புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013


இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத்
தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி
வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது.

இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக
திமுக கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவை
இந்தியாவுக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் திமுக மிகப்
பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன்
படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதும் மத்திய அரசை விமர்சிக்க
கருணாநிதி தயங்கவில்லை. இதைவிட பெரிய போர்க் குற்ற சாட்சி இல்லை என்று
சொன்னது திமுக. கருணாநிதியின் அந்த அறிக்கையின் போது இதை சாக்காக வைத்து
திமுக வெளியேறிவிடும் என்று பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த பரபரப்பின் அடுத்த கட்டமாக, நேற்று ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி.
திருச்சி சிவா, பகிரங்கமாகவே காங்கிரஸ் அரசை மிரட்டினார். உங்களுக்கு
நாங்கள் வேண்டுமா? இலங்கை வேண்டுமா? என்றே நேரடியாக மிரட்டினார். இதேபோல்
காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ஞானதேசிகன், புலிகளைப் பற்றி விமர்சனமான
கருத்தை முன் வைக்கப் போய் வரிந்து கட்டிக் கொண்டு திமுக மல்லுக் கட்டியது.
பின்னர் அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்த போதும் திமுக எம்பி
வசந்தி ஸ்டான்லி கூட எழுந்து நின்று அமைச்சருக்கு எதிராகப் பேசினார்.
ஆனாலும் இலங்கையை எதிரிநாடாகக் கருத முடியாது என்று பகிரங்கமாகவே மத்திய
அரசு கூறிவிட்டது.

பாஜகவுக்கு திமுக அழைப்பு-காங்கிரசுக்கு அழைப்பில்லை:

இந்த நிலையில் டெல்லியில் மார்ச் மாதம் டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு
நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு ஏற்கெனவே பாஜக தலைவர்கள், இடதுசாரித்
தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களை திமுக அழைத்திருக்கிறது. ஆனால்
காங்கிரஸ் கட்சியை அழைக்கவில்லை.

இலங்கை விவகாரத்தால் திமுகவுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அண்மைக்கால டெசோவின்
தொடர்ச்சியான நடவடிக்கைகள் ஓரளவுக்கு சரி செய்து கொண்டிருக்கிறது. அடுத்த
ஆண்டு லோக்சபா தேர்தல் வரப் போகிறது. அதற்குள் டேமேஜாகிப் போன பெயரை சரி
செய்தாக வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது.

காங்கிரஸுடன் கை கோர்த்துக் கொண்டு தேர்தல் களத்துக்குப் போவதை திமுகவினர்
விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் தற்போது மத்திய அரசு இருக்கும்
கோபத்தை
அப்படியே வைத்துக் கொண்டு ‘இலங்கை' தமிழருக்காக பதவி அதிகாரங்களை தியாகம்
செய்தோமே என்று தேர்தலில் பேசுவதற்கு வாய்ப்பாக மத்திய அரசில் இருந்து
வெளியேற திமுக திட்டமிட்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.

ராகுல்தான் முக்கிய காரணம்

இனப்படுகொலை நிகழ்ந்தபோதும் அதன் பின்னரும் கூட காங்கிரஸுடன் கரம் கோர்த்த
திமுகவுக்கு ஏன் இப்படி திடீர் ஞானோதயம் என்ற கேள்வி எழலாம். எல்லாம்
சாட்சாத் ராகுல் காந்தி புண்ணியம்தான்!

காங்கிரஸ் கட்சியில் பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்த காலம் முதல் எத்தனையோ
முறை சென்னை வந்து சென்றிருக்கிறார். ஆனால் கருணாநிதியை ஒரு பொருட்டாகக்
கூட அவர் மதித்து நடந்ததே இல்லை. ஒருபோதும் கருணாநிதியை சந்தித்துப்
பேசியதும் இல்லை. இப்பொழுது ராகுல் காந்தி, காங்கிரஸின் துணைத் தலைவர்
ஆகிவிட்டார்.

திமுகவை மதிக்க முடியாது என்ற மனோநிலையில் இருக்கும் ராகுல் காந்திதான் இனி
காங்கிரஸின் ‘செயல் தலைவர்' என்றாகிவிட்டது. அப்படிப்பட்ட ராகுல்
காந்தியுடன் உறவு வைத்துக் கொள்வதை சகிக்க முடியாது என்பதுதான் கருணாநிதி
மற்றும் திமுகவினரின் எண்ணம்.

இந்த ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியோடு உறவு வைத்து
அசிங்கப்படுவதைவிட இலங்கைப் பிரச்சனைக்காக ‘கூட்டணியை' விட்டு இப்போதாவது
வந்தோம் என்ற கோதாவுடன் களம் இறங்குவதே சிறந்தது என்பது திமுக
உடன்பிறப்புகளின் எண்ணமாக இருக்கிறது.

தனித்துவிடப்படும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிடும் நிலையில் அக்கட்சி ‘அனாதையா'கத்தான்
நிற்கப் போகிறது. ஏனெனில் ஈழத் தமிழர் விவகாரத்தில் மழுப்பல் நிலை
எடுக்கும் திமுகவே காங்கிரஸை கண்டு கொள்ளாத போது உறுதியான நிலைப்பாடு
கொண்டிருக்கும் அதிமுக நிச்சயமாக காங்கிரஸ் அணியில் இணைய வாய்ப்பில்லை.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேருவதால்
அதிமுகவுக்கு நஷ்டமே தவிர லாபம் இருக்காது. மக்களிடம் விலைவாசி உயர்வு
உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் அவ்வளவு கெட்ட பெயரை சம்பாதித்து வைத்துள்ளது
மத்திய அரசு. இதனால் திமுக கழற்றிவிட்டால் தமிழக அரசியல் அரங்கில்
காங்கிரஸ் கட்சி தனித்தே விடப்படக் கூடிய சாத்தியமே இருக்கிறது.

திமுக-அதிமுகவால் கைவிடப்படலாம் எனக் கருதப்படும் பாமக மட்டுமே காங்கிரஸ்
கூட்டணியில் சேர வாய்ப்புண்டு.

ராகுலுக்கு வந்த சோதனை

ராகுல் காந்திக்கும் லோக்சபா, சட்டசபை தேர்தல்களுக்கும் அப்படி என்ன ஏழாம்
பொருத்தமோ! ராகுல் தலைகாட்டும் எந்தத் தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்கு
அப்படி ஒரு பேரிழப்பாகவே இருக்கிறது. இதை இன்னும் வலுவாக்கும் வகையில்
ராகுல் காந்தியால் ஒரு பிரதான கூட்டணிக் கட்சியே அணியைவிட்டு தலைதெறிக்க
ஓடிப் போகக் கூடிய ஒரு நிலைமை உருவாகி வருகிறது. இது நிச்சயம் ராகுலுக்கு
பெரும் சோதனையாகத்தான் இருக்கப் போகிறது,

தமிழகம், புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு
மிகவும் முக்கியமானது. திமுக, அதிமுக இரண்டு பெரிய கட்சிகளுமே காங்கிரஸை
கழற்றிவிடும் நிலையில் 40க்கு பூஜ்யம் என்ற நிலைதான் காங்கிரசுக்கு
உருவாகும். இதைவிட படுகேவலம் காங்கிரஸுக்கு இருக்க முடியாது. இதைவிட பெரும்
அசிங்கம் ராகுலுக்கு இருக்கவும் முடியாது.

காங்கிரஸ் அணியில் இருந்து திமுக வெளியேறும் நிலையில் ராகுலுக்கு பெரும்
சோதனை காத்திருக்கிறது என்பது நிதர்சனம்

திமுக அணியில் தேமுதிக:

காங்கிரஸ் கட்சியை பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கழற்றிவிடப்பட்ட
பின்னர் தேமுதிக கூட்டணி வைக்காதா? என்ன என்ற கேள்வியும் எழலாம்.
காங்கிரஸ்- தேமுதிக இடையே நல்ல புரிதல் இருந்தாலும் ஆளும் கட்சியை
எதிர்க்கும் தங்களுக்கு திமுகவின் ஆதரவு தேவை என்பதை தேமுதிகவும்,
தேமுதிகவின் ஆதரவு இருந்தால் போதும் என்ற மனநிலை திமுகவுக்கும் இருக்கிறது.
இதனால் திமுக, தேமுதிக இடையே கூட்டணி உருவாகவே வாய்ப்பிருக்கிறது.

அதே நேரத்தில் திமுக வெளியே போனால் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்கவும்
காங்கிரஸ் முயலலாம். ஆனால், தேமுதிக நிச்சயம் தங்களுடன் கூட்டணிக்கு வரும்
என்பது உறுதியானால் மட்டுமே காங்கிரஸை திமுக கழற்றிவிடும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் இன்னும்
சில மாதங்களில் தொடங்கப் போகின்றன. அப்போது திமுக- காங்கிரஸ் தேனிலவும்
முடிவுக்கு வரலாம் என்றே தெரிகிறது

ad

ad