புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013

எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது திருத்தமோ, மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப் போவதில்லை! சிறிதரன் பா.உ
தமிழர்கள் தனித்துவமான இனமாக, தனித்துவமான தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது மிக நீண்டகால அரசியல் அபிலாஷை. எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது திருத்தமோ, அதன் கீழான மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர்கள் தனித்துவமான இனமாக, தனித்துவமான தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது மிக நீண்டகால அரசியல் அபிலாஷை, அதற்காகவே தமிழினம் கடந்த 60வருடங்கள் மயிர்க்கூச்செறியும் அர்ப்பணிப்புக்களுடனும், தியாகங்களுடனும் பல்வேறு வழிகளில் போராடியிருக்கின்றது.
எங்கள் அரசியல் அபிலாஷைகளை எங்கள் உயிரினும் மேலானதாகவே நாங்கள் கருதியிருக்கின்றோம். அதனை வெறுமனே 13வது திருத்தமோ, அதன் கீழான மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப்போவதில்லை. எனவே 13வது திருத்தத்தை தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வாக நான் ஒருபோதும் கருதவில்லை, கருதப்போவதுமில்லை.
தொடர்ந்து ஆட்சிக்கு வரும் சகல சிறீலங்கா அரசுகளாலும் திட்டமிடப்பட்டு, ஒருங்கமைக்கப்பட்டு அவற்றினது முழு அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்தி கொலைகள் மூலமும் எமது கட்டுமானங்களை சிதைப்பதன் மூலமும் செயற்படுத்தப்பட்டு வரும் தமிழ் இன அழிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதுதான் எப்போதும் தமிழர் எங்களின் பிரச்சனை. இந்தக் கொடூரமான இன அழிப்பிலிருந்து தப்பித்து எப்போதும் தமிழ் இனமாக, தமிழ்த் தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் அபிலாஷை.
அதற்காகத்தான் கடந்த 60 வருடங்களாக நாங்கள் பல்வேறு வழிகளிலும் போராடி வருகின்றோம். எங்களது தேசிய இருப்புக்கான உயிரினும் மேலான இந்த ஆவலை 13வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபைத் தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாண சபையோ ஒரு போதும் சொற்ப அளவில்தானும் பூர்த்தி செய்யப் போவதில்லை. அதனால் 13வது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒரு போதும் கருதவில்லை.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் வழி உருவாகிய இந்த 13வது திருத்தம் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசத்தின் அபிலாஷைகளையும் நியாயமான அச்சங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒரு சில சரத்துக்கள் கூட 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாது தமிழர்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி இந்திய அரசு ஒரு போதும் இந்த 13வது திருத்தம் தமிழரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த முயற்சியையும் எடுத்ததுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லை.
1987ல் வரையப்பட்ட போதே இந்த 13வது திருத்தம் தமிழர் மீதான இன அழிப்பை தடுக்கக்கூடிய எந்த அதிகாரங்களையும் தமிழருக்கு வழங்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. மாறாக சில நிர்வாக பரவலாக்கங்களையே செய்தது. தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு மிக முக்கியமானது நிலம் அல்லது காணியாகும். ஆரம்பத்திலேயே இதன் கீழ் வழங்கியதாக காட்டப்பட்ட காணி அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரங்கள் முழுவதும் உண்மையில் ஜனாதிபதியிடமே வழங்கப்பட்டிருந்தன.
இப்படித்தான் மிக முக்கியமான அதிகாரங்களான சட்டம் - ஓழுங்கு (பொலிஸ்), நீதித்துறை, கல்வி, நிதி, அபிவிருத்தி என்பன அரைகுறையாக தமிழருக்கு பயனளிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநரிடமே வழங்கப்பட்டிருந்தன. அவர் விரும்பினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையிடம் அந்த அதிகாரங்களை வழங்கலாம், வழங்காமலும் விடலாம்.
அதாவது சிறீலங்கா அரசு தனது இன அழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை பாதிக்கக்கூடிய எதுவும் 13வது திருத்தத்தில் (மாகாணசபை அமைப்பில்) வராதவாறு பார்த்துக்கொண்டது. பின்னர் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், 17ம், 18ம் அரசியல் யாப்புத் திருத்தங்கள் மூலம் ஏலவே இருந்த ஒரு சில சிறிய அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.
1987க்குப்பின்னான காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச்சக்தியாக இருந்த வரை 13வது திருத்தத்தை பிரச்சனையின் தீர்வுக்கான அடிப்படையாக யாருமே பேசியதுமில்லை, கருதியதுமில்லை. சிறீலங்கா அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழுவாகட்டும் சந்திரிகாவினால் 1995, 1997, 2000ம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களாகட்டும் அண்மையில் நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டமாகட்டும்
ஏன் இறுதியில் நடந்த த.தே.கூ. – அரசு பேச்சு வார்த்தையாகட்டும் எல்லாவற்றிலுமே தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு 13க்கு அப்பாலான ஒரு தீர்வு தேவை என்பதை அடிப்படையாகக்கொண்டே பேசப்பட்டன.
ஆனால் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப்பின், தமிழர் தரப்பு பலவீனமடைந்து விட்டதாக முடிவெடுத்துள்ள சிறீலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் 13வது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்மொழியத் தொடங்கினார்கள். துரதிர்ஷ்ட வசமாக தோற்றுவிட்டோம் எனத் துவண்டுவிட்ட எமது மக்களும் தலைவர்களும் 13வது திருத்தத்தையாவது பெற்று விடமாட்டோமா என ஏங்கத்தொடங்கினர்.
மற்றும் எம்மவர் போல வேடமிட்டு எமது தோல்வி மனப்பான்மையை நிலை பெறச்செய்து எம்மை மீளா அடிமைகளாக்கிவிட கைக்கூலி பெற்று செயற்படும் புத்திஜீவிகளாக தம்மைக் கூறிக்கொள்பவர்கள் சிலரும் 13ஐ சர்வரோக நிவாரணியாகவோ அல்லது எமது பலவீன நிலையில் கிடைக்கக்கூடிய ஒன்று இது மட்டும்தான் என்றோ கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.
இப்படியான 13வது திருத்தம் எப்படி தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும்? இதன் வழி உருவாகும் மாகாண சபை எப்படி தமிழரின் இன அழிப்பை தடுக்கும் (காணிப்பறிப்பைத் தடுக்கும், திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்கும்) அதிகாரங்களை எமக்குத் தரும். அதனால்தான் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் கூட எமது பிரச்சினைகளுக்கான தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அமைய முடியாது.
அதே நேரம் 13வது திருத்தத்தின் கீழான வட மாகாணசபைத் தேர்தலில் வென்று அதைக் கைப்பற்றி, பின்னர் அதிலிருந்து கொண்டு போராடியோ அல்லது இரந்தோ மேலும் மேலும் அதிகாரங்களை சேர்த்து, அதிகரித்துக் கொண்டுபோய் தமிழருக்கு ஒரு நல்ல தீர்வையோ அல்லது சிலர் சொல்வது போல சமஷ்டி அமைப்பையோ எக்காலத்திலும் அடையவும் முடியாது. இப்போதுள்ள அரசியல் யாப்பிலும் 13வது திருத்தத்திலும் அதற்கான எந்த சட்ட அடிப்படைகளும், வாய்ப்புகளும் இல்லை என்பதை சட்டம் அறிந்த அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றார்கள்.
இந்த நிலையில் சிங்கள பேரினவாதிகளும் அவர்களைத் தூண்டி விடுகின்ற பேரினவாத மையமான அரசும் ஏதோ மாகாணசபைகளிடம் இருக்கும் அதிகாரங்கள் தமிழருக்கு பலமாகிவிடும் எனக் கூக்குரலிடுவதும் (இல்லாத, வெற்று) அதிகாரங்களை அகற்றிவிட்டுத்தான் வட மகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் எனக்கூறுவதும் நகைப்புக்கிடமானது.
ஆனால் இவர்கள் அறியாமையால் செய்வதல்ல இந்த ஆர்ப்பாட்டங்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி எதிர்ப்புகள் உள்ளதாகக் காட்டிக் கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, சிங்களப் பேரினவாதிகள் எதிர்ப்பதால் 13வது திருத்தத்தில் தமிழருக்கு பயனுள்ளதாக ஏதோ உள்ளது என தமிழரை தவறாக நம்ப வைப்பது,
இரண்டாவதாக, இந்த 13வது திருத்தத்திலுள்ளதைச் செயற்படுத்தவே சிறீலங்கா அரசுக்கு இவ்வளவு எதிர்ப்பு உள்ளதால் இதற்கு மேல் எதையும் தமிழருக்கு வழங்குவது சிறீலங்கா அரசுக்கு மிகவும் கடினமானது என எம்மையும் சர்வதேசத்தையும் நம்ப வைப்பது,
மூன்றாவதாக இப்போது இருக்கும் சில அற்ப அதிகாரங்களையும் பிடுங்குவதன் மூலம் சிங்கள தேசத்தின் பேரினவாத மனதைக் குளிர்வித்து தாமே சிங்கள தேசத்தின் காவலர்கள் என்பதை தொடர்ந்தும் நிலை நிறுத்தவது என்பனவாகும்.
இந்த அரசோ, இனிவரும் சிறீலங்கா அரசுகளோ ஒருபோதும் மாகாண சபையை முழுமையாக ஒழிக்கா. ஏனெனில் ஐ.தே.க., சி.சு.க. போன்ற கட்சிகளின் 2ம், 3ம் நிலை அரசியல்வாதிகளுக்கு பதவிகளையும் சம்பளம், சலுகைகள் என வசதிகளையும் வழங்க இந்த அமைப்பே பயன்படுகிறது. தற்போது மாகாண சபைகளில் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பதவியில் இருந்து கொண்டு பல வசதிகளை அனுபவக்கின்றனர்.
அவர்களில் திரு. விமல் வீரவன்ச அணியினரும் ஹெல உறுமயவினரும் கூட உள்ளனர். இவர்கள் தமது நலன்களை ஒரு போதும் தியாகம் செய்ய மாட்டார்கள். ஆகவே 13வது திருத்தத்துக்கு எதிரான இந்த எதிர்ப்புகளெல்லாம் ஒரு நாடகத்தின் காட்சிகள் எனவும் கூறலாம்.
ஆனால் எம்மவர் சிலர் அரசை நோக்கி மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிக்காதே என கெஞ்சுவதும் மிரட்டுவதும் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்து எனக் கூறுவதும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதுவும் ஆரம்பத்தில் (அதாவது 1987ல்) இருந்த 13வது திருத்தத்தை மீளவும் கொண்டுவர வேண்டும் என கூறுவதும் மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தம் உள்ளடங்கியுள்ளது. அதை அமுல்படுத்த வேண்டியது அந்த அரசியல் யாப்பினை பாதுகாப்போம் எனக் கூறுகின்ற அரசின் கடமை. அதை செய்வதும் செய்யாததும் அவர்களைப் பொறுத்தது. அந்த 13வது திருத்தத்தின் படி ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதைப் போல வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதும் அவர்களைப் பொறுத்தது.
மாகாண சபை முறைமையின் கீழ் எமக்கு ஒருபோதும் விடிவு ஏற்படப் போவதும் இல்லை. அதை வைத்துக்கொண்டு நாம் எதிர் நோக்குகின்ற இன அழிப்பை தடுக்கவோ, தணிக்கவோ முடியாது. அல்லது மாகாண சபையைப் பெற்றுக்கொண்டு மேலும் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
அதனால் 13வது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் தமிழரின் தேசிய ப்பிரச்சனைக்கு தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அல்லது எதிர்காலத்தில் வளர்த்தெடுத்துப் பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கான அடித்தளமாகவோ கருத முடியாது.
ஆனால் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் ஒன்று நடைபெறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலில் போட்டியிடும்.
ஏனெனில் தமிழரின் அரசியல் வெளிகளை அரசோ அல்லது சிங்களப் பேரினவாத்தின் ஏவலாள்களாக கேள்வியேதுமின்றி இன அழிப்புக்கு துணை போய்க்கொண்டிருக்கும், காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களோ கைப்பற்ற நாம் அனுமதிக்க முடியாது.
மேலும் புத்திக்கூர்மையுடன் செயற்பட்டால் பின்வரும் வழிகளில் வடக்கு மாகாண சபைத் தேர்தலினை நாம் ஒரு அரசியல் வேலைத்திட்டமாக செயற்படுத்த முடியும்.
  • நாம் எமது மக்களிடமிருந்து தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் ஒரு தடவை மிகத்தெளிவான ஆணையைப் பெற இத் தேர்தலை பயன்படுத்த முடியும். தமிழரின் தேசிய அபிலாஷைகளான தமிழருக்கு ஒரு தாயகம் உண்டு, தமிழர் ஒரு தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்பவற்றை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாதுகாக்கக்கூடிய அதிகாரங்கள் உள்ள, தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அதிகாரங்களைத் தரக்கூடிய ஒரு தீர்வே தமிழர்களின் அபிலாஷையாகும். அதற்கேற்றவாறான ஒரு காத்திரமான, வெளிப்படையான பிரகடனமாக தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் மக்களின் ஆணைக்காக முன்வைத்தல்.
  • தேர்தலில் நிற்பதற்கு வேட்பாளர்களாக தமிழ் மக்கள் மீதும் தமிழ்த் தேசியத்திலும் அசைக்க முடியாத பற்றுறுதியும், எதிரிக்கும் துரோகிகளுக்கும் தலை வணங்காத துணிவும், 13வது திருத்தம் எமக்கான தீர்வல்ல என்பதை கொள்கையாகவும் செயற்பாடுகளின் மூலமும் வெளிப்படுத்தக்கூடிய திறமையும், தமிழ்மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டக்கூடிய தலைமைத்துவ ஆற்றலும் தியாக சிந்தையும் உள்ள ஒற்றுமையாக அர்ப்பணிப்புடன் வேலை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்தல்.
  • இப்படியாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாணசபையின் த.தே.கூ. உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் தமிழருக்கான முழுமையான ஒரு தீர்வை சர்வதேச ஆதரவுடன் பெறுவதை தமது இலக்காக கொண்டு மக்களை அணிதிரட்டி ஜனநாயக விழுமியங்களை மீறாது போராடுதல்.

ad

ad