புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013




          மது நீதியமைப்பும் தார்மீக உணர்ச்சிகளும் எந்த அளவிற்கு கறைபடிந்தவை, பாரபட்சமுள்ளவை என்ப தற்கு சஞ்சய் தத் விவகாரம் ஒரு உதாரணம். சமீபத்தில் சஞ்சய் தத்திற்கு 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததற் காக அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் தண்ட னையை ஓராண்டு மட்டுமே குறைத்து ஐந்து ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஏற்கனவே 18 மாதங்கள் அவர் சிறையிலிருந்து விட்டதால் இன்னும் மூன்றரை ஆண்டு கள் தண்டனையை அவர் அனுபவித்தாக வேண்டும்.

சஞ்சய் தத்திற்காக இந்திய ஊடகங்கள் கண்ணீர் வடிக்கின்றன. இந்திய அரசியல்வாதிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்திய திரையுலகமே கண்ணீர் சிந்துகிறது. சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை தனக்கு மிகுந்த வேதனை தருவதாக ரஜினிகாந்த் கூறுகிறார். முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும் ப்ரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு மஹாராஷ்டிர ஆளுநருக்கு "சஞ்சய் தத்திற்கு பொது மன்னிப்பு வழங்கும்படி கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர் “சஞ்சய் தத் பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்படவில்லை. சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டார். எனவே 20 ஆண்டு களாக அவர் மனரீதியாக எவ்வளவோ துன் பங்களை அடைந்துவிட்டார். தன் படங்களின் வழியே காந்திய சிந்தனைகளை மக்களிடம் பரப்பினார். எனவே அவர் மன்னிக்கப்பட தகுதியானவர்'’என்று குறிப்பிடுகிறார். 

நடிகை ஜெயப்ரதா, ""சஞ்சய் தத் ஒரு அப்பாவி''’என்கிறார். நாடாளுமன்ற உறுப்பின ரான ஜெயா பச்சன், ""இத்தனை வருடங்களாக கவர்மென்ட் எங்கே போனது? திடீரென அவர் ஏன் ஜெயிலுக்கு அனுப்பப்பட வேண்டும்'' என்று கேட்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ""சஞ்சய் தத் மன்னிக்கப்பட வேண்டும். இனி அவர் எந்த துன்பமும் அனு பவிக்கக்கூடாது''’ என்கிறார். காங்கிரஸ் தலை வர் திக் விஜய் சிங், ""சஞ்சய் தத் ஒரு கிரிமினல் அல்ல. 1993-ல் சூழல் மோசமாக இருந்தது. சஞ்சய் தத் உணர்வு பூர்வமாகப் பாதிக்கப் பட்டிருந்தார். அதனால் அவர் குழந்தைத்தன மாக ஒரு சிறு தவறைச் செய்துவிட்டார். அதற்காக அவர் அனுபவித்த தண்டனை போதும்''’என்று கூறியிருக்கிறார். 

மரண தண்டனைக்கு ஆதரவாகவும் பயங்கர வாதத்திற்கு எதிராகவும் ஆவேசமாக கொலைவெறியுடன் தாண்டவமாடிக்கொண்டிருந்த இந்திய சமூகம் திடீரென இவ்வளவு மென்மையும் கருணையும் வாய்ந்ததாக மாறிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை.  அதி காரமும் பணமும் புகழும் செல்வாக்கும் உள்ளவர்களுக்குக் கிடைக்கும் கருணையின் ஒரு சிறு பங்குகூட இது எதுவும் இல்லாதவர்களுக்கு கிடைக்காது என்பதற்கு சஞ்சய் தத் விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் 256 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இந்த பயங்கரவாதத் தாக்குதலில்தான் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். இந்தத் தாக்குதலின் சூத்ரதாரியான தாவுத் இப்ராஹிம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். குற்றத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பலர் கைது செய்யப் பட்டு தடா நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டனர்.

1993 மும்பை குண்டுவெடிப்பிற்குப் பிறகு நடந்த மதக்கலவரங்களில் இஸ்லாமியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புகழ்பெற்ற இந்தி நடிகர் சுனில் தத் பல்வேறு உதவிகளைச் செய்தார். சுனில் தத் புகழ்பெற்ற இந்தி நடிகை நர்கீஸை திருமணம் செய்துகொண்டபோது அது இந்து-முஸ்லிமின் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. சுனில் தத் குடும்பத்தினர் இஸ்லாமியர்களுக்கு அளித்த ஆதரவு என்பது இந்துத்துவா சக்திகளிடம் அப்போது அவருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மும்பை நகரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறையால் சஞ்சய் தத் உணர்வு பூர்வமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்காப்பிற்காக கள்ளத்தனமாக வாங்கிய ஏ.கே.56 துப்பாக்கியை தன்னுடன் வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவங்கள் அவ்வளவு எளிமை யானதல்ல. இதற்குள் இன்னும் பல முடிச்சுகள் இருக் கின்றன. 1993 தாக்குதலின்போது பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒரு பகுதி ஒரு லாரியின் அடி பாகத்தில் மறைத்துவைக்கப்பட்டு பிரபல தாதா அபு சலீமினால் சாலை வழியாக மும்பைக்குக் கொண்டுவரப்பட்டது. சலீமிற்கு ஆயுதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு அமைதியான இடம் தேவைப்பட்டது. தாவுத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ், மேக்னம் ப்ரொடக்ஷன் கம்பெனியைச் சேர்ந்த ஹனீப் கடவாலா மற்றும் சமீர் ஹிங்கோரா ஆகியோரிடம் அவர்களின் அலுவலகத்தை அதற்கு அனுமதிக்கும்படி கேட்டார். இந்த இடத்தில்தான் மும்பை நிழல் உலகத்திற்கும் பாலிவுட்டிற்கும் இருந்துவந்திருக்கும் நெருக்கமான தொடர்புகளை நாம் மறந்துவிடக்கூடாது. அவை ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகச் செயல்பட்டு வந்தி ருக்கின்றன. மேக்னம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இருவரும் அந்த இடத்தின் சொந்தக் காரருக்கும் தங்களுக்கும் பிரச்சினை இருப்பதால் சஞ்சய் தத்தின் வீட்டை உபயோகிக்கும்படி ஆலோசனை கூறுகின்றனர். சஞ்சய் தத் அதற்கு ஒப்புக்கொள்கிறார். ஆயுதங்கள் அடங்கிய வாகனம் சஞ்சய் தத்தின் வீட்டு கார் கரேஜிற்குச் செல்கிறது. சஞ்சய் தத் சில துப்பாக்கிகளையும் மூன்று, நான்கு கையெறி குண்டுகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டு மற்றவற்றை இங்கிருப்பது பாதுகாப்பானதல்ல என்று எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிடுகிறார். அவ்வாறே அவ்வாயுதங்கள் அங்கிருந்து அகற்றப்படுகின்றன. 


ஆனால், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து ஹிங்கோராவும் கடவாலாவும் கைது செய்யப்பட்ட போது இதில் சஞ்சய் தத்தின் சம்பந்தம் வெளியே வருகிறது. அப்போது மொரீஷியஸில் படப்பிடிப்பி லிருந்த சஞ்சய் தத் இதைக் கேள்விப்பட்டு பதற்ற மடைகிறார். தனது நண்பர் யூசுப் நுல்வாலாவை அழைத்து தன் வீட்டிலிருக்கும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டுபோய் அழித்துவிடும்படி கோருகிறார். யூசுப்பும் அவற்றை எடுத்துக்கொண்டு போய் உருக்கி அழிக்க முற்படுகிறார். ஆனால் ஏ.கே.56 துப்பாக்கியை யும் 9 எம்.எம். பிஸ்டலையும் அவரால் அழிக்க முடியவில்லை. இதற்கான தடயங்களை அவர் கைதுசெய்யப்பட்டபோது போலீ ஸார் கைப்பற்றுகின்றனர். மேலும் க்ரானைட் கையெறி குண்டுகளை தன் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும்படி அனீஸிற்கு சஞ்சய் தத் தொலைபேசியில் கூறியதற்கான ஆதாரத்தையும் போலீஸார் கைப்பற்றினர். தற்காப்பிற்காகத்தான் சஞ்சய் தத் ஆயுதங்களை வைத்திருந்தார் என்பதையும் தாண்டி இதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் தடா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போது சஞ்சய் தத் அதில் சேர்க்கப்படவில்லை. மாறாக சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒரு சாதாரண வழக்கிலேயே கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சுனில் தத் இதற்காக தனது செல்வாக்கை எல்லா நிலையிலும் பயன்படுத்தினார். சஞ்சய் தத்திற்கு ஆறு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது அப்போது மத்திய அமைச்சராக இருந்த ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி அந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

இன்று மார்கண்டயே கட்ஜுவி லிருந்து ரஜினிகாந்த் வரை சஞ்சய் தத்திற்கு கருணை காட்டும்படி மன்றாடுகின்றனர். ஜெயப்ரதாவும் அமர்சிங்கும் இதற்காக மஹாராஷ்டிராவின் ஆளுநரிடம் போய் கண்ணீர் விடுகின்றனர். ஆனால் இதே வழக்கில் கிட்டத்தட்ட இதே சூழலில் கைது செய்யப்பட்ட சைபுனிசா அன்வார் காஸி என்ற மூதாட்டியைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. சைபுனிசா இந்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதில் 8 மாதங்கள் ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டார்.

சைபுனிசா செய்த குற்றம் என்ன? அவர் படிப்பறிவற்ற ஓர் ஏழைப் பெண். அவரது அண்டை வீட்டாரான ரியல் எஸ்டேட் வியாபாரியாகத்தான் அபு சலீமை அவருக்குத் தெரியும். அபு சலீம், ஆயுதங்கள் அடங்கிய ஒரு பொதியை கொண்டுவந்து, ‘"இதை சிலநாட்களுக்கு உங்கள் வீட்டில் வைத் திருங்கள். சிலர் வந்து அதை எடுத்துக்கொள்வார் கள்'’என்று சொல்லிவிட்டுச் சென்றான். அந்தப் பொதியில் என்ன இருக்கிறது என்றுகூட சைபுனிசா விற்குத் தெரியாது. அவர் இப்போது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். ஆயுதங்களைப் பற்றி முழு விபரங்கள் தெரிந்த, அவற்றை உருக்கி அழிக்க முயன்ற சஞ்சய் தத்திற்கு பொது மன்னிப்பு கோருகிற அனைவரும் அதைப் பற்றி எதுவுமே தெரியாத இப்போது எழுபது வயதாகும் சைபுனிசாவை முற்றாக மறந்துவிட்டார்கள்.

இதுதான் இங்கே கருணையும் நீதியும் செயல்படும் விதம். இந்த வழக்கிலிருந்து சஞ்சய் தத்தை காப்பாற்றுவதற்காக அவரது நற்பெயரை வளர்க்கும் முயற்சிகள் திட்டமிட்டு செய்யப்பட்டன. சஞ்சய் தத் குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு சமூகநல உதவிகளைச் செய்தனர். அதற்கு தகுந்த படங்களை சஞ்சய்தத் தேர்ந்தெடுத்து நடித்தார். இஸ்லாமிய அடையாளத்திற்காக சந்தேகிக்கப்பட்ட சஞ்சய்தத் நெற்றியில் காவித் திலகமிட்டு விசாரணை மன்றத்தில் தோன்றினார். சுனில் தத் பால் தாக்கரேயைச் சந்தித்து தன் மகனுக்காக மன்றாடினார். சஞ்சய் தத் சூழ்நிலைக்கு பலியானவர் என்கிற பிம்பம் பலராலும் தொடர்ந்து உருவாக்கப்பட்டது. 

சைபுனிசா மட்டுமல்ல; பணபலமோ, புகழோ, அரசியல் செல்வாக்கோ இல்லாத எவ்வளவோ பேர் இந்த நீதியமைப்பில் கொடூரமான அநீதிகளைச் சந்தித்து வருகின்றனர். கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதானி ஒன்பதரை ஆண்டுகள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்து பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இதுபோல ஏராள மானோர் ஆண்டுக்கணக்கில் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய சிறையில் வாடி வருகின்றனர்.

பேரறிவாளன் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளாக தூக்கு மேடையில் நின்றுகொண்டிருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன? யாரோ 9 வோல்ட் பேட்டரி கேட்டார்கள் என்று வாங்கிக் கொடுத்ததுதான். இதைச் செய்தபோது பேரறிவாளனின் வயது 18. சஞ்சய் தத் தன்னுடைய 34வது வயதில் பாகிஸ்தானிலிருந்து பயங்கர வாதச் செயல்களுக்காக கடத்திவரப்பட்ட அதிபயங்கர ஆயுதங்களை வீட்டில் வைத் திருந்தார். அவர் குழந்தைமனம் கொண்டவர் என்று அரசியல்வாதிகளும் திரை பிர பலங்களும் ஊடகங்களும் வாதாடுகின்றன. ஆனால் ஒரு 18 வயது சிறு பையன் அறியாமல் செய்த ஒரு சிறு தவறுக்காக அவனை தூக்குமேடையில் 20 ஆண்டுகளாக நிறுத்துவது என்ன நியாயம் என்று யாருமே கேட்கத் தயாராக இல்லை.

சஞ்சய் தத் 18 மாதங்கள் சிறையி லிருந்ததை மிகப் பெரிய தண்டனையாகக் கருதி அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் மதானியின் ஒன்பதரை வருடங்களுக்கோ பேரறிவாளனின் 20 வருட துயரங்களுக்கோ எந்த மதிப்பும் இல்லையா? சஞ்சய் தத் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை  தன்னை மட்டுமல்ல தனது மனைவியையும் குழந்தைகளையும் சேர்த்து தண்டிக்கும் செயல் என்கிறார். சஞ்சய் தத்திற்கு நமது நீதியமைப்பு 18 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார். ஏராளமான திரைப்படங்களில் நடித்து பெரும் பணமும் புகழும் ஈட்டினார். எல்லையற்ற சுகபோகங்களில் திளைத்தார். உண்மையில் சஞ்சய் தத் சிறைக்குச் சென்றால் அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் இன்னல்களைவிட பல ஆயிரம் மடங்கு துயரம் இந்த நாட்டில் விசாரணைக் கைதிகளாகவும் தண்டனைக் கைதிகளாகவும் பல ஆண்டுகள் நியாயமற்ற முறையில் சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற ஏழை குற்றவாளிகள் குடும்பங்களுக்கு ஏற்படும். நமது மனசாட்சிக்கு அதைப்பற்றியெல்லாம் ஏதேனும் கேள்வி இருக்கிறதா? 

சஞ்சய் தத் மேல் பாலிவுட்டில் செய்யப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டைக் காப்பாற்றுவதற்காகவே இந்த நீதிக்கான நீலிக்கண்ணீர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மன்சூர் அலிகான் போன்ற ஒரு சாதாரண நடிகர் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டபோது அவருக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் திரையுலகினர் யாரும் முன்வரவில்லை.

சஞ்சய் தத் விவகாரம் நமது போலி நீதியுணர்ச்சிக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்

ad

ad