புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013




                ழ விவகாரத்தைக் கையில் எடுத்து மூன்று வாரங் களாகப் போராடிவரும் மாணவர்கள், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அதன் அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் கொதிப்பில் இருக்கும் nakeeranமாணவர்களை காங்கிரஸ் காரர்கள் சீண்டி விளையாட, அது இருதரப்பிற்கும் இடையி லான  மோதலாக அங்கங்கே உருவெடுத்துக்கொண்டிருக்கிறது..

மாணவர் போராட்டம் கொதிநிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், வேலூர் அண்ணாசாலையில் இருக்கும் தங்கள் கட்சி அலுவலகத்தின் முன் மிகப்பெரிய போர்டை வைத்தார்கள் கைத்தரப்பினர். அதில்...

"இலங்கைப் போரின் போது தமிழர்களை சுட்டுக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள்" -என எழுதிவைக்க, இந்தப் போஸ்டரால் கொதித்துப்போன மாணவர்கள், காங்கிரஸ் அலுவலகம் முன் திரண்டனர். "தமிழர்களைக் கொன்றவன் ராஜபக்சே என்பது புரியாதா மூடர் களே?'’என்றபடி அந்த ஃப்ளெக்ஸ் பேனரை ஆவேசமாய்க் கிழித்தெறிந்தனர். பின்னர் பூட்டிக் கிடந்த காங்கிரஸ் அலுவலக கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவர்கள், ஜன்னல் கண்ணாடிகளையும் கண்ணில் பட்ட நாற்காலி டேபிள்களையும் அடித்து நொறுக்கினர். 


ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த போலீஸ் டீம், மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியது. இந்த நிலையில் அங்கு கூடிய காங்கிரஸ் கட்சியினர், சாலைமறியலில் குதித்து, கட்சி அலுவலகத்தைத் தாக்கிய மாணவர்களைக் கைது செய்யும்படி வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர் தரப்பில் 5 பேரை அழைத்து வந்து அவர்கள் மீது எஃப்.ஐ. ஆரைப் போட்டது போலீஸ். இந்தத் தகவல் தமிழுணர்வாளர்களுக்கு போக, அவர்கள் வேலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். "காவல் துறையே நீ ஏவல் துறையா? ஒழிப்போம் ஒழிப்போம் சுரணையற்ற காங்கிரஸை ஒழிப்போம்' என பிராந் தியமே அதிர கோஷம் எழுப்பினர். இதைக்கண்டு திகைத்துப்போன காக்கிகள், மாணவர்களை ஸ்டேஷனிலேயே பெயிலில் விட்டனர்.

எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவரான கலை யரசன் நம்மிடம் ""இலங்கையில் நடந்த முழுப் போருக்கும் காரணகர்த்தா காங்கிரஸ்தான். ஐ.நா. தீர்மானத்தை நமத்துப்போகச் செய்ததும் காங் கிரஸ்தான். தமிழர்களுக்கு துரோகம் செய்வதை யே காங்கிரஸ் வழக்கமாக வைத்திருக்கிறது. விரைவில் தமிழக மக்கள் காங்கிரஸுக்குப் பாடம் புகட்டுவார்கள். இனி திராவிடக் கட்சிகளின் முதுகில் அது சவாரி செய்யமுடியாது. 

காங்கிரஸோடு எந்தக்கட்சி கூட்டணி வைத்தாலும் அதை தமிழக மக்கள் துரத்தியடிப்பார்கள். காங்கிரஸுக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது''’ என்கிறார் காட்டமாய். காங்கிரஸுக்கும் மாணவர்களுக்குமான உரசலின் வேகம் இன்னும் அங்கு அடங்கவில்லை.

இதே நாளில் நெல்லை வண்ணாரப் பேட்டையில் அணிதிரண்ட மாணவர் கூட்டமைப்பினர், சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பேரணியாக பைபாஸ்சாலையில் நடந்தனர். ’
"ராஜபக்சேவின் கைக்கூலி ஆகிவிட்ட காங்கிரஸே ஒழிக! ராஜீவ்காந்திக்காக ஒரு இனத்தையே காவுவாங்கும் காங்கிரஸே ஒழிக' என்ற கோஷங்களை எழுப்பியபடியே நடைபோட்டவர்கள், காங்கிரஸ் எம்.பி.ராமசுப்புவின் அலுவலகத்தை நோக்கி ஆவேசமாகச் சென்றனர். அவர்கள் கோபாவேசத்தைக் கண்ட காக்கிகள், விட்டால் எம்.பி. அலுவலகத்தையே துவம்சம் செய்துவிடுவார்கள் என்று பயந்து, அவர்களை வழிமறித்துக் கைதுசெய்தனர். வேனில் ஏற்றப்பட்ட மாணவி எஸ்கலின் ""ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 12 நாட்களாக நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். எங்க ஓட்டுக்களை வாங்கிய எம்.பி. ராமசுப்பு, மாணவர்களை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஈழ விவகாரத்தில் துரோகம் செய்த காங்கிரஸுக்கு மாணவர்களின் பலத்தை விரைவில் புரியவைப்போம்'' என்றார் சவாலாக. 

நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தை 28-ந் தேதியும் முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மற்றும் அரசுக் கல்லூரி மாணவ- மாணவிகள் 40 பேர் கைதாயினர். ‘"மாணவர்கள் மீது கை வைத்த காங் கிரஸை ஒழிக்காமல் ஓயமாட்டோம்' என்று கோஷம் போட்டபடியே காவல் வாகனத்தில் ஏறினர்.
இதேபோல் திருச்சியிலும் காங்கிரஸ்காரர்கள் மாணவர்களோடு மோதி பதட்டப் பரபரப்பை ஏற் படுத்தினர். 27-ந் தேதி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே இருக்கும் ஒரு கல்யாண மண்டபத் தில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற ஆலோசனைக் கூட் டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஞானதேசிகனை வரவேற்று அரிஸ்டோ ரவுண்டா னாவைச் சுற்றி ஏகப்பட்ட ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்தி ருந்தனர். மாநில காங்கிரஸ் தலைவரான ஞானதேசிகனுக்கு கருப்புக்கொடி காட்ட வந்த மாணவர்கள் சிலர், ஃப்ளெக்ஸ் போர்டில் சிங்களர்களுக்கு ஆதரவான வாசகம் இருந்ததைக் கண்டு கொதித்துப்போய், அந்த போர்டுகளை அடித் துக் கிழித்தனர். இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் பெரியய்யா, அவர்களைக் கைது செய்து அருகே இருக்கும் மைதானத்தில் அமரவைத்தார். அதற்குள் கல்யாண மண்டபத்தில் இருந்த காங்கிரஸ்காரர் களுக்கு போர்டு கிழிக்கப்பட்ட தகவல் போக, அவர் கள் ஆவேசமாக கம்பு, கட்டை போன்றவைகளோடு ஓடிவந்தனர். காவல்துறையினர் கண்ணெதிரிலேயே, அவர்களால் பிடித்துவைக்கப்பட்டிருந்த மாணவர்களை வெறித்தனமாகத் தாக்கினர். கதர்ச்சட்டைக்காரர்களின் இந்த கொடூரத் தாக்குதலை அவ்வழியாகச் சென்ற ஒருவர், தன் செல்போனில் படம் பிடிக்க, அவரையும் துரத்தித் துரத்தித் தாக்கினர். 

இருநூறுக்கும் மேற்பட்ட காங்கிரஸார், வெறிபிடித்தார்ப் போல தாக்கியதால், தாக்குப் பிடிக்க முடியாத மாணவர்கள் அங்கிருந்து படுகாயங்களோடு தப்பி ஓடி உயிர்பிழைத்தனர். காங்கிரஸாரின் வெறியாட்டத்தால் அந்த ஏரியாவே போர்க்களம் போல் காணப்பட்டது. இதோடு நிறுத்தாத அவர்கள், அடிவாங்கிய மாணவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மதுரை ரோடு, திண்டுக்கல் ரோடு, மத்திய பேருந்து நிலையம் என  பல இடங்களிலும் பிரிந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டு நகரத்தையே பதட்டப்படுத்தினர்.

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நிலவழகன் நம்மிடம் ""அது கொடூரமான தாக்குதல். காங்கிரஸ்காரர்களால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் ரோட்டில் கிடந்த சட்டக்கல்லூரி மாணவர் முகமது ஜெஃப்ரிபை தூக்கிட்டுப்போய் மதுரா மருத்துவமனையில் முதலுதவி கொடுத்து, அப்புறம் ஜி.ஹெச்.சில் அட்மிட் பண்ணினோம். இதேபோல் தாக்குலுக்கு ஆளான கஜேந்திரபாபு, சத்தியநாதன் ஆகியோரையும் மருத்துவமனையில் சேர்த்தோம். பாவம் இவங்களுக்கு சரியான அடி'' என்றார் வருத்தம் இழையோட.

இந்த தாக்குதலின் போது காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு கையில் காயம் உண்டாக, அவரும் ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்க்க லோக்கல் காங் கிரஸ் பிரமுகர்கள் பந்தாவாக வந்திறங்க, அங்கு திரண்டிருந்த தமிழுணர்வாளர்கள், "எங்க மாணவர்களை அடிக்கிற அளவுக்கு உங்களுக்கு வீரம் வந்துடுச்சா?'’என்றபடி அவர்கள் மீது தாக்கு தல் தொடுக்க, அவர்கள் பதறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஞானதேசிகனைத் தொடர்புகொண்டு ‘"தலைவா, ஜி.ஹெச்.போன எங்களை அடிச்சி விரட்டறாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க'’என்று அழைக்க, ஞானதேசிகனோ அந்தப் பக்கமே தலைகாட்டாமல் திருச்சியில் இருந்து கிளம்பிவிட்டார். 

காங்கிரஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் சத்தியநாதன் ""ராஜபக்சேவுக்கு ஒத்தாசை பண்ணும் காங்கிரஸுக்கு எங்க எதிர்ப்பைக் காட்டத்தான் போனோம். அங்க மாணவர் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமா  இருந்த வாசகங்களைப் பார்த்ததும் எங்க மாணவர்கள் கோபமாகி, அதைக் கிழிச்சாங்க. அதுக்காக எங்க மேலே இப்படி கண்மூடித்தனமா தாக்குதல் நடத்துவாங்கன்னு நாங்க  எதிர்பார்க்கலை. 

இவங்க தங்களை காந்தியவாதிகள்ன்னு இனி சொல்லிக்கக்கூடாது. இந்தியா, தமிழகத்துக்கு எதிரா இருப்பது போல், இங்க இருக்கும் காங்கிரஸ்காரர்கள், ஈழத்துக்காகக் குரல்கொடுக்கும் எங்களுக்கு எதிரியா இருக்காங்க. அவங்களுக்குள்ள ஏன் தமிழ் ரத்தம் ஓடலை?'' என்றார் கொதிப் பாய். காங்கிரஸ் பிரமுகரான ஜி.கே.முரளியோ ""பேனர்களைக் கிழிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு வந்தோம்.. அவங்களைத் துரத்தினோம். வேறு ஒன்றும் நடக்கலை''’ என்கிறார் கூலாய். மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜசேகர், பீரங்கி சண்முகம், ஜி.கே.முரளி, ஜெரோம் ஆரோக்கியராஜ், ஜெகதீஸ்வரி ஆகிய 50 பேர் மீது எஃப்.ஐ.ஆரை பதிவு செய்திருக்கிறது போலீஸ். அதேபோல் மாணவர்கள் தரப்பில் 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. 

திருச்சியில் காங்கிரஸ்காரர்களால் மாணவர்கள் தாக்கப்பட்ட தகவல் தமிழகம் முழுக்கப் பரவ, அங்கங்கே பதட்டம் உருவானது. "இனி தமிழ்நாட்டில் எங்கே காங்கிரஸ் கூட்டம் போட்டாலும் அங்கு அணி திரண்டுபோய் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். குறைவான எண்ணிக்கையில் செல்லாதீர்கள்'’என மாணவர் கூட்டமைப்பினர், மாணவர் அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்தனர். 

திருச்சியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கேட்டுக் கொதித்துப்போன சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் அன்று மாலையே பெருந்திரளாகக் கூடி சத்தியமூர்த்திபவனை நோக்கி "காங்கிரஸே காங்கிரஸே தைரியமிருந்தால் எதிரே வா' என்றபடி ஆவேசமாக அணி வகுத்தனர். உள்ளே இருந்த ஒரு சில கதர்சட்டையினர் பதறிப்போனார்கள். போலீஸோ, வாசலிலேயே பேரிகார்டுகளை வைத்து மாணவர்களைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தின. இப்படியாக ஒரு பக்கம் மாணவர் போராட்டம் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்ப, இன்னொரு பக்கம் மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டமாக அது உருமாறியது.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவினர், திவ்யா தலைமையில் மெரினா காவல்நிலையம் முன்பாக 27-ந் தேதி நூற்றுக்கணக்கில் திரண்டனர். பேனரில் சோனியா மன்மோகன்சிங் படத்தைப் போட்டு ‘"யார் என்று தெரிகிறதா? இன துரோகிகள் என்று புரி கிறதா?'’என்று எழுதிவைத்திருந் தனர். "மன்மோகன் சிங்கே! உனக்கு ஊதப் போறோம் சங்கே'’என ஆவேச முழக்கத்தை எழுப்பினர். 

பின்னர் வானொலி நிலை யத்துக்கு பூட்டு போட அவர்கள் கிளம்ப, அவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீஸ். மீறிச்செல்ல முயன்ற திவ்யா உள்ளிட்ட மாணவ- மாணவிகளை, கீழே உருட்டித் தள்ளிப் பந்தாடிய காக்கிகள், குண்டுகட்டாகத் தூக்கிப்போய் வேனில் ஏற்றினர். போலீஸ் காட்டிய பலப்பிரயோகத்தால் கொதிப் படைந்த மாணவ- மாணவிகள் ‘"இன உணர்வு இல்லாத நீங்கள் ராஜபக்சேவுக்கு சொந்தக்காரர் களா? உங்களுக்கு காக்கி யூனிபார்ம் ஒரு கேடா' என்று கோஷம் எழுப்ப, பதிலுக்கு காக்கிகள் காதுகூசும் அளவுக்கு ஆபாசமாக மாணவ- மாணவிகளை அர்ச்சனை செய்தனர். இந்தப் போராட் டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். 

28-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ‘ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி’அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட் டோர், தெற்கு ரயில்வே தலைமையகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்த, 2 மணி நேரத்துக்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

சேலம் லட்சுமி அரங்கில் திரண்ட பல்வேறு கல்லூரியின் மாணவர்கள் "இது விடுமுறைக்கான போராட்டம் அல்ல; ஈழ விடுதலைக்கான போராட்டம். மாணவர்களைத் தாக்கிய காங்கிரஸைக் கண்டிக்கிறோம். மாணவர் போராட்டத்தை ஒடுக்கும் தமிழக முதல்வரைக் கண்டிக்கிறோம்'’ என்றெல்லாம் கண்டன முழக்கம் எழுப்பியவர்கள் அடுத்தகட்ட போரட்டம்  குறித்த வியூகத்தில் இறங்கினர். "தமிழ் இன சுதந்திர செங்குருதி மாணவர் அமைப்பு' அல்லது "தமிழ் இன சுதந்திர சுவாசம் மாணவர் அமைப்பு' என்ற பெயரில் தொடர்ந்து ஈழப் போராட்டத்தில் ஈடுபடுவது என அவர்கள் முடிவெடுத்தனர்.

மதுரையில் மத்திய அரசின் வைப்புநிதி அலுவலகத்தை பூட்டசென்ற மாணவர் கூட்டமைப்பினர் 40 பேர் 28-ந் தேதி கைதுசெய்யப்பட்டனர். காளவாசலில் கருப்புச்சட்டை அணிந்தபடி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், காங்கிரஸைக் கண்டித்தும் ஈழ பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். மாணவர் போராட்டம், காங்கிரஸுக்கு எதிரான உக்கிரப் போராட்டமாக நிறம்மாறிக் கொண்டிருக்கிறது.

-நமது நிருபர்கள்

ad

ad