புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013



நல்லிணக்கமே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் யுத்த வெற்றி விழாக்களில் பயன்கள் இல்லை: இராஜரட்ணம்


அரசாங்கம் யுத்த வெற்றியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனை விடுத்து யுத்த வெற்றி விழாக்களை கொண்டாடுவதனால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம் தெரிவித்தார். 

அரசின் சமகால முன்னெடுப்புகள் குறித்து கருத்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் இராஜரட்ணம் மேலும் கருத்து தெரிவிக்கையில், 
நாட்டு மக்கள் தற்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிதும் பின்னடைவு கண்டுள்ளது. நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துச் செல்கின்ற நிலையில் மக்கள் பொருளாதாரச் சுமையினை எதிர்கொண்டுள்ளனர். மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலைமை தொடருமானால் பல்வேறு பாதக விளைவுகளை சந்திக்க வேண்டி நேரிடும். 
இவற்றுக்கெல்லாம் மேலாக இனவாதத்தின் உச்ச நிலைமையினை இப்போது எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இனவாதிகள் இனவாத சிந்தனைகளை முடுக்கி விட்டு குளிர்காய முற்படுகின்றனர். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பாணியில் நிலைமைகள் போய்க்கொண்டிருக்கின்றன. இனவாத முன்னெடுப்பால் மக்களிடையே விரிசல் போக்கு நிலவி வருகின்றது. இது அபாயகரமான சூழலைத் தோற்றுவிக்கும். 
நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை வரவேற்கத்தக்கவே. எனினும் அதன் பின்னரான போக்குகள் திருப்தி தருவனவாக இல்லை. சர்வதேச நாடுகள் இலங்கையினை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தனது பாதச்சுவடுகளை சரியான பாதையில் வைக்க வேண்டும். இனவாதிகளை புறந்தள்ளி ஐக்கியம் மிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதி பூண வேண்டும். யுத்த வெற்றியினை கொண்டாடுவதை நாம் ஆதரிக்கின்றோம். எனினும் யுத்த வெற்றியை மட்டுமே கொண்டாடுவதோடு நின்று விடாது யுத்தத்தின் வடுக்கள் பதிந்துள்ள மக்களுக்கு விடிவு ஏற்படுத்திக்கொடுக்கப்படல் வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தி என்பது சகல இன மக்களின் ஐக்கியத்திலும் ஒருமைப்பாட்டிலுமே தங்கியுள்ளது. சகல இன மக்களதும் உரிமைகளைப் பேணி அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் போதே இந்நிலை சாத்தியமாகும். இதனை எந்த ஒரு அரசும் மறந்து செயற்படலாகாது. இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நிரந்தர சமாதானத்துக்கு அரசாங்கம் வித்திட வேண்டும் என்றார்.

ad

ad