புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2013


கூட்டமைப்போடு இணைந்து பயணிப்போம்! தந்தை செல்வா நினைவுப் பேருரையில் ஆனந்தசங்கரி

தந்தை செல்வாநாயகத்தின் 36 ஆவது நினைவு தினமான கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ் நினைவு தின நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இவ் சிராத்தனை தின நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தலைமையுரையாற்றினார்.
அவர் தனது உரையில் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
தந்தை செல்வா தன் இனத்துக்கு ஆற்றிய அளப்பெரிய சேவையினால் ஒவ்வொரு தமிழ் மகன் இதயத்திலும் இரண்டறக் கலந்திருக்கின்றார்.
இதனால்தான் நாம் இப்பெருமகனை நினைத்து பெருமை கொள்கின்றோம். தந்தை செல்வா தனது இறுதிக்காலத்தில் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சியை விட்டு கூட்டுத்தலைமைத்துவத்தை முன்னிறுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் இக்கூட்டணிக் கட்சியை உருவாக்கினார்.
இறக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே தன்னை அறிமுகம் செய்ய அவர் தவறவில்லை.
அதே நேரம் ஏனைய அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் சம அந்தஸ்த்துடனும் அவர்களுக்கே உரித்தான சுயகௌரவத்துடனும் வழிநடத்தும் அரசியல் தலைமைத்துவப் பண்பையும் கொண்டிருந்தார் என்பதை தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த ஒவ்வொருவரும் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு அவரின் அரசியல் பாசறையில் வளர்ந்த தலைவர்களின் நானும் ஒருவன். அவரின் ஆத்மாத்த பலம் பொருந்திய தொலைநோக்கு அரசியல் பணிகளை எனது இறுதி முச்சு இருக்கும் வரை நினைவு கூருவேன்.
இன்று நமக்கு இருக்கின்ற அரசியல் வாய்ப்புக்களை விட எம்மை நோக்கி நித்தமும் எழும்; அரசியல் ரீதியான நெருக்கடிகளே அதிகம்.
இந்தகையதொரு காலகட்டத்தில் மிகவும் சாதுரியமாக முடிவுகளை எடுக்கும் நிலையில் நாங்கள் நிற்கின்றோம். இன்று ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படும் ஓர் அம்சமாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் காணப்படுகின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் வரும் போகும். இது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்புக்களை மட்டுமே அவர்களுக்கு வழங்குகின்றது.
தமிழ் அரசியல் சூழலில் தேர்தலை மையப்படுத்திய போக்குடைய கட்சிகள்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் வெறுமனே தமிழ்க் கட்சிகளிடமிருந்து தேர்தல் நிகழ்ச்சி நிரல்களை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்கள் நிரந்தரமான கௌரவமான நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தரக்கூடிய ஓர் நிர்வாகத் திறன் பொருந்திய அரசியல் சக்தியை எதிர்பார்க்கின்றார்கள்.
இத்தகைய அரசியல் இலக்கை இலங்கைத் தீவில் இன்றிருக்கும் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியாலும் தனித்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை எனது அரசியல் வாழ்விலிருந்தும் வெளிப்படையான எனது மனோபாவத்திலிருந்தும் கூறுகின்றேன். இதனை எனது வயதிலிருக்கும் திரு. சம்பந்தனும் புரிந்து வைத்திருப்பார்.
இலங்கை அரசிடமிருந்து எமது மக்கள் கௌரவமான நிரந்தரமான முழுப் பாதுகாப்புத் தன்மை கொண்ட அரசியல் தீர்வு ஒன்றையே எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.
அதனை அவர்கள் எமக்குத் தருவதற்கு சில விட்டுக்கொடுப்புகளையும் மனமாற்றங்களையும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலம்பொருந்திய அரசியல் சக்தியை உருவாக்குவதில் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் அதன் தலைவர்களுக்கிடையிலும் தனிநபர்களுக்கிடையிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னிறுத்தி பற்றுதியுடன் பயணிக்கும் போதே அரசியல் ஒற்றுமை என்ற இலக்கை எட்டுவதோடு சமகாலத்தில் உருவெடுத்துள்ள நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டமுடியும்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் பதிவு செய்யப்பட்ட சட்ட அங்கீகாரத்துடன் கூடிய ஓர் முழுமையான வடிவமாக மாறுமா என்ற கேள்விகளுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான இவ் விருப்பத்தை ஏற்று நானும் எனது தமிழர் விடுதலைக் கூட்டணியும் தனியொரு கட்சியை முன்னிறுத்துவதற்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உன்னத கட்டமைப்பை உருவாக்குவதற்கு முழுமையாக அர்ப்பணிப்போம்.
இதனை தந்தை செல்வாவின் நினைவு தினமான இன்றைய நாளில் சத்தியம் செய்து கொள்கின்றோம். இதுவே நாம் அவருக்குச் செய்யும் அதி உன்னத மரியாதையுமாகும். எமது தமிழினத்துக்கு நாம் செய்யும் மிகப்பெரும் அரசியல் பணியுமாகும்.

ad

ad