புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013




            லங்கைத் தமிழர்களுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவர கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று அறிவித்த ஜெ. அரசின் உத்தரவு பிசுபிசுத்து விட்டது.

"...எங்க பிள்ளைங்க நல்ல விஷயத்துக்காகத்தான் இப்படி போராடறாங்க. நீங்க உங்க வேலையைப் பாருங்க'. இப்படி "நறுக்'கென பெற்றோர் தரப்பு பதில் தந்திருக்கிறது பல இடங்களில். இதனால் இந்த ரூட்டை ஓரங்கட்டிவிட்டு கல்லூரி நிர்வாகம் மூலமாக மாணவர்களின் ஃபோர்ஸை குறைக்க எடுத்த நடவடிக்கைகளும் 90 சதவீதம் ஃபெயிலியர் என்ற ரீதியில் போக, அரசோடு சேர்ந்து கையைப் பிசைகிறது காவல்துறை.

காரணம், முன்பை விட கூடுதலாய் போராட்டக் களத்தில் குதிக்கத் தொடங்கியிருக்கின்றனர் மாணவர்கள். சட்டக்கல்லூரி, கலை (ம) அறிவியல் கல்லூரி, ஒரு சில ஐ.டி.ஐ.கள் என்று அணிவகுத்த மாணவர் சக்தி மெல்ல நீண்டு பொறியியல், மெடிக்கல், வேளாண் பல்கலை, இதர பல்கலைகளில் பயிலும் மாணவர்களென ஆயிரக்கணக்கில் திரள் திரளாய் சேர்க்கத் தொடங்கியிருக்கிறது. 

இந்திய அளவில் புகழ்பெற்ற ஐ.ஐ.டி. மாணவர்கள் இந்த விஷயத்தில் கைகோர்த்து களத்தில் இறங்கியிருப்பது அனைத்துத் தரப்பாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டத்துக்கு துணையாக பொதுமக்கள், சினிமாத்துறையினர், வணிக மக்கள் என்று பலர் கைகோர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.


""வந்தா பேசிட்டு போயிடுங்க ஸார்... எங்களுக்கு பின்னாலோ, முன்னாலோ அரசியல் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் இருக்கத் தேவையில்லை. மாணவர் சக்தி என்ன வென்று இந்த நாட்டுக்குக் காட்டப்போறோம். இனப்படு கொலைக்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமும், நிவாரணமும், ராஜபக்ஷேவுக்கு தண்டனையும் பெற்றுத் தருகிற க்ளைமாக்ஸ் பகுதிக்கு வந்திருக்கிறோம். 

இதை... நாங்களா, அரசாங்கமாங்கற பலப்பரீட்சை மூலமா உலகம் தெரிஞ்சுக்கப் போகுது..'' என்பதே அனைத்து மாணவர்களின் குரல்.

தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திவ்யா, ""கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை என்று மாநில அரசு அறிவித்த பின்னரும், மாணவர்களாகிய நாங்கள் ஒன்றாய் விடுதி, கல்லூரிகளுக்கு அருகாமையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்கிறோம். அடுத்த கட்டத்துக்கு இந்தப் போராட்டத்தை கொண்டு செல்வது பற்றி அப்போது கலந்தாலோசிக்கிறோம். பிரதான 17 கல்லூரி மாணவர்கள் எங்கள் இணைப் பில் இருக்கின்றனர். முக்கிய சாலைகள், அரசு அலு வலகங்கள் முற்றுகை குறித்த திட்டங்களை இங்கே தான் வடிவமைத்துக் கொள்கிறோம்'' என்கிறார். 

பல பரிமாணங்களில் வலுவாகிக் கொண்டு செல்கிற இந்த மாணவர் போராட்டத்தில் ஒருசில சம்பவங்களை இங்கே பதிவு செய்கிறோம்.

திருப்பூர் அனைத்து கல்லூரி மாணவ- மாணவியர் (ரயில் மறியல் போராட்டம்)

விழுப்புரத்தில் முனைவர் பால்ஸ் பொறியியல் கல்லூரி, ஏழுமலை பாலிடெக்னிக், மும்பையில் தமிழீழத்துக்கான மாணவர் கூட்டமைப்பு, இசைக்கல்லூரி, குமரி மாவட்ட ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி, சென்னை ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி, கோவை தனலட்சுமி சீனிவாசன், நேரு ஆகிய என்ஜினியரிங் கல்லூரிகள் (மற்றும்) நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, சர்.தியாகராயர் கல்லூரி, எம்.சி.ராஜா சட்ட மாணவர் விடுதி, சென்னை பல்கலைக்கழகம், புதுடெல்லி பல்கலைக்கழகம், புதுடெல்லி தமிழ் மாணவர் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்க, இலங்கைக்கு எதிரான தீர்மானம் இயற்ற வலியுறுத்தி பாண்டிச் சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முற்போக்கு மாணவர் சங்க செழியன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், "பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு வை.பாலா, சட்ட மாணவர் பாஸ்கர் உட்பட புறப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய் யப்பட்டனர். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரசின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.  

மதுரை விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி கல்லூரி, கரூர் அரசு கலைக்கல்லூரி, கொங்கு கலைக்கல்லூரி, வள்ளுவர் கலைக்கல்லூரி, வெங்கட்ராம் ஐ.டி.ஐ., திருச்சி எம்.ஏ.ஆர். பொறியியல் கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பா அரசு கல்லூரி, காட்பாடி சட்டக்கல்லூரி, பொள்ளாச்சி டி.ஆர். மகாலிங்கம் கல்லூரி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம், கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி, சென்னை ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி என அணிவகுக்கின்றன கல்லூரிகளின் பட்டியல். இதுதவிர எஸ்.எஃப்.ஐ. 20-ந்தேதியன்று மாநிலந் தழுவிய அளவில் மிகப்பெரிய மாணவர் சக்தியோடு தமிழக வீதிகளில் இறங்கிப் போராடவுள்ளதாக வந்துள்ள தகவல் ஆட்சியதிகார தரப்பை கிலியடிக்க வைத்துள்ளது.


முதலில் தலைநகர் சென்னையிலிருந்து... நந்தனம் கலைக்கல்லூரி மாணவரான முரசொலி, கல்லூரி விடுமுறைக்குப் பின் சின்னதாய் ஒரு பந்தலை வெளியே அமைத்து சக மாணவர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்க... வலுக்கட்டாயமாக அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது போலீஸ். அதன்பின் போராட்ட வடிவத்தை மாற்றும் முயற்சியில் களம் இறங்கினர் அனைத்துக் கல்லூரி மாணவர்கள். 

சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் இருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதாக முடிவெடுத்து 18-ந்தேதி காலை வீதியில் இறங்கினர் அனைத்து கல்லூரி மாணவர்களும். புலித்தலைவரின் மகன் பாலச்சந்திரனின் முகத்தை அணிந்தபடி ஒரு குழுவும் செருப்புமாலை அணிவித்த ராஜபக்ஷே வடிவில் ஒரு குழுவும் என சுமார் ஆயிரம் மாணவர்கள் திரள, திணறித்தான் போனது காவல் துறை. முன்னேற விடாமல் தடுக்கப்பட்ட மாணவர்களை போலீஸ் வேனில் ஏற்றி அருகிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. ஹாலில் தங்க வைத்தனர். அங்கேயே அடுத்தகட்ட திட்டங்களை ரகசியமாக வகுக்கத் தொடங்கினர்.

அடுத்ததாய் அண்ணா பல்கலைக்கழகம், இங்கே மாணவர்கள் வளாகத்தில் அமர்ந்தபடி உள்ளிருப்புப் போராட்டம் என்று அறிவித்த சில நிமிடங்களிலேயே மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் மூலமாக செல்லமாய்(?!) மிரட்டல் விடப் பட்டிருக்கிறது. "போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டால் பெயர், முகவரி குறித்துக் கொள்ளப்பட்டு பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று நோட்டீஸ் போர்டில் எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கப்பட்டதாக மாணவர்கள் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். 18-ந்தேதி திங்கட்கிழமை காலை போராட்ட ஏற்பாடுகளை மாணவர்கள் தொடங்க முற்பட்ட வேளையில் அவர்களை பல்கலைக்கழகத்தின் உள்ளேயே அடைத்து சிறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியது நிர்வாகம். சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை அதிரடியாய் மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டனர் சில நிமிடங்களில். இதையடுத்து கல்லூரி, விடுதிகளுக்கு விடுமுறை அறிவிப்பை உடனடியாக வெளியிட்ட நிர்வாகம், விடுதிகளை மாலை 5 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் கல்லூரி, பல்கலை என்பதைக் கடந்து 10-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் போராட்டகளத்தில் இறங்கியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்குப் பின்புறம் அமைந்துள்ள அரசு உயர் நிலைப் பள்ளியின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து தங்களின் பிஞ்சு நெஞ்சில் எழுந்த கோபக்கனலை பதிவு செய்துள்ளனர்.

""எங்க வயசுப் பையன் பாலச்சந்திரன் நல்லா வாழ வேண்டியவன். அவங்கப்பா மேல கோபம்னா இவனை ஏன் கொல்லணும்? சாகறதுக்கு முன்னாடி எவ்வளோ அழகா அவன் பிஸ்கட் சாப்பிடறான். இனிமேல் அந்த முகத்தைப் பாக்க முடியுமா?'' என்று நம்மைப் பார்த்து மாணவர்கள் கேட்ட கேள்வி நெருப்பில் கைபட்டதைப் போல "சுளீர்' என்றது.

ஈரோட்டிலிருந்து சென்று கோவையில் பயிலும் சட்ட மாணவர்கள் 100 பேர் திடீரென ஈரோட்டில் ரயில் மறியலில் இறங்க அங்கே பரபரப்பு பற்றிக் கொண்டது. ஈரோடு செங்குந்தர் தனியார் கல்லூரி, பார்மஸி கல்லூரி மற்றும் அனைத்துக் கல்லூரி கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. அதேபோல் நாமக்கல் செல்வம் கல்லூரி மாணவர்கள் 500 பேர் தொடங்கியுள்ள உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டமும் பெரிதாகியிருக்கிறது.

திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மற்றும் பி.ஜி.பி. கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்க... பி.ஜி.பி. கல்லூரி நிர்வாகம் மட்டும் அதிகளவு பிடிவாதம் காட்டி மாணவர்களை மிரட்டத் தொடங்கியிருக்கிறது.

இதில் சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக் கிறது. இதனால் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அறிவித்துள்ளனர். இதுமேலும் டென்ஷனை எகிற வைத்துள்ளது.

அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சுமார் 1500 பேர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இதன் தொடர்ச்சியாக நடத்தினர். சிலர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்து கோஷமிட்டனர். பாட்டாளிப் படிப்பகம் என்ற இடத்தில் இதன் இன்னொரு பகுதியாக 10 மாணவர்கள் தொடர் உண்ணாநிலை போராட்ட முடிவை அறிவித்துள்ளதால் மாவட்டத்தில் கூடுதல் டென்ஷன் பரவியிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் சேவியர் கல்லூரி, ஃபெக்ஸ், அம்பை, பி.எஸ்.என். என பல கல்லூரிகளின் மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதில் பி.எஸ்.என். கல்லூரி மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம் எட்டாவது நாளாக நீடிக்கிறது. இதன் மாணவரான பார்வையற்ற வள்ளியூரைச் சேர்ந்த லிங்கதுரை, ""ஈழத் தமிழர் வேதனையை பிறர் படித்துச் சொல்லக் கேட்டு கலங்கிப் போய் நிற்கிறேன். சூதுவாதற்ற சிறுவன் பாலச்சந்திரனை எப்படித்தான் கொன்றார்களோ பாவிகள்?'' என்று குரல் தழுதழுக்க பேசினார் நம்மிடம்.

பார்வையற்ற மற்றோர் ஆராய்ச்சி மாணவர் பெரியதுரை, ""ஒண்ணரை லட்சம் இலங்கைத் தமிழர்களை மாற்றுத் திறனாளியாக்கி அழவிட்டிருக்கிற ராஜபக்சேவை எப்படிப் பார்த்தாலும் அவன் கொடூரமானவனாகவே காட்சியளிக்கிறான். 

இந்தியாவின் பாவக்கறையை போக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மேலும் வலுவானதாக்கி போராட்டத்தில் வெற்றி காண அரசு முன் வரவேண்டும்'' என்றார். நூற்றுக்கணக்கான இலங்கை போர்க்குற்றப் படங்கள் நெல்லை மண்ணில் சுற்றி வருவதை தடுக்க போலீசார் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த படங்கள் மொத்தமாய் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேரும்படியான வேலையை மாணவர்களே கையில் எடுத்திருப்பதாக வந்த தகவல்தான் போலீசாரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டப் பதிவுகள் உணர்வுப்பூர்வமாய் அமைந்துவிட்டிருக் கிறது. ஆர்.வி.எஸ்.கலைக்கல்லூரியின் 700 மாணவர்கள் வழக்கம் போல் கல்லூரிக்கு காலையில் வந்து அங்கிருந்து 5 கி.மீ.தூரமிருக்கிற ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து ஆட்சியர் வெங்கடா சலத்திடம் மனு கொடுத்தனர். 

அதற்கு முன்னதாக ராஜபக்சேவை கண்டித்து கோஷம் எழுப்பினர். இவர்கள் நடந்து சென்ற வழிப்பாதையில் அகதிகள் முகாம் 7 இடங்களில் இருக்கின்றன. மாணவர்களின் இந்த போராட்ட வடிவை அறிந்து முகாம் வாசலுக்கு வந்த தமிழர்கள், "நீங்க நல்லாயிருப்பீங்க ராசா' என்று கண்ணீர் மல்க கும்பிட்டு வழியனுப்பி வைத்தது உருக்கமாய் இருந்தது.

"தேவை பொதுவாக்கெடுப்பு, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்திடு' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களாய் வைத்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். இவர்களின் உண்ணாவிரதமும் ஆறாவது நாளாய் தொடர்கிறது. சின்னமுத்துகவுதம், சந்தோஷ்குமார், தினேஷ்குமார், கோபிநாத், மாரப்பாண்டி, பிரபாகரன், அழகிய நம்பி, காமேஷ், தானுப்ரியா, ராதிகா, காமினி உள்ளிட்டோர் மயங்கிய நிலையில் காணப்படுகின்றனர். தினேஷ், அழகிய நம்பி, தானுப்ரியா, ராதிகா ஆகியோரின் உடல் நிலைமை பின்னடவைச் சந்திக்க அவர்கள் மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். "போராட்டத்துல இறங்கினா கவர்மெண்ட்டு வேலை மட்டுமல்ல, எந்த வேலையும் கிடைக்காது, குடும்பம் நடத்தவும் முடியாது. பொடா சட்டம் மாதிரி ஒரு சட்டத்துல தூக்கி உள்ளே போட்டுட்டா எதிர்காலம் போயிடும்' என்று பேராசிரியர்கள் மாணவர்களை மிரட்டுவதாக ஒரு தகவல் பரவியது.

அதை உறுதி செய்யும்விதமாக மாணவர்களின் பெற்றோர்களும் இதே ரூட்டில் தொலைபேசியில் மிரட்டப்பட்டுள்ளனர். இத்தகு உளவியல் அச்சம் தரும் மிரட்டலைக் கடந்து மிக வேகமாய், வலுவாய் பரவிவருகிறது மாணவர் போராட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் மாணவர் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளரான சட்டக்கல்லூரி மாணவர் சத்தியக் குமரன், ""மாணவர்களை ஒருங்கிணைக்கவிடாமல், எங்கள் உண்ணாவிரதத்தை நசுக்கிட மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் வேலைபார்க்கிறார்கள். எங்களை டார்ச்சர் செய்கிறார்கள். இயற்கை உபாதைகளை கழித்திடவும் வழியின்றி கழிப்பறைகளைப் பூட்டி விட்டு காவலுக்கு நிற்கிறார்கள் இந்த போலீசார். போராட்ட மாணவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றும் மிரட்டி வருவதோடு அவர்கள் குடும்பப் பின்னணி பற்றி யெல்லாம் விசாரித்து வருகின்றனர்'' என்று கொதித்தார் நம்மிடம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் புதுப்புது வடிவங்களுடன் மாணவர் போராட்டம் வலுப்பெற்று வருகிற வேளையில் கல்லூரி, பல்கலை மட்டுமல்ல, "நாங்களும் துணை நிற்போம்' என்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் புத்தகத்தை மூடிவிட்டு, கொடூர யுத்தத்துக்கு நீதி கேட்டு களத்தில் இறங்கி நிற்பது சாதாரண விஷயம் அல்ல.

-நமது நிருபர்கள்
படங்கள் : ஸ்டாலின், அண்ணல் & அசோக்


ஒரு கையில் மஞ்சள் பை, மறு கையில காலி பிளாஸ்டிக் பாட்டிலுடன் மதுரை கோரிப்பாளையம், கண்ணப்பா மோட்டார்ஸ் பெட்ரோல் பங்க்கில் நுழைந்த அந்த வாலிபருக்கு 30 வயதிருக்க லாம். "பாட்டில்ல எல்லாம் பெட்ரோல் தரமாட்டோம்' என்று தர மறுத்ததை மீறி கெஞ்சிக் கூத்தாடி பெட்ரோலை வாங்கிய அந்த வாலிபர் அதிரடியாக பங்க்கின் எதிரேயே தலையில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். அந்த எரியும் நெருப்போடு மீண்டும் பங்க்கில் நுழைந்து ஊழியர் ஆரோக்கியராஜ் கையிலிருந்த பெட்ரோல் போடும் பம்ப்பை பிடுங்கி மொத்தமாய் தன் பக்கம் திருப்பிட... பங்க்கிலிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட் டம் பிடித்துள்ளனர். இதில் ஆரோக்கியராஜுக்கும் கை கருகியது. "தமிழ் வாழ்க! தனிஈழம் மலர்க' என்ற குரலை உச்சகட்ட ஒலி யாய் ஒலித்தபடி அங்கேயே மடங்கி சுருண்டார் அந்த வாலிபர்.

தமிழ் வாழ்க தனி ஈழம் மலர்க' என்றெல்லாம் அவர் சொல்லவில்லை என்று சில நிமிடங்களுக்குப் பின் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் தனபால் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். கருகி சாய்ந்த வாலிபரின் பாதுகாப்பில் இருந்த மஞ்சள் பையை பத்திரமாக கைப்பற்றிய போலீஸ், அதில் உள்ள விவரங்கள் பற்றி மூச்சே விடவில்லை. மாணவர்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்க சென்னை ஐகோர்ட் வக்கீல் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மே-17 இயக்கத்தினர் மெரினா கடற்கரையில் தம் கண்டனத்தை கூடி பதிவு செய்தனர். இப்படி போராட்டத்தில் பல வடிவங்கள் இருக்க, உயிரை மாய்த்து வேகம் காட்டியிருக்கிறார் இந்த வாலிபர்.

ad

ad