புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


விடுதலைப்புலிகளை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி மன்னிக்காது: நாராயணசாமி பேச்சு

இலங்கை தமிழர்கள் மீது இந்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி மட்டுமே அதிகம் செய்துள்ளது. விடுதலைப்புலிகளை இந்தியஅரசு ஒரு போதும் மன்னிக்காது, மறக்கவும் செய்யாது. ஏனென்றால் இந்நாட்டின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்த தலைவர் ராஜீவ்காந்தியை அவர்கள் படுகொலை செய்துள்ளார்கள். அவரை நாங்கள் இளம் வயதிலேயே இழந்துள்ளோம். அதனால்தான் விடு தலைப்புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்துள்ளோம்.
ஜெயலலிதா அம்மையார், விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டவர். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றவர்கள் எல்லாம் இப்பொழுது அதனை மறந்துவிட்டு பேசுகிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி முதல் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் வரை நிறைய செய்துள்ளார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது பாதிக்கப்பட்டவர் களுக்காக ராஜீவ்காந்திதான் கப்பல் மூலம் உணவுப் பொருட்களையும், விமானம் மூலம் மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைத்தார். உலகில் வேறு எந்த நாடும் அதுபோன்று செய்யவில்லை.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு சோனியாவை பிரதமராக பதவியேற்க சொன்னபோது அதனை வேண்டாம் என்று கூறி, மன்மோகன்சிங்கை பிரதமராக ஆக்கினார். ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நளினிக்கு பொது மன்னிப்பு அளிக்கும்படி பெருந்தன்மையுடன் கூறினார். எங்காவது தனது கணவரை கொலை செய்தவர்களை மன்னித்து விட்ட சம்பவம் நடைபெற்றுள்ளதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தனது மகள் பிரியங்காவையும் அனுப்பி நளினியை பார்த்து பேசச் செய்தார். புதுச்சேரியில் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உருவப்படத்தை எரித்தவர்களே, உலகப் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமத்தையும் தாக்கி உள்ளனர். அது அரசியல் கட்சி அலுவலகம் அல்ல. எனவே அந்த ஆசிரமம் மீது நடந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத முதல்-அமைச்சர் என்று சர்வதேச அளவில் முதல்- அமைச்சருக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியின் படத்தை தனது அலுவலகத்தில் மாட்டி வைத்துக் கொண்டு, வெளியில் சிலரை தூண்டி விட்டு அவரது உருவப்படத்தை எரிக்கிறார். தாக்குதல் நடத்தியவர்களை நான் ரவுடிகள் என்று சொன்னதாக திசை திருப்பினார்கள். கல்லையும், தடியையும் தூக்கி தாக்குதல் நடத்துபவர்கள் எல்லாம் ரவுடிகள் அல்லாமல், தியாகிகளா என்ன? இலங்கையில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்திய அரசு ரூ.2550 கோடி நிதியுதவி அளித்தது. அதனை காங்கிரஸ் அரசுதான் தந்ததே தவிர, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ, சீமானோ, முண்டாசு கட்டிய வைகோவோ தரவில்லை.
இலங்கை தமிழர்களின் பெயரை சொல்லிக் கொண்டு வெளிநாடுகளில் வசூல் செய்யும் கட்சிகளும் இங்கு உள்ளன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து உங்கள் ராணுவத்தை வெளியேற்றுங்கள் என்றும், தமிழர்களுக்கு அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் தர வேண்டும் என்றும் நாங்கள்தான் கூறினோம். காங்கிரஸ் கட்சி மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை என்பதற்காக 2014-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பலர் இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது போன்று மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad