புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு நிதியுதவியினை வழங்கிய கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது
கருத்தினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
“யுத்தத்தின் வடுக்களைச் சுமக்கும் எங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் கல்வி ரீதியான சாதனைகளை நிகழ்த்தவும் எங்கள் இனத்தின் அடையாளத்தை நிலை நிறுத்தவும் இன்று மாற்று வலுவுள்ளவர்களாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.
எங்கள் நிலமும், மொழியும், பண்பாடும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழர்களாகிய நாங்கள் மாற்று வலுவுள்ளோர் என்ற பதத்துள் எம் குழந்தைகளை அடக்காது எதிர்காலத்தில் எம் மண்ணின் சாதனையாளர்களாகக் கருதி அவர்களைக் கல்வி ரீதியாக வளர்த்துவிட வேண்டிய கடமையும் கடப்பாடும் எம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற வகையில் கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் உறவான மோகன் அவர்களின் உதவியினை ஒரு பெரிய விடயமாகக் கருதுகின்றோம்.
நாங்கள் எம் நிலத்தில் நிலையாக நிற்பதற்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை எட்டிப்பிடிப்பதற்கும், வரலாற்று ரீதியான எம் மண்ணைக் காப்பதற்கும் அறிவு ரீதியாக நாம் போராடும் அதே நேரம் எம் பொருளாதாரத்தினையும் பலப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் த.சேதுபதி, சு.தயாபரன், செ.புஸ்பராசா, சி.சுப்பையா, சி.தவபாலன், இ.பொன்னம்பலநாதன் ஆகியோரும், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கு.சர்வானந்தா, வரோட் நிறுவனப் பணியாளர்கள், மாற்றுவலுவுள்ள பள்ளிச் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் உதவியினை ஆற்றிய கனடா மொன்றியலில் வசிக்கும் மோகன் அவர்களுக்கு மாற்றுவலுவுள்ள சிறார்கள் தமது உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

ad

ad