புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013


வடமாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார்
என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக "லங்கா தீப' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அவை மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு பின்னடித்து வந்தது.
 
இந்த நிலையில் உடனடியாக வடக்கு மாகாணத் தேர்தலை நடத்துமாறு இந்தியா உள்ளிட்ட  சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. 
 
அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்திலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படாமல் இருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று  கொழும்பிலிருந்து வெளியாகும் "லங்காதீப' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
 
ஆனாலும் இந்த முடிவை இன்னும் சில வாரங்களின் பின்னரே கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் என்றும் இன்னும் சில வாரங்கள் செல்லக் கூடுமெனவும் "லங்கா தீபா' தெரிவித்துள்ளது.

ad

ad