புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

லண்டனில் இருந்து சென்ற இலங்கை தம்பதியினர் சென்னையில் கடத்தல்!- 3லட்சம் பவுண்ட்ஸ் கேட்டு மிரட்டல்! தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச்
சென்றபோது அங்கு வைத்து மர்மநபர்களினால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இது பற்றி தெரியவருவதாவது:
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதிப்பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சைலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார். அவரும் லண்டனில் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 25ம் திகதி தவராஜா இலங்கைக்கு சென்றார். பிறகு 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்றார். கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தவராஜாவும், அவர் மனைவி சைலஜாவும் சென்றனர். அதன்பிறகு அவர்கள் எங்கு சென்றனர் என்பது மர்மமாக இருந்தது.
இந்த நிலையில் லண்டனில் உள்ள தவராஜாவின் மகள் தர்ஷினிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
" உங்கள் பெற்றோரை நாங்கள் தான் கடத்தி வைத்துள்ளோம். 3 லட்சம் பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் 2.5 கோடி ரூபாய)  கொடுத்தால் அவர்களை விட்டு விடுகிறோம் என்றார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தர்ஷினி, சென்னை கொளத்தூரில் உள்ள தங்கள் குடும்ப நண்பர் குமாரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் லண்டன் பொலிஸாரிடமும் தர்ஷினி புகார் செய்தார். அதன் பேரில் லண்டன் பொலிஸார் சென்னை பொலிஸ் கமிஷனர் ஜோர்ஜ்ஜை தொடர்பு கொண்டு பேசினர்.
தர்ஷினியிடம் மர்ம நபர் எந்த போன் நம்பரில் இருந்து பேசினார் என்ற விவரத்தை லண்டன் பொலிஸார் கூறினார்கள். இதையடுத்து ஜோர்ஜ் உத்தரவின் பேரில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இணை கமிஷனர் சண்முகவேல், அண்ணாநகர் துணைக் கமிஷனர் சேவியர் தன்ராஜ், கூடுதல் துணைக் கமிஷனர் ஜெயக்குமார், உதவிக் கமிஷனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட தனிப்படை பொலிஸார் துப்பு துலக்கினர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் தவராஜாவின் லண்டன் சுப்பர் மார்க்கெட் கடையில் பணிபுரியும் இலங்கைத் தமிழரான அஜந்தன் என்பவர் இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவர் தன் நண்பரான திருச்சியைச் சேர்ந்த ரமேஷ் மூலம் கடத்தலை அரங்கேற்றி உள்ளார்.
பொலிஸார் திருச்சி சென்று ரமேசின் நண்பர் கண்ணன், தலைமை ஆசிரியை இந்திரா அந்தோனி மேரி, மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக கமிஷனர் ஜோர்ஜ் கூறியதாவது:-
தவராஜாவும், அவர் மனைவி சைலஜாவும் சென்னையில் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினோம். அதன் பலனாக திருச்சியில் 8 பேரை கைது செய்தோம்.
அவர்கள் தவராஜாவை கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர். அங்கிருந்தபடியே போனில் தர்ஷினியிடம் தொடர்ந்து பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போன் அழைப்புகளை வைத்து தவராஜாவும், அவர் மனைவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம்.
பிறகு தனிப்படை பொலிஸார் மஞ்சக்குப்பம் சென்று அவர்களை ஒரு வீட்டில் இருந்து மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சத்யா தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு கமிஷனர் ஜோர்ஜ் கூறினார்.
இந்த வழக்கில் லண்டனில் உள்ள அஜந்தனும், ரமேசும் கைது செய்யப்பட்டனர். கடத்தல்காரர்களிடம் இருந்து 2 கார்கள், ஒரு ஜீப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொலிஸ்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தொழில் அதிபர் தவராஜாவும், அவர் மனைவியும் மீட்கப்பட்டது குறித்து கமிஷனர் ஜோர்ஜ் நிருபர்களுக்கு விளக்கி கூறினார். அப்போது தவராஜாவும், சலஜாவும் உடன் இருந்தனர். தாங்கள் கடத்தப்பட்டது குறித்து சைலஜா அழுதபடியே விளக்கினார்.
அவர் கூறியதாவது:-
கடந்த புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து நாங்கள் இறங்கினோம். தி. நகரில் நாங்கள் தங்க ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் பெயர் பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்கள் பெயரும் அதில் இருந்தது. எனவே அவர் ஹோட்டல் ஊழியர்தான் என்று நினைத்து அவருடன் சென்று காரில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும் மேலும் 3 பேர் வந்து நாங்கள் சென்ற காரில் ஏறினார்கள்.
அதே நேரத்தில் கார் தி.நகருக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கார் சாரதியிடம் கேட்டோம். அதற்கு அவர் தி.நகரில் சாலை பணிகள் நடப்பதால் வேறு வழியாக அழைத்து செல்கிறோம் என்றார்.
சிறிது நேரத்தில் கார் புறநகருக்கு சென்று விட்டது. இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தபோது எங்களை அடித்து உதைத்தனர். எங்களிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டனர். ஒருநாள் முழுவதும் காரில் வைத்தே எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றனர்.
மறுநாள் எங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அப்போது கத்திமுனையில் நான் அணிந்திருந்த தாலிக்கொடி, தோடு உள்ளிட்ட நகைகளை பறித்து கொண்டனர். இதையெல்லாம் பார்த்தபோது நாங்கள் உயிருடன் திரும்புவோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
நல்ல வேளையாக சென்னை பொலிஸார் சிறப்பாக செயல்பட்டு எங்களை மீட்டு விட்டனர். இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சினிமா பாணியில் நடந்த கடத்தல்
தவராஜா, சைலஜா இருவரையும் சென்னை கடத்தல்காரர்கள் யாரும் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. எனவே லண்டனில் இருந்தபடி அஜந்தன் இ-மெயில் மூலம் தவராஜா,சைலஜா போட்டோவை கண்ணனுக்கு அனுப்பினார். தவராஜா சென்னை வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களையும் கூறி இருந்தார். இதை வைத்தே கடத்தல் கும்பல் சினிமா பாணியில் திட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
தலைமை ஆசிரியை இந்திரா அந்தோனி மேரி, மஞ்சக்குப்பத்தில் இருந்தபடி லண்டனில் உள்ள தர்ஷினியிடம் பேசினார். அதற்கு தவராஜா போனையே பயன்படுத்தினார்.
அப்போது உங்கள் தந்தை செல்போனில் பணம் இல்லை. எனவே ரீ-சார்ஜ் செய்யும்படி மிரட்டி உள்ளார். கடத்தல் ஆசாமிகளுக்கும், தர்ஷினிக்கும் இடையே போனில் நடந்த உரையாடல்களை பொலிஸார் பதிவு செய்து வைத்திருந்தனர். அதில் அந்தோனி மேரி பெண் தாதா போல மிரட்டும் தொனியில் தர்ஷினியிடம் பேசியது தெரிந்தது.
நாங்கள் கேட்கும் பணத்தை உடனே லண்டனில் நாங்கள் சொல்லும் நபரிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று அவர் மிரட்டி இருந்தார். இந்த மிரட்டலை பொலிஸார் பதிவு செய்திருந்தனர். குற்றவாளிகளை பொறி வைத்து பிடிக்க இந்த உரையாடல்கள் தான் பொலிஸாருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ad

ad