புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2013

அண்ணனுக்கு ஆயிரம் தம்பிகள் (முள்ளிவாய்க்கால் 4ம் ஆண்டு)
ஆக்கம்: அ.பகீரதன்.

அவலங்களின் தாய் நிலமாகி, வரலாற்றுச் சுவடுகளை மட்டுமே தாங்கி, சீரழிந்து போய் கிடக்கும் முள்ளிவாய்க்கால் பற்றி கவிதை ஒன்று வடிக்கவே முனைந்தேன்;
கண்ணீர்த் துளிகளோடு தோற்றுப் போனேன். வெறும் பொருளாதார வளர்வை மட்டும் நமதாக்கி, வெறும் சுகபோகங்களை மட்டுமே அறுவடை செய்யும் புலம் பெயர்ந்த தமிழனால் எப்படி புலம்பாமல் இருக்க முடியும்? ஆயிரம் ஆயிரம் அகதிகளின் குமுறல்கள் உலகத்தின் மனச்சாட்சிக்கு புரியாமல் போகலாம். சீரியஷாக சிந்தித்தால் அடிவயிறு பற்றி எரியும் இந்த புலம்பெயர்ந்த அபலைகளின் அழுகுரல் உலக மனித நேயத்தை உலுக்காமல் விடலாம். தாய்மொழியை இழந்து, சொந்த தேசத்தின் வாஞ்சையையும், வாசனையையும் தொலைத்து, பண்பாட்டையும் பறிகொடுத்து, அடிமைப்பட்ட தன்மக்களிற்காக குரல் கொடுக்க வக்கில்லாமல், இறுதிவரை அநீதியை எதிர்க்க திராணி இல்லாமல், இயந்திரச் சுடுகாட்டிற்கு போகப்போகும் நம் அவலத்தை நினைத்தால் வாழ்க்கை வெறுக்காமல் என்ன செய்யும்?
பன்னெடுங்காலமாக வீரத்தை பறைசாற்றிய தமிழன் மண்டியிட்ட இடமா முள்ளிவாய்க்கால்? களத்தில் புதிய வியூகம் ஒன்றை உருவாக்க முனைந்து வியூகமே வினையாகிப்போன இடமா முள்ளிவாய்க்கால்? அல்லது, கருணையில்லா உலக வல்லரசுகளின் கொடிய கரங்களிற்குள் சிக்குண்டு தமிழர் வீரம் தோற்கடிக்கப்பட்ட இடமா முள்ளிவாய்க்கால்? தாழ்வுவரினும், வீழ்ச்சி கொள்ளினும் தமிழீழம் மட்டுமே தமிழர்களிற்குச் சரியான இலக்கு என்பதை கணித்து, வீரத்தோடும் விவேகத்தோடும் ஒரு இனம் தன்னை தானே அழித்துக்கொண்டு, அந்த அழிவினூடாக புதிய விடுதலை விதை ஒன்றை புதைத்த இடமா முள்ளிவாய்க்கால்? என்னைப் போன்ற சாதாரண மனிதனால் கணிக்க முடியாத கணக்கு முள்ளிவாய்க்கால் எனும் பெருங் கணக்கு. இந்த கணக்கைப் பற்றி வசைபாடுகின்றவர்களும், பெரிதாக்கி இசை பாடுகின்றவர்களும் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். ஏனெனில் இது பலரின் இரத்தத்தால் நிரப்பப்பட்ட கணக்கு. எதிர்கால முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப் படப்போகும் நெடுங்கணக்கு.

முள்ளிவாய்க்கால் பற்றி எழுத முற்படுகையிலே பிரபாகரனை எண்ணத் தோன்றுகிறது. சிலவேளைகளில் பிரபாகரனைப் பற்றி சிந்தித்தால் பலருக்கு கண்ணீர் முட்டும், ஒரு சொந்த சகோதரனை தொலைத்த வாஞ்சை மனதை வாட்டும். எங்கள் தேசத்திற்காக இருந்த கடைசிக் கட்டுமானம் அவனல்லவா என சொல்லி அழத் தோன்றும். அவமானப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட நம் தேசத்திற்கு புலிக்கொடியை உடையாக்கி அழகு பார்த்த செம்மல் அவனல்லவா என மனசு விசும்பும். வன்முறை, பாஸிசம், பயங்கரவாதம் என்று சிலர் கொச்சைப்படுத்தினாலும், எம் தேசிய ஆன்மாவிற்கு பலம் சேர்த்தவன் அவனல்லவா? சாதியாலும், வர்க்க வேறுபாட்டாலும், வறட்டுக் கௌரவங்களாலும் சிதறி கிடந்த எம் மக்களின் மனதில் புரட்சியை உருவாக்கி, தமிழ் சமூகத்திற்கு சமத்துவமும் முதாலாளித்துவமும் கலந்த நேர்பாதை ஒன்றை அமைத்தவன் அவனல்லவா? முற்றுமுழுதான சுதந்திரத்தை நாம் அனுபவிக்க, தமிழீழம் மட்டுமே சாத்தியம் என்ற மையக் கருத்தை ஆழமாக வேரூன்றியவன் அவனல்லவா? நாம் நெஞ்சை நிமிர்த்தி தமிழன் என்று சொல்லக் கூடிய இனமானத்தை தந்தவன் அவனல்லவா? சரி கொஞ்சம் பொறுமையாக பின்னோக்கிப் பார்ப்போம்.
யாரும் எதிர்பாராத தருணத்தில், ஆனால் தேவையான நேரத்தில்தான் பிரபாகரன் போன்ற தலைவர்கள் கைத்துப்பாக்கியோடு களத்தில் காலடி எடுத்து வைத்தார்கள். அகிம்சையின் வழி நின்று, சாத்வீகமான வழியில் சிறுபாண்மையினத் தமிழர்களிற்கு விமோசனம் இல்லையென்ற உண்மையை உள்வாங்கிக் கொண்டுதான் எழுபதுகளின் ஆரம்பத்தில் பிரபாகரன் போன்ற தலைவர்களை வரலாறு சமைத்திருக்க வேண்டும். ஜி.ஜி பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வாவும், நவரெத்தினமும், அவர்கள் வழிவந்த தோழர்களும் (அமிர்தலிங்கம் உட்பட) குறைந்தவர்கள் அல்ல. உலக ஒழுங்கில் ஓடி, காந்தீய முறையில் அணுகி, கிடைப்பதை பெற்றுக்கொண்டு, படிப்படியாக தனியரசு நோக்கிய கனவை அடைவதே அவர்களின் பாதையாக இருந்தது. தமிழர் போரட்டத்தின் பரிணாம வளர்ச்சிப் பணியில் அவர்கள் நடந்த போதுதான், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பல்வேறு வகையான இன வர்க்க ஒடுக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது. அரசாங்க தரப்பில் தலை விரித்தாடிய எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் அவர்கள் தலையாட்ட மறுத்தபோது, ஆயுத ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள்; அவமானப் படுத்தப்பட்டார்கள்; காரணமின்றி சிறையிலிடப்பட்டார்கள்; அரசியல் சூழ்ச்சிகளால் களுத்தறுக்கப்பட்டார்கள். இந்த போக்கின் முடிவை ஊகித்தறிந்த இளைஞர் குழாம் ஆயுதவழி செல்ல தீர்மானித்தார்கள். அவர்கள் எடுத்த முடிவு சரி என்பதை மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் பின்னாளில் நிரூபித்தன. அதையே இப்போதைய அரசும் அப்பட்டமாக நிரூபித்துக் காட்டியுள்ளது.

புலிப்பாஸிசம் என்கின்ற கொச்சை விமர்சனம், பாதிக்கப்பட்ட சொந்த மக்களின் சாபங்கள், பலமான அரசியல் எதிர்வினைகள், இடையிடையே நடந்த உள்வீட்டுக் குளறுபடிகள், இந்திய வல்லரசின் நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள் இவற்றோடுதான் பிரபாகரன் என்கின்ற ஆளுமை கட்டியெழுப்பப்பட்டது. தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாமல் போன சகோதர யுத்தம், ஜே,ஆரின் சாணக்கியமான அரசியல், இந்திரா காந்தியின் திடீர் மரணம்; அகிம்சைவாதிகளின் பிரசாரம், ஆயுதப்போராட்டம் மீது கற்றவர்களும் பெரியவர்களும் வைத்திருந்த அவநம்பிக்கை, கற்றவர்களை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் யாழ்ப்பாண மேல்தட்டு மக்களின் மனோவியாதி, இப்படியாக பல தடைகளை பிரபாகரன் மிக நுட்பமாக தாண்டித்தான் வெளியே வந்தார். 

போராளிகளை தன்னுடைய குழந்தைகளைப் போல அரவணைத்துக் கொண்டது முதல் ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பணக்காரர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் சமதளத்தில் வைத்துக் கொண்ட சமத்துவம்வரை பிரபாகரனை போற்றிப் புகழ ஆயிரம் காரணங்கள் உண்டு. அவருடைய குழந்தை மனம்; அந்த மனதை அப்படியே பிரதிபலிக்கின்ற அழகிய தோற்றம்; பழகும்போது மிக எளிமை; மனதால் அகங்காரம் கொள்ளாத பக்குவம்; இளமைப் பருவத்திலிருந்தே முற்றாக தன்னை பொது வாழ்க்கைக்கு அர்பணித்துக் கொண்ட இயல்பு; மிகவும் கறாரான ஒழுக்கம்; குறைவான பேச்சு, நிறைவான செயல். இதுதான் பிரபாகரன் என்கின்ற இளைஞன், தேசியத் தலைவனாகியதன் சூட்சுமம். கணவனின் பொதுவாழ்க்கையை புரிந்து கொண்ட வாழ்க்கைத்துணை, வரம் போல வாய்த்த பிரிகேடியர் பால்ராஜ் போன்ற தளபதிகள்; செய் என்று சைகை செய்தால் போதும், செத்து மடியும் போராளிகள், இம்மியும் பிசகாமல் இலக்கை சுக்கு நூறாக்கும் கரும்புலிகள், வறுமையிலும், அபாயத்திலும் எப்போதும் புலிகளைத் தங்கள் பிள்ளைகளாக பார்க்க பழகிக் கொண்ட சுதந்திர தாகம் மீதூரப் பெற்ற பொது ஜனங்கள், வள்ளல் எம்.ஜி.ஆர், அண்ணன் வைகோ மற்றும் நெடுமாறன் ஐயா போன்ற நல்ல இதயங்களின் ஆசிகள். இவைதான் பிரபாகரன் என்கின்ற தேசிய விருட்ஷத்தின் கிளைகள்.

தனக்குத் தெரிந்தவற்றை அப்படியே அழகாக செய்து முடிப்பதில் பிரபாகரன் ஒரு சிற்பி; சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சாதுரியமாக காய்களை நகர்த்துவதிலும் பெரும் கில்லாடிதான். யார் எதிர்க்கினும் தனக்கு சரி என்பதை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துவதில் அவர் ஒர் நல்ல தலைவன். அலெக்சாண்டர், நெப்போலியன், கரிபால்டி, சேகுவரா, உமார் போன்ற உலகத் தலைவர்கள் வரிசையில் வைத்துக் கொண்டாடக் கூடிய வீரமகா புருஷன். மக்கள் மற்றும் போராளிகள் நலன், தேசத்தின் எதிர்காலம், தமிழீழம் என்கின்ற கட்டமைப்பு, எதற்கும் சோரம் போகாத இலட்சியம் இதுதான் பிரபாகரன் தன்னை நிலைநிறுத்திய தளம். 
எதிர்க்கின்றவன் யமனாக இருந்தாலும் ஓங்கி அடிக்கின்ற மகா துணிச்சல். வாழையை வெட்டவும் கூரிய வாளோடு போகின்ற முன்னெச்சரிக்கை. எதிரிகளின் கோட்டைகளிற்கு மட்டுமல்ல, சகாக்களின் தலையணைக்குள்ளும் ஊடுருவித் துலாவுகின்ற புலனாய்வு எனும் மகா தந்திரம். மக்களும் புலிகளும் ஒன்றுதான் என்கின்ற விம்பத்தை உருவாக்கிய சாணக்கியம். கண்மூடித்தனமான பயிற்சியும், பயிற்சிக்கேற்ற முயற்சியும். இப்படித்தான் பிரபாகரன் தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டார்.

இலட்சியத்தின் மீது என்றும் மாறாத இயல்பான காதலும், உலக நாடுகளே வியக்கின்ற வகையில் வெற்றி கண்ட யுத்த களங்களும் பிரபாகரனுக்கு சர்வதேச அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தன. பிரபாகரனின் இலட்சியக் கனவை சரியாக புரிந்து கொண்ட உலகத் தமிழர்கள் அவரை தமிழினத்தின் ஒரேயொரு தனிப்பெரும் தலைவனாக போற்றிக் கொண்டாடினார்கள். இப்படியொரு தலைவன் எமக்கு எப்போதும் வாய்த்தது இல்லை, இனியும் வாய்க்க வாய்ப்பில்லை என நம்பினார்கள். பிரபாகரனுக்கு தெய்வ அந்தஸ்து கொடுக்கும் மனோநிலையில் பலர் உருவாகினார்கள்.

1983 ஆம் ஆண்டு ஆடியில் கண்ணிவெடித் தாக்குதல், 1985 ல் ”ஓபரேஷன் லிபரேஷன்”, 1987 ல் இந்திய இராணுவத்திற்கெதிரான யுத்தம், 1990 ல் மாங்குளம், கொக்குளாய் முகாம்கள் அழிப்பு, 1992 ல் கடற்படை விரிவாக்கம், 1994 ல் அவ்ரோ வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டவை, 1996 ல் பாரிய முல்லை முகாம் தகர்ப்பு மற்றும் கொழும்பில் பாரிய குண்டுத்தாக்குதல்கள், 1997 ல் ஜெயசுக்குறுவிற்கு எதிரான மாபெரும் மரபுவழியிலான நெடுஞ்சமர், 2000 ல் ஆனையிறவு முகாம் நிர்மூலம் என்று பிரபாகரன் அடித்த ஒவ்வொரு அடியும் எதிரி நிலைகுலைந்து, அரசாங்கம் சித்தம் கலங்கிய சமர்கள். சேர, சோழ படைக்கு நிகரான படை பிரபாகரனது புலிப்படை என யாரும் யோசிக்காமல் சொல்லுமளவிற்கு பிரபாகரன் களத்தில் சாதித்துக் காட்டியவன். இதில் இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை. விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியின் தேவையாக, 2000 ஆம் ஆண்டுக்கு பின்பாக பிரபாகரன் சர்வதேச தளத்திலும் கவனம் செலுத்தி, சரியாக பயணிக்க வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டார்.

2001 புரட்டாதியில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லாடனின் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்பாக, உலக நாடுகள் உஷாராகிக் கொண்டன. யாராக இருந்தாலும் சரி, அது விடுதலைப்போராக இருந்தாலும் சரி, பயங்கரவாத முத்திரை குத்தி பூண்டோடு அழிக்க வேண்டும் என திடசங்கற்பம் எடுத்துக் கொண்டார்கள். இதற்கு சமாந்தர காலகட்டத்தில்தான் பிரபாகரனும் வெளிநாட்டு புலிகள் அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முற்ப்பட்டிருந்தார். கே.பி, காஸ்ரோ, நெடியவன் என்றெல்லாம் சில மாற்றங்கள் நடந்ததாக ஊகங்களாக சொல்லப்பட்டது. 
2004 ஆரம்பத்தில், கருணா அம்மான், ரணில் விக்கிரமசிங்காவின் சூழ்ச்சியில் அகப்பட்டு புலிகளிடமிருந்து பிரிந்து அரசோடு ஒட்டிக்கொண்டார். சர்வதேச சிக்கலுக்கு முகம் கொடுக்க இலகுவாக இருக்கும் எனக்கருதி புலிகளே ரணிலை ஒதுக்கி வைத்துவிட்டு, 2004 சித்திரையில் மகிந்த ராஜபக்ஷவை அதிபராக்கினார்கள். அதே நேரத்தில், இந்தியாவில், 2004ம் ஆண்டு வைகாசியில், திருமதி சோனியா ராஜீவ்காந்தியின் ஆட்சி சபையேறியது. இதற்கு முன்பாகவே 2002 இறுதியில் அமெரிக்க-இங்கிலாந்தின் ஆசியோடு, நோர்வே புன்சிரிப்போடு சமாதானத் தூதுவராக கைகுலுக்கி இருந்தது. வெள்ளைப் புறாவை கையிலே வைத்துக்கொண்டு, கறுத்த மனசோடு அங்கே வந்தார்கள். இந்த காலகட்டங்களில்தான், பல உலகநாடுகள் ஏற்கனவே புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து, தங்கள் நாடுகளில் இயங்க தடை செய்து இருந்தார்கள். 2006 மார்கழியில், வெளிநாட்டு தலைவர்களோடு குறைந்த பட்ச தொடர்புகளை பேணி வந்த அன்ரன் பாலசிங்கமும் மரணமானார். இந்தியாவின் அனுசரணையுடன் கடல்வழிப்பாதை முடக்கப்பட்டு ஆயுத வினியோகமும் தடைப்பட்டிருந்தது. கபடம், நயவஞ்சகம், சூழ்ச்சி அத்தனைக்கும் பெயர்போன உலக வல்லரசுகளின் கூட்டு முயற்சிக்கு எதிராக பிரபாகரனுக்கு காய்நகர்த்துவது கடினமாக இருந்தது. 
பலநாடுகளின் இராணுவ உதவிகளோடு, நவீன ரக ஆயுதங்களோடு களத்தில் மூர்க்கத்தனமாக வந்த பல்லாயிரக் கணக்கான இராணுவப்படைக்கு எதிராக பிரபாகரனால் ஈடு கொடுக்க முடியவில்லை. முடிந்தவரை தாக்குப்பிடித்தார். இறுதியில்பிரிகேடியர் தீபன் உட்பட பல பெரும் தளபதிகள் சகிதமாக பிரபாகரன் நேரடியாக களத்தில் மாபெரும் முறியடிப்புத் தாக்குதலை நடாத்தினார். அந்த தாக்குதலையும், இந்திய அரசின் நவீனமயமான கருவிகள் ஊடாக எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து அரசாங்கம் இலகுவாக முறியடித்தது. இறுதியாக புலிகளின் விமானத் தாக்குதலும் கைகொடுக்காமல் போக புலிகளிற்கு மாற்று வழி இல்லாமல் போனது.

ஏதாவது ஒருவகையில் மகிந்த அரசாங்கத்தை சர்வதேச சிக்கலுக்குள் மாட்டி, தான் மீண்டும் தலைதூக்க சரியான இடமாக முள்ளிவாய்க்கால் களத்தை பிரபாகரன் தேர்ந்தெடுத்திருக்கலாம். இது இனப்பிரச்சனை, இங்கே நடப்பது இனப்படுகொலை என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி தான் மீண்டும் சர்வதேச அனுதாபத்தையும் நியாயத்தையும் பெறலாம் என அவர் கருதி இருக்கலாம். ஏதோ ஒரு கணக்கு அதன் பின்னால் இருந்தது மட்டும் உண்மை. சில ஆண்டுகளிற்கு முன்பாகவே உலகநாடுகளின் உதவியுடன் 2009 ஆம் ஆண்டிற்குள் தாங்கள் அழிக்கப்பட்டு விடலாம் என யோகரெத்தினம் யோகி ஒரு மேடையில் பகிரமங்காக பேசியிருந்தார். எனவே புலிகள் முன்கூட்டியே இதை அனுமானித்ததோடு, புலிகளும் ஒரு கணக்கோடுதான் நிச்சயமாக இருந்திருப்பார்கள். 

கிருஷ்ணனின் வஞ்சகத்தால் சூழ்ச்சி செய்யப்பட்டு, களத்தில் தனித்து நின்ற கர்ணனைப் போலவே உலகச் சூழ்ச்சியில் அகப்பட்டு, பிரபாகரன் என்கின்ற மாவீரனும் களத்தில் நின்றான். முன்னவன் செஞ்சோற்றுக் கடனுக்காக நின்றான்; பின்னவன் மாவீரர்களிற்கும் கரும்புலிகளிற்கும், மக்களிற்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற களத்தில் நின்றான். எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, தன்னம்பிக்கையோடு மட்டும் நிர்க்கதியாக நின்ற அந்த மகாத்மாவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது. 
முப்பது ஆண்டு கால பிரபாகரனது பொதுவாழ்க்கை மட்டுமல்ல, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், வசைகளும், அவருடைய முடிவுகள் பற்றிய அதிருப்தியும் வரலாற்றின் வழியில் ஆராயப்படும். நல்லவை கோலோச்சும்; தவறானவை சுட்டிக்காட்டப்படும். ஆனால் மூன்று தலைமுறையும் இறுதிவரை அடிபணியாது களத்தில் நின்ற அந்த வீரவரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். மக்கள் தலைவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை. இலட்சிய அண்ணனுக்கு இலட்சக் கணக்கான தம்பிமார்கள் இருப்பார்கள். ஒரு ஒழுங்கான அண்ணன் இல்லாமல், நல்ல தலைவன் இல்லாமல் என் இனம் குட்டிச் சுவராகிய வண்ணமே இருப்பதுதான் மகா துரதிஸ்டம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

உங்கள் நேரத்திற்கு நன்றி,
அன்புடன்,
அ.பகீரதன்
http://pageerathan.blogspot.ca/

ad

ad