புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013




          கில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகை யிட்டு கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களை அவர்களில் ஒருவராக சந்தித்துப் பேசினோம். மாணவர்களை கோபமூட்டக்கூடிய கேள்விகளே அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டனர் அவர்கள். akeeran

திவ்யா, ரேகா, நிலவுமொழி செந்தாமரை,    சுசீமாலினி, மாசானிமோனிஷா மற்றும் நந்தினி ஆகியோரிடம் பேசினோம்.

மாணவர் போராட்டமென்பது குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை மட்டுமே குறிவைத்து நகர்கிறது என்றும் இதனால்தான் ஆளும்தரப்பும், அந்தக் கட்சியை பிடிக்காதவர்களும் ஒரே நேர்கோட்டில் நின்று உங்களுக்கு ஆதரவளித்து தூண்டிவிடுகிறது என்கிற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருவதை உணர்கிறீர்களா? உண்மையில் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?


மாசானி மோனிஷா : உங்கள் கேள்வியே கோபத்தை உண்டுபண்ணுகிறது. எங்களை வைத்து யாரும் அரசியல் செய்கிற சூழலை நாங்கள் உருவாக்கி கொடுக்கவில்லை. அது நடக்கவும் நடக்காது. வலைத்தளங்களில் வலை விரித்து எங்களுக்கான ஆதரவை மாநிலந்தாண்டி அயல் நாடுகள் வரை ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு உணர்வுப்பூர்வமான போராட்டத்தின் வேகத்தையும், திரளும் மாணவர் சக்தியையும் காண பொறுக்காமல் ராஜபக்ஷே ஆதரவு நிலையில் ஊறிப் போன சக்திகளின் போலியான குற்றச்சாட்டுகளை நாங்கள் கனவில் கூட பொருட்படுத்துவதில்லை.

முதலில் ஆயிரக்கணக்கில் திரண்டீர்கள், பின்னர் அதுவே பாதியானது. அதன்பின் வந்த நாட்களில் இன்னும் குறைந்து போனது. ஒரே நேரத்தில் 10 மண்டபங்களில் அடைக் கப்பட்ட நிலை மாறி இன்று இந்த சிறு சமூகநல கூடத்தில் வெறும் 120 பேர் என்றளவில் சுருங்கிப் போயிருக்கிறீர்களே?

திவ்யா : முதலில் ஆயிரக்கணக்கில் திரண்டபோது ஒரு சில இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டம், போராட் டங்கள் நடந்தன. இப்போது மாநிலம் முழுவதும் நடக் கிறது. போராட்டத்தை பொதுமக்கள் கையிலெடுத்திருக் கிறார்கள். இதுவரை எந்தப் போராட்டத்திலும் ஈடு பட்டதில்லை என்ற லிஸ்ட்டில் இருந்த கல்லூரியின் மாணவர்களும் வீதிக்கு வந்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் ஆயிரம் பேர் திரண்டது மாறி, ஆயிரம் இடத்தில் தலா 100 பேர் என்று திரண்டு கொண்டிருப்பது ஒரு மகத்தான வெற்றிதானே? இன்னும் சொல்வதென்றால் போராட்ட முறைகள் பல வடிவங்களாய் மாறிக் கொண்டல்லவா வருகிறது?

ரேகா : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். கடைகளை அடைத்து விட்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் என்று வணிக பெருமக்கள், பொதுமக்கள் ஆதரவை பெற்றிருக்கிறோமே இது வெற்றி தானே?

மாணவர் போராட்டம் ஒருபோதும் குறையாது, நிற்காது... தீர்வு கிடைக்கும்வரை அவரவர் ஊரில் மாணவர்கள் போராட்டத் தை நடத்திக் கொண்டுதானிருப்பார்கள்... எங்களை நாங்களே வழிநடத்திக் கொள்வதால் இந்த நிமிடம் வரையில் தெளிவாய் இருக்கிறது எங்கள் பயணம். இது குலையக்கூடாது என்பதால்தான் அரசியல் சக்திகளை உள்ளே வரவேண்டாம் என்கிறோம்.

உங்களின் போராட்டக் குழுவிலேயே குளறுபடி இருக்கிறதே... ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு போராட்டக் குழுவாக இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் களத்தில் இருக்கின்றன. உங்களை ஒடுக்க நினைக்கும் சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்தால் நீங்கள் சிதறிவிடும் வாய்ப்பு அதிகமுள்ளதே?

சுசீமாலினி : அதற்கு வாய்ப்பே இல்லை. போராட்ட களத்தில் இருக்கிற அத்தனை மாணவர் குழுக்களும் தெளிவாகவே இருக் கின்றன. இல்லையென்றால் 20 நாட்களைக் கடந்து இந்தப் போராட்டங்கள் நீடித்துக் கொண்டிருக்காது. இரண்டாவது நாளே முடிவுக்கு வந்திருக்கும்.

திவ்யா : உங்கள் கேள்வியில் இருக்கும் உண்மை புரிகிறது. ஆனாலும் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது. பலகீனமான கூட்டமைப் பில் பலகீனமானவர்களே இருப்பார்கள். அவர்களின் போராட்டத்திலும் பலம் இருக்காது. அவர்களை மட்டும்தான் சூழ்ச்சி சக்திகளால் பிரித்துக் கொண்டு போகமுடியும். 

மாசானி மோனிஷா : சற்றேறக்குறைய 40 கல்லூரிகள் சென்னையில் இருக்கின்றன. ஒரு கல்லூரிக்கு ஒரு பிரதிநிதி என்றளவில் இதுபோன்ற பல கேள்விகளை நாங்களே எழுப்பி அதற்கு மாற்று என்ன என்பதையும் விவாதத்துக்கு கொண்டு வருகிறோம். உண்மை நிலை இப்படியிருக்கும் போது உணர்வுகளை மழுங்கடிக்கும் வேலை என்பது செல்லுபடியாகாத ஒன்று.

விளையாட்டு வீரர்களையும் விடமாட்டீர்களா?

நந்தினி : கிரிக்கெட் விளையாட்டு என்பது உல களவில் அனைத்து நாடுகளும் முக்கியத் துவம் அளிக்கிற ஒரு விளை யாட்டு. அது ஐ.பி.எல். என்ற பெயரில் இன்னும் விசாலமாகி இருக்கிறது. இந்தியா-இலங்கை மோதுகிற கிரிக்கெட் என்றால் பெரிதாய் தெரியும். ஐ.பி.எல்.லில் அப்படித் தெரியாது. ஆகவே தான் எந்த வழியிலும் இலங்கை வீரர்கள் இங்கே நுழையக் கூடாது என்று சொல்கிறோம். சென்னை போலீஸ் கமிஷனரிடமும் இது குறித்து மனு கொடுத்திருக்கிறோம். தமிழக அரசும் எங்களின் கருத்துக்கு மதிப்பளித்திருக்கிறது. மத்திய அரசு மட்டும் இன்னமும் தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் இலங்கையை நட்பு நாடு என்று பிரகடனப் படுத்துவதை ஏற்க முடியவில்லை.

உங்களின் அடுத்த கட்டம் எதை நோக்கி... அல்லது எதை குறிவைத்து?

சுசீமாலினி : திட்டமிட்டு, தீர்மானித்து, செய்து முடிக்க... அதை அரங்கேற்றும் கடைசி ஒருநிமிட கால அளவில்தான் வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். 

ஒவ்வொரு முறையும்... இதனால்தான் வெற்றிகளும் கிடைத்து வருகிறது. தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது''  என்று உற்சாகமாக நமக்கு விடைகொடுத் தார்கள். . 

"49 ஓ'வைப் பயன்படுத்தி நாமும், நம் குடும்பத்தாரும் தேர்தலை புறக்கணிப்போம்' என்று ரகசியமாய் முடிவெடுத்து அதை அறிவிக்கும் தேதி யையும் ரகசியமாக வைத்திருக்கின்றனர் மாண வர்கள்.

-ந.பா.சேதுராமன்
படங்கள்: அசோக்

ad

ad