத்தத்தில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானம் பலம் பொருந்தியாக இல்லாவிட்டா​லும், அதைச் சீர்குலைக்க இலங்கை அரசு வேகமாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் தீர்மானத்தைக் கடந்த முறையைவிட இப்போது நிறைய நாடுகள் ஆதரிக்கும். அழுத்தமான தீர்மானம் கொண்டு வரவும், அதை ஆதரிக்குமாறு ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மற்ற நாடுகளிடம் கேட்கும் போது, தெற்காசிய நாடுகளின் அரசியலில் இந்தியா பெரும்பங்கு வகிப்பதால், இந்தியாவின் முடிவைப் பொறுத்தே எங்களுடைய முடிவும் இருக்கும் என்கிறார்கள்.
கடந்த முறை நடந்ததைப்போல இந்தியா கடைசி நேரத்தில் தன்னுடைய முடிவைச் சொன்னால், தீர்மானத்தில் தமிழர்களுக்குத் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர இயலாது. எனவே, இந்திய அரசு தாமதமாக எடுக்கும் இந்த முடிவுகூட தமிழர்களுக்கு எதிராகவே அமையும்.
நேற்றுகூட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய ஆட்சிக் குழுவினரிடம் பேசியபோது, 'இந்தியாவின் மனநிலையை அறியாமல் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை’ என வருத்தப்பட்டனர்.
எனவே, இந்திய அரசை தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் நிர்ப்பந்தித்து உடனடியாகத் தனது முடிவை அறிவிக்க வலியுறுத்த வேண்டும்'' என்றார் அக்கறையுடன்.
இலங்கையின் தமிழ் எம்.பி. ஒருவரிடம் பேசினோம்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நடந்த மூன்றாம் நாள் அமர்வில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்​சந்திரன் எம்.பி. பேசுகையில்,
இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் இளைஞர்கள் காணாமல் போகிறார்கள்.
இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டு, அவர்களுக்குப் பாலியல் ரீதியானத் தொந்தரவுகளைக் கொடுக்கின்றனர்.
மீள் குடியேற்றமும், புனர்வாழ்வும் முழுமையாக நடக்கவில்லை. தமிழர் பகுதிகளில் திட்டமிட்டச் சிங்கள குடியேற்றமும், மிலிட்டரிப் படையும் குவிக்கப்படுகின்றன’ என்பதை ஆதாரங்​களுடன் பேசினார்.
நாங்கள் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும், ஐ.நா. சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இதையெல்லாம் பார்த்து அரண்டுபோன ராஜபக்ச உடனே, சுப்பிரமணியன் சுவாமியை இலங்கைக்கு அழைத்து அமெரிக்கத் தீர்மானத்துக்கு முட்டுக்கட்டை போடத் திட்டமிட்டார்.
பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் தொடர்புள்ள சுப்பிரமணியன் சுவாமியும் உடனே அமெரிக்காவுடன் பேசி சுமுகமாகக் காரியத்தை முடிப்பதாகச் சொல்லி இருக்கிறாராம்.
தமிழர்களுக்கு ஆதரவாகச் சில சிங்கள மனித உரிமை ஆர்வலர்கள் ஜெனீவாவில் முகாமிட்டு எங்களோடு இணைந்து லாபி வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அவர்களை அச்சுறுத்த ஐ.நா. மன்றத்துக்கு உள்புறமாகவே சிங்கள இராணுவ அதிகாரிகள் நடமாடுகிறார்கள்.
ஜெனீவாவில் நொடிக்கு நொடி புதியக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கூடிய விரைவில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்தால் மட்டுமே, தீர்மானத்துக்கு மரியாதை இருக்கும் என்கிறார்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு​ வருவதாகப் பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா, கடந்த ஜனவரி 18-ம் தேதியில் இருந்து 22-ம் தேதி வரை வவுனியாவில் நடந்த கூட்டுப் பயிற்சி முகாமில் கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்த‌ பயிற்சியை இலங்கை இராணுவத்துக்கு அளித்திருக்கிறது. இதை எங்கே போய்ச் சொல்வது?
ஜூனியர் விகடன்

ad

ad