புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2013


ஈழத் தமிழர் பிரச்சனை: இனி நாற்காலியில் இருக்கக்கூடாது சபாநாயகர் !


இலங்கைத் தமிழர் பிரச்சனையை நேற்று ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய போது, சபாநாயகர் நாற்காலியில் இருந்த ரேணுகா சவுத்ரி, அ.தி.மு.க.வின் மைத்ரேயன் மீது காட்டமான சொற்பிரயோகம் செய்தார். இதைக்கேட்டு ஆவேசம்
அடைந்து கோபக்குரல் எழுப்பிய தி.மு.க.வின் திருச்சி சிவா எம்.பி உணர்ச்சி வசப்பட்டு மயக்கமுற்றதால், உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னர் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள், “ரேணுகா சவுத்ரி எங்களை விலங்குகளைப் போல நடத்துகிறார்” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, இனியொரு முறை சபாநாயகர் நாற்காலியில் ரேணுகா அமரக் கூடாது என்றும் காட்டமாகக் கூறினர்.

நேற்றும் ராஜ்யசபாவில் இலங்கை தமிழர் விவகாரத்தை தமிழக எம்.பிக்கள் எழுப்பி, “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து விட்டது” என்றும் முழக்கமிட்டனர். அப்போது சபையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார். இந்த அமளியால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் சபை மீண்டும் கூடிய போது மீண்டும் அமளி ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க.வின் மைத்ரேயன் சபையை நடத்திக் கொண்டிருந்த ரேணுசா சவுத்ரியின் கைகளில் இருந்த பேப்பர்களை பறித்து கிழித்து எறிந்தார். சபாநாயகர் மைக்குகளில் இரண்டும் இதில் உடைந்தது.

இதனால் கோபமடைந்த ரேணுசா சவுத்ரி, சில கடுமையான வார்த்தைகளைக் கூறிவிட்டு சபையை ஒத்தி வைத்தார். ஏற்கெனவே கொந்தளிப்பில் இருந்த தமிழக எம்.பிக்களை இது மேலும் ஆத்திரமூட்டியது. “’நாங்கள் என்ன விலங்குகளா… எப்படி எங்களை இவ்வளவு கேவலமாகப் பேசலாம்… இனி ஒரு முறை சபாநாயகர் இருக்கைக்கு ரேணுகா சவுத்ரி வரக்கூடாது” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார் மைத்ரேயன். அ.தி.மு.க. எம்.பி.க்கு ஆதரவாக, தி.மு.க. எம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா மிகவும் ஆவேசத்துடன், ரேணுகாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டார். இதனால் அவருடைய உடல்நிலை பாதித்து, மயக்கம் ஏற்பட்டது. தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று அவர் கூறியதால், உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

இடையில் அம்பிகா சோனி உட்பட சில காங்கிரஸ் எம்.பி.க்கள் நிலைமையை சகஜமாக்க முயன்றனர். பின்னர் ரேணுகா சவுத்ரி மீண்டும் இருக்கைக்கு திரும்பி வந்து, தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதன் பிறகுதான் ஓரளவு சகஜமானது நிலைமை. ஒட்டுமொத்தத்தில் தமிழக பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக பாராளுமன்றில் இணைந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் ஏனைய கட்சிகள் மட்டும் இன்னும் உள்விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ad

ad