புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2013


ராமதாசை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன் : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களை சந்தித்தார். 


டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி? 

 டாக்டர் ராமதாசை கடலூர் மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் நுழையக் கூடாது என்ற போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவன் நான். அதற்குப் பிறகு டாக்டர் ராமதாசும், அவரைச் சார்ந்த நண்பர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கே இடமில்லை, திராவிடக் கட்சிகளே இருக்கக் கூடாது என்ற அளவில் தங்கள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, அந்தச் சூழ்நிலையிலே நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் வன்முறைப் பேச்சுகள் தலை தூக்கிய காரணத்தால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், சிறையிலே அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியும்போது உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். 
பா.ம.க. வினரும் இதுபோல கடுமையாக, நாகரீகமற்ற முறையிலும், நாவடக்கம் இல்லாமல் எதிர்க் கட்சிகளை, மற்றக் கட்சிகளைத் தாக்கிப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒரு சுமூகமான சூழ்நிலையை இந்தப் பிரச்சினையிலே உருவாக்குவதற்கு அது வழி வகுக்கும். 
வழக்குக்கு மேல் வழக்கு போடுவதும், எப்போதோ பேசினார் என்பதற்காக தற்போது அன்பு மணி மீது வழக்கு போட்டுக் கைது செய்வதும் சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு ராமதாசை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். 
பொதுவாக சாதிக் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள், மதக் கலவரங்கள் - இவைகள் எல்லாம் தலையெடுக்காத வகையில், தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், குடிமக்கள் என்போரும் எல்லோருமே ஒன்றாக வாழ்வது தான் சமதர்மம். 
அந்தச் சம தர்மத்தை நோக்கி எல்லோரும் செயல்பட வேண்டும். எல்லா கட்சிகளும் பயணம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக சாதி வேறுபாடுகளை, சண்டைகளை, போராட்டங்களை ஊக்குவிப்பது, அதற்குப் பக்க பலமாக இருப்பது சரியாகத் தோன்றவில்லை. நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 
அரசும் தன்னுடைய அடக்குமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறையிலே உள்ளவர்களை விடு விக்க வேண்டும். பா.ம.க.வினரும் இனியாவது கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 
கேள்வி:- அரசு சார்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள் கொடுத்த எந்த விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை, அதனால் தான் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம், ராமதாஸ் அவர்களிடமே போராட்டத்திற்கு வந்தால் கைது செய்வோம் என்று சொல்லியிருந்தும் அவர் மீறி வந்து கைதாகியிருக்கிறார் என்று கூறுகிறார்களே? 
இந்தக் கருத்துகளையெல்லாம் படித்து விட்டுத் தான் நான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அதனால் ராமதாசை விடுவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிற சூழ்நிலையைத் தவிர்ப்பதும், நாள்தோறும் அங்கே பஸ் எரிந்தது, இங்கே பஸ் எரிந்தது, அங்கே வீடு எரிந்தது, கடை எரிந்தது என்ற இந்தப் பேச்சுக்கள் எங்குமே வராமலும், பொதுவாக அமைதியாக தமிழகத்தை அனைவரும் காண வேண்டும் என்ற ஆசையோடு இந்தக் கருத்துகளை நான் சொல்லுகிறேன். 
தமிழகச் சட்டப் பேரவையில் கச்சத் தீவினை மீண்டும் பெற வேண்டுமென்று அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்திருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 
இதிலே என்னுடைய பொதுவான கருத்து, கச்சத் தீவினை திரும்பப் பெற வேண்டும் என்பது ஏற்கத்தக்க கருத்து. நாங்களும் உச்ச நீதி மன்றத்திலே “டெசோ சார்பிலே வழக்கு தொடர்வோம் என்று கூறி, அதற்கான ஆதாரங்களையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறோம். 
 டாக்டர் ராமதாஸ் அவர்களை சிறையிலே சென்று தி.மு.க.வினர் யாராவது சந்திப்பார்களா? 
அவர் எங்களைச் சந்திக்க விரும்ப மாட்டாரே? அவருக்குத்தான் தி.மு.க. வினரையே பிடிக்காதே? 

ad

ad