புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2013


இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்திய காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி அதிரடி
ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், இந்தியா என்ன நிலை எடுக்கப்போகிறது என்பதை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இந்த நிலையில்
, காங்கிரஸைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி:
கேள்வி:  கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வரும் டெசோ அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் காங்கிரஸ் எப்படிப் பார்க்கிறது?
பதில்:  இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் பற்றி நன்கு அறிந்தவர் தலைவர் கலைஞர். அவர், 'இலங்கைப் பிரச்னையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும்.
அதாவது, ராஜீவ்காந்தி மரணத்துக்கு முன்; ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின்’ என்று ஒருமுறை விளக்கிக் கூறியுள்ளார். அதுதான் சரியான பார்வை.
இன்று, இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஒரு தளம் வேண்டும். அதன் மூலமாகத்தான் உலக நாடு​களின் கவனத்தை ஈர்க்க முடியும்.
அதற்கு ஏற்ற அமைப்பு, கலைஞர் தலைமையில் இயங்கும் டெசோ அமைப்பு என்று கருதுகிறோம்.
கேள்வி:  ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இலங்கைத் தமிழர்களை காங்கிரஸ் பழிவாங்குகிறதா?
பதில்:  நாங்கள் விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோமே தவிர, இலங்கைத் தமிழர்​களை எதிர்க்கவில்லை.
வன்முறைக்கோ, தீவிரவாதத்துக்கோ, பயங்கரவாதத்துக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளித்தது இல்லை.
தமிழகத்தில் இருக்கிற சில கட்சிகள், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால்தான் இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற தவறான கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
அன்னை இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் சுட்டுக் கொன்றார். அவரை காங்கிரஸ் ஒரு சீக்கியராகப் பார்க்கவில்லை. அவரைத் தீவிரவாதியாகவே பார்த்தது. இந்திராவைச் சுட்டுக் கொன்றது சீக்கியர்கள் என்று நாங்கள் கருதி இருந்தால், இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கை நாங்கள் தேர்வுசெய்திருக்கவே மாட்டோம்.
அதே​போல்தான் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தீவிரவாதியாகவே பார்க்கிறோம். தமிழராகப் பார்க்கவில்லை.
ராஜீவ் காந்தி கொலைக்காக ஒருபோதும் இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸ் இயக்கத்துக்கோ, இந்திய அரசாங்கத்துக்கோ பகை எதுவும் கிடையாது.
கேள்வி:  இலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்:  யுத்தம் என்று ஒன்று நடந்தால் அதில் அப்பாவி மக்களும் கொல்லப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா முன்பு ஒருமுறை மிகச் சரியாகச் சொன்னார்கள்.
அந்தக் கூற்றுக்கு தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க முடியாமல் சோம்பிக் கிடந்தனர். காரணம், ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை அவர்களுக்குத் தேவை.
ஆனால், அவர்கள் பாயக்கூடிய ஒரே இடம் காங்கிரஸ் இயக்கம்தான். அவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று சொல்வதே விடுதலைப் புலிகளைத்தான். விடுதலைப் புலிகளைத் தவிர்த்து இலங்கையில் வாழும் எந்தத் தமிழர்களைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை.
இலங்கையில் போர் நடந்த பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கு ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய குற்றம் விடுதலைப் புலிகளைச் சாரும் என்று ஐ.நா. மனித உரிமைப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டு, காங்கிரஸையும் இந்திய அரசையும் குறைசொல்வது அவர்களுடைய பேதமையைக் காட்டுகிறது.
கேள்வி: தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்காத ராஜபக்சவை, இந்தியாவுக்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதைத் தடை செய்யலாமே?
பதில்: ஒரு நாட்டின் தலைவர், இன்னொரு நாட்டுக்கு வருவதைத் தடைசெய்வது என்பது உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது. சார்க் நாடுகள் அமைப்பில் இலங்கையும் உள்ளது.
இலங்கையில் இப்போது லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இன்றளவுக்கும் வியாபாரத் தொடர்பு இருக்கிறது.
ராஜபக்ச இங்கு வரக் கூடாது என்று தடுத்துவிட்டால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த உதவியையும் செய்யும் வாய்ப்பு கிடைக்காது.
கேள்வி: ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?
பதில்: ஏற்கெனவே அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம். இப்போது கொண்டுவர இருக்கும் தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ராஜபக்சவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தத் தீர்மானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா குரல் கொடுப்பது என்பது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு சமம்.
வியட்நாமிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவை விடவும் மனித உரிமைகளை மீறியவர்கள் யாரும் இல்லை.
இலங்கையில் கோரமான யுத்தம் நடந்தபோதும்கூட அமெரிக்கா மௌனமாகவே இருந்தது.
ஆனால், இன்று இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கண்டு, இலங்கைக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்க அமெரிக்கா விரும்புகிறது. அதனுடைய வெளிப்பாடே இந்தத் தீர்மானங்கள்.
எது எப்படி இருப்பினும், இலங்கையைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்மானத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.''
அதிரடியாக முடித்தார் அழகிரி!
ஜூனியர் விகடன்

ad

ad