புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

13வது திருத்தம்! வீரவன்ச, சம்பிக்க இருவருக்கும் உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கை! இரா. சம்பந்தன்
13வது திருத்தச் சட்டத்தினை ஒழிப்பதற்கு அல்லது அதனை பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முயற்சியினை ஜனாதிபதி கைவிட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
13 வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து என்னவென வினவிய போதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றின் கோரிக்கைகளுக்கிணங்க 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தினை ஒழிப்பதற்கு அல்லது அர்த்தமில்லாத பெறுமதியற்ற பிரயோசனமில்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த முயற்சியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைவிட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
13வது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய ஆகிய கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சிகளும் கோரிக்கை விடுக்கவில்லை. இந்தக் கட்சியினருக்கு உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கையான விடயமாகும்.
இந்த நடவடிக்கையினை ஒரு போதும் ஏற்க முடியாது. இந்த முயற்சியினை கைவிடுவது நாட்டுக்கும் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நன்மையான முடிவாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல இன, மத, கலாசார மக்கள் வாழ்கின்ற நாட்டில் அனைவருக்கும் தனித்துவம் உண்டு. இந்த தனித்துவம் பேணப்பட்டால் நாட்டில் ஒருமித்து ஒற்றுமையாக ஒரு தேசிய இனமாக அனைவரும் வாழலாம். ஆனால் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
நாட்டில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்தாலும் ஒரு இனம் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு நியாயமான அரசியல் ஆட்சி தேவையாகும். அதிகாரப் பகிர்வுடனான அரசியல் சமூக பொருளாதார, கலாசார அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்தப் பகுதியில் ஆட்சிமுறை அமைய வேண்டியது அவசியமாகும்.
உலகில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறுபட்ட இன மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறான ஆட்சி முறை நிலவி வருகின்றது. நாகரீகமான முறையில் இத்தகைய ஆட்சி முறை அமுல்படுத்தப்படுகின்றது. இனங்களிடையே அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் அரசியல் சாசனமும் அமைந்திருக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2006ம் ஆண்டு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினை நியமித்தார். அதற்கு உதவுவதற்காக இனங்களை சார்ந்த நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்த நிபுணர் குழுவை நியமித்த ஜனாதிபதி பண்டாரநாயக்கா, செல்வநாயகம் ஒப்பந்தம் முதல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை ஆராய்ந்து பார்க்கும் படியும், பல்வேறு நாடுகளில் எந்தவிதமான அரசியல் தீர்வுகள் காணப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயுமாறும் இந்தியாவின் தீர்வு முறையையும் ஆராய்ந்து அதன் பின் உரிய சிபார்சினை செய்யுமாறும் அந்தக் குழுவிடம் கோரியிருந்தார்.
இந்த நிபுணர் குழுவானது பல இன மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனம் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக தெளிவான அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் பல்வேறு இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கான அடிப்படையான பல விடயங்கள் தொடர்பிலும், சிபார்சுகள் செய்திருந்தது.
இந்த நோக்கத்தில்தான் 13 வது அரசியல் அமைப்பு சாசனமும் உருவாக்கப்பட்டது. அரசியல் தீர்வுக்கு இது ஒரு ஆரம்ப முயற்சியாகவே அமைந்தது. அதற்குப் பின்னர் 13 வது அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி அமைத்து அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் மங்கள முனசிங்க, தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையும் தற்போது உள்ளது.
இதேபோல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 1995 , 1997 ,2000 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அவரால் இந்த விடயம் தொடர்டில் பல்வேறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இவ்விதம் நடைபெற்றிருந்தது. இதனை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். 13 ஆவது அரசியல் அமைப்பு சாசனம் உருவாக்கப்பட்ட பிறகு பதவி வகித்த ஒவ்வொரு ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்திலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்தி அமைத்து அதிகாரத்தை கூட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபகாலத்தில் விசேடமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்ன-ர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவேன் என்றும் அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வை கட்டியெழுப்புவேன் என்றும் பகிரங்கமாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதி இந்தியாவிற்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் ஐ.நா.விற்கும் அளித்திந்தார்.
இந்த வாக்குறுதிகளை எல்லாம் மீறி ஜாதிக ஹெலஉறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் கருத்துக்களின் நிமித்தம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு அல்லது பெறுமதியற்றதாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முயற்சி எடுப்பது மிகவும் ஆச்சரியமளிக்கும் நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
13வது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிக்கும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாக நான் கருதவில்லை. அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் கருத்தாக நான் கருதவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கருத்தாகவும் நான் கருதவில்லை. இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்தாகவும் நான் கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து இதுவென்றும் நாம் கருதவில்லை.
எனவே இந்த விடயம் தொடர்பில் தங்கது பங்காளிக் கட்சிகளிகளுக்குள் அலசிப் பார்த்திருந்தால் இத்தகைய நிலைப்பாடு ஏற்பட்டிருக்கமாட்டாது.
வெறுமனே ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் கருத்தாகவே 13வது திருத்தச் சட்ட ஒழிப்பு அமைய முடியும். இவர்களுக்கு உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கையான விடயமாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே 13வது திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் முயற்சியினை ஜனாதிபதி கைவிடவே்ண்டும். இந்த முயற்சியினை டைகவிடுவது நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் சிறந்த முடிவாக அமையும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய சகல மக்களும் ஏற்கும் வகையில் அரசியல் தீர்வொன்றினை காண்பதற்கு நேர்மையாகவும், விசுவாசமாகவும் செயற்படவேண்டும்.
அத்தகைய முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்பதை பகிரங்கமாக இந்த வேளையில் கூறிவைக்க நாம் விரும்புகின்றோம்.

ad

ad