புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2013

புனே வாரியர்ஸ் அணியை பந்தாடியது ராயல் சேலஞ்சர்ஸ்: 130 ரன்களில் அபார வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது.


முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல், தில்ஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்ட கெய்ல், 30 பந்துகளில் ஐ.பி.எல். சாதனை சதத்தை பதிவு செய்து, ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அவரது அதிரடிக்கு உறுதுணையாக தில்ஷானும் ஆடினார். இதனால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

அணியின் ஸ்கோர் 167ஐ தொட்டபோது, தில்ஷான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கெய்ல், 150 ரன்னைத் தொட்டார். இதற்கிடையே, 11 ரன்கள் மட்டுமே எடுத்த இளம் வீரர் கோலி ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 

டிவில்லியர்சும் தன் பங்கிற்கு புனே பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை உயர்த்தினார். 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் விளாசினார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் கெய்ல் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே ஐ.பி.எல். போட்டிகளில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய புனே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் முரளி கார்த்திக். அவரது ஓவரில் புனே தொடக்க வீரர் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். சற்றுநேரம் தாக்குப் பிடித்து ஆடிய ஃபிஞ்ச் 18 ரன்களிலும், ரைட் 7 ரன்களிலும், யுவராஜ் சிங் 16 ரன்களிலும் அவுட் ஆகினர்.

அதன்பின்னர் ஸ்மித்-மார்ஷ் கூட்டணி விக்கெட்டைக் காப்பாற்றுவதற்காக நிதானமாக முன்னேறினர். ஆனால் ரன்ரேட் மிகவும் பின்தங்கியதால் அடித்து ஆட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 100 ஆக இருந்தபோது, ஸ்மித் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார். பின்கள ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, புனே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களே சேர்த்தது. இதனால் பெங்களூர் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ad

ad