புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


கெயில் அதிரடி: மும்பையை 2 ஓட்டங்களால் திரில் வெற்றிக்கொண்டது பெங்களூர்

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த 157 என்ற வெற்றி இலக்கை போராடி அடைய முடியாத மும்பை இந்தியன்ஸ் அணி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இதேவேளை கெயிலின் அதிரடியுடன் பெங்களூர் அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

6ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வொரியர்ஸ் ஆகிய 9 அணிகள்
பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை வகிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

2ஆவது ஆட்டம்

இந்த நிலையில் 2ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு சந்தித்தன. காயம் காரணமாக மும்பை அணியில் மாலிங்கவும், பெங்களூர் அணியில் சகீர்கானும் இடம் பெறவில்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்லும், தில்ஷனும் பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆரம்பத்திலேயே தடுமாறிய தில்ஷன் 8 பந்துகளில் ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில், மிட்செல் ஜோன்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து வந்த புதிய அணியின் புதிய தலைவர் விராட் கோலி, சில ஓட்டங்களை பெற்ற போதிலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பம்ராவின் பந்து வீச்சில் கோலி (24 ஓட்டங்கள், 14 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். பெங்களூர் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடுமையான நெருக்கடி தந்த பம்ரா, அகர்வாலையும் (1 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க செய்தார்.

மறுமுனையில் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல், பதற்றமின்றி ஏதுவான பந்துகளை மட்டுமே எல்லைக்கோட்டை நோக்கி விளாசினார். 10ஆவது ஓவரில் எதிர்முனையில் நின்று கொண்டிருந்த போது, மும்பை பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் களத்தடுப்பு செய்ய முற்பட்டு கெய்ல் மீது மோதினார். இதில் கீழே விழுந்த கெய்ல் இடது காலில் வலியால் அவதிப்பட்டார். காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட கெய்ல் பிற்பகுதியில் தனது தாக்குதலை தொடுத்தார்.

மேலும் இரு விக்கெட் சரிந்த போதிலும் மலைபோல் மையம் கொண்ட கெய்ல், வீழ்ந்த கிடந்த அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதமாக உயர்த்தினார். பொல்லார்ட், ஹர்பஜன்சிங், முனாப்பட்டேலின் ஓவர்களில் சிக்சர்கள் பறந்தன. அவரது சரவெடியால் பெங்களூர் அணி 150 ஓட்டங்களை கடந்தது.

20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் சேர்த்தது. கெய்ல் 92 ஓட்டங்களுடனும் (58 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), அருண் கார்த்திக் 19 ஓட்டங்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

மும்பை அணியின் பந்து வீச்சில் பம்ரா 3, மிட்செல் ஜொன்சன் 1, ஹர்பஜன்சிங் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 157 ஓட்டங்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. ஆரம்ப வீரர்களாக பொண்டிங் மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் களம் கண்டனர். இருவரும் 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற போது டெண்டுல்;கர் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக் களம் கண்டார். எனினும் மறுமுனையில் இருந்த பொண்டிங் 28 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து தினேஷ் கார்த்திக் அடித்தாடினார். இதன் மூலம் மும்பை அணி வெற்றியடையும் வாய்ப்பு காணப்பட்ட போதும் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராய்டு 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த பொலார்ட் 5, ஹர்பஜன்சிங் 1 ஓட்டங்களை பெற்றனர்.

அந்தவகையில் மும்பை அணியினரால் 20 ஓவர்களில் 154 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பெங்களூர் அணியின் பந்து வீச்சில் விநேய் குமார் 3, கார்த்திக் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ad

ad