புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மே 18 நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4ம் வருட நினைவு நாள் நினைவஞ்சலிகள் பல்வேறு நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டன.
அந்தவகையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது.
ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.
சர்வதேச அரசுகள் தத்தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தினாலும் அடிப்படையான மனிதாபிமானத்தோடு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஆனாலும் இவை போதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கவில்லை.
கொடியபோர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆனபோதும் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த அரசியல்அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு கவனமாக இருந்துவருகின்றது.
அதேவேளையில் தமிழர்களின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாமல் செய்வதற்கான திட்டமிட்ட இனவழிப்பை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது.
எனவே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் ஒருமித்த குரலே அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தாயகத்தில் வாழும் மக்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்யும்.
அந்தவகையில் தமிழீழத் தேசிய இனத்தின் ஆன்மாவை உலுக்கிப்போட்ட மே மாதத்தின் நினைவுகளைச் சுமந்தபடி, மரணித்துப்போன எம்முறவுகளின் கனவுகளைச் சுமந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் ஒன்றுகூடி அனைவரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ad

ad