வெள்ளி, ஜூன் 21, 2013சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது
கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சென்னை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வரும் விமானங்களை கண்காணித்தனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பது பற்றி கடத்தல் கும்பலுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் தங்கள் திட்டத்தை மாற்றினர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தும் கும்பல் விமானத்தில் டெல்லி சென்றனர். பின்னர் டெல்லியில் இருந்து தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர். 5 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ் மீது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. 
எனவே அவற்றை சோதனை செய்தனர். அதில் தங்க கட்டிகள் இருந்தது. சுமார் 10 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 1/2 கோடி ஆகும். இதையடுத்து தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த ஜெய்கேந்திரன், முகமது இஸ்மாயில், நிஷார், முகமது செய்யது, டெல்லியை சேர்ந்த நீனாவர்மா ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர் என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.