புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2013

வீழ்வோம் என்று நினைத்தாயோ! மே 18 ல் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா

இன விடுதலைக்காகக் கடந்த நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டிலும் மாவீரன் பிரபாகரன் தலைமையில் தொடர்ந்த ஈழப் போரினை இந்திய அரசின் ஆதரவு, அன்றைய தமிழ்நாட்டை ஆண்டவர்களின் ஆதரவு உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவோடு நடைபெற்ற உச்சக்கட்ட ஈழ விடுதலைப் போரில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள்…..
கொத்து கொத்தாய் இலங்கை அரசால் கொன்றொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனி ஈழம் மலரும் நோக்கிலும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நல்வாழ்வு மலரும் நோக்கிலும் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா வரும் மே 18 ஆம் தேதி கடலூரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பினை இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
இது குறித்து சீமான் பேசியதாவது,
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போர் உச்சக்கட்டத்தை எட்டியபோது ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க இங்கு யாரும் இல்லாமல் போனதாலேயே நாம் தமிழர் கட்சி அதே மே 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முன்பு சி.ப.ஆதித்தன் ஐயாவால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினையே புதுப்பித்து நாங்கள் நடத்தி வருகிறோம்.
இனத்திற்காகப் போராடிய விடுதலைப்புலிகள் உட்பட லட்சக்கணக்கான தமிழ் மக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று நச்சுப்புகைக்குண்டுகளால் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பதே தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் கைது செய்யப்படுவதற்கு முன் இருந்த நிலைமையில் இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே..
பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்..
90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் அங்கே விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழர்களின் நிலங்கள் சிங்களவனால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தமிழனின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டு புத்த கோயில்கள் கட்டப்படுகின்றன.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் சிங்களவனின் ராணுவக்கூடாரமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன… முல்லைத்தீவு உட்பட தமிழில் அமைந்த ஊர்ப்பெயர்கள் சிங்களப்பெயர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் யார் தட்டிக்கேட்பது…? எந்த உலக நாடுகளும் கேட்க முன்வராத நிலையில் உலகமுழுவதும் பரவிக்கிடக்கும் ஈழச்சொந்தங்களுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி தட்டிக்கேட்கிறது. தனி ஈழம் மலர்ந்து ஈழத்தமிழர்கள் நிம்மதியாக அவர்களது சொந்த நாட்டில் வாழும் வரை தமிழுணர்வோடு போராடுவோம்…
மே 18 இல் கடலூரில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழே நம் முகவரி என்கிற தலைப்பில் ப.அருளியார், விடுதலை விதை நெல் என்கிற தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அத்துடன் கலை நிகழ்ச்சிகளும் பேரணியும் நடைபெறவிருக்கிறது.
இந்திய அளவில் இருந்து ஈழப்போரினைப் புரிந்து கொண்ட இயக்கங்களின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளயிருக்கின்றனர்…” என்று குறிப்பிட்டார்.
இன்றைய சாதீய மோதல்களைக் கடுமையாகச்சாடிய சீமான், ”இந்தத் தலைவர்கள் இன்று அரங்கேற்றிய போராட்டங்களை ஈழப்போர் நடந்த சமயத்தில் அரங்கேற்றியிருந்தால் இந்தியாவையே நம் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கலாம்.. ஆனால் தங்களது சுய நலத்திற்காக இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுத் தமிழர்களைப் பிரித்தாளப் பார்க்கிறார்கள்… ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சாதி என்று சொல்லவே கூச்சப்படுகிறார்கள்… குறிப்பாக நாம் தமிழர் கட்சி நடத்தும் விழாக்களிலும் போராட்டங்களிலும் இன்று மோதிக்கொள்ளும் தலைவர்களின் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாகக் கலந்து கொள்கிறார்கள்… ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரல்கொடுக்கிறார்கள்..” என்றார்.
தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்த சீமான் ஈழத்தமிழர்களுக்கான பாராளுமன்றம் விரைவில் அமைக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

ad

ad