புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புற நகர் பகுதியிலும் கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் முழக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை மெரினா  கடற்கரையில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். பல்வேறு கல்லுரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள்.
போராட்டத்தின் நடுவே ராஜபக்சேவின் உருவப் படத்தை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்ட களத்தில் இருந்த மாணவர்கள் கூறும்போது, மத்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதுவரை மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடையும். டெசோ மாநாடு ஒரு நாடகம். மாணவர்களின் போராட்டத்தை மத்திய அரசு அலட்சியப் படுத்துவதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அண்ணா சாலை அருகில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் 50 பேர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 60 பேர் காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை இன்று முற்றுகையிட வந்தனர்.  ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் இருந்து நடந்து வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கோஷமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50 பேர் தாமோதரன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் வள்ளீஸ்வரன் தோட்டத்தில்  அங்குள்ள மக்கள் 50 பேர் திரண்டு வந்து இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை குயில் தோட்டத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அங்குள்ள அப்பு தெரு, பஜார் ரோடு, டொம்மிகுப்பம், சீனிவாசபுரம், அம்பேத்கர் பாலம் பகுதி மக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்து, ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வலியுறுத்தி கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி உண்ணாவிரதத்தில் கோஷமிட்டனர். உண்ணாவிரதத்தில் ஜெயக்குமார்,  வேனில் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் அடையார் கிரீன்வேஸ் ரோட்டில் பொதுப்பணித்துறை  அலுவலகம் எதிரே நாராயணசாமி தோட்டம் பகுதி மக்கள் இலங்கை பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். இதில் நாராயணசாமி தோட்டம் 2-வது தெரு, 3-வது தெரு மக்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். போராட்டத்துக்கு டி.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை மேலும் முன்னேறி செல்ல விடாமல் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜி.எஸ்.டி. சாலையில் மாணவர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 100 பேரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். அப்போது காற்றுக்காக பஸ்சின் மேல்பகுதியில் உள்ள இரும்பு தகடு வெண்டிலேட்டரை தூக்கினர். இதில் இரும்பு தகடு உடைந்து பாதுகாப்புக்கு நின்ற பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலையில் விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

வியாசார்பாடி பி.வி. காலனி, அன்னை சத்யாநகர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் வக்கீல்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வியாசர்பாடி தீர்த்தங்கன் சாலை, கல்லூரி சாலை வழியாக 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று பி.வி.காலனி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருமுல்லைவாயலில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 50 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். பட்டாபிராமில்  இந்து  கல்லூரி மாணவர்கள் 50 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஆவடியில் ஆட்டோ டிரைவர்கள் 300 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.  இதனால் அந்த பகுதியில் இன்று ஆட்டோக்கள் ஒடவில்லை.

கொரட்டூரில் இளைஞர் சங்கம் சார்பில் 150 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் துரைப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கையை கண்டித்து சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடந்தது.

இதில் டைரக்டர்கள் ஆபாவாணன், ஆர்.வி.உதயகுமார், சித்திரைச்செல்வன், ரமேஷ் செல்வன், புகழேந்தி, தங்கராஜ், ராஜீவ்மேனன், பாலி ஸ்ரீரங்கம், பத்ரி, நடிகர் அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ad

ad