புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே முக்கியமானது!- புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பேட்டி
தமிழர் தரப்பு தற்போது தமக்குள்ள இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிகூடிய கவனத்தை செலுத்த வேண்டும். அதைவிடுத்து தமக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக கொள்ளலாகாது. அவ்வாறு முரண்பாடுகள் தோன்றுமானால் அது தமிழருக்கு பாதிப்பாக அமையும். என்று புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ்  நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கேள்வி: வடக்கின் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்படுவது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
பதில்: அரசாங்கம் வடக்கின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக திட்டமிட்டு எமது மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றது. இதனை உடனடியாக நிறுத்துவதற்கான சரியான நடவடிக்கைகளை நாங்கள் நேர்த்தியாக முன்னெடுக்க வேண்டும்.
அதனை நாங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளாவிட்டால் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பல் எப்படி மாற்றப்பட்டதோ, அதேபோன்று வடக்கில் தமிழரின் குடிப்பரம்பலும் மாறும் அபாயம் உருவாகும். இந்த அபாயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்துள்ளது.
எனவே, அதற்கேற்றவாறு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. காணி பறிப்புக்கு எதிராக மக்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்று பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் பாதுகாப்பு தரப்பினரின் முட்டுக்கட்டைகளையும் மீறி நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிடம் இது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், உலக நாடுகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதைக் காண முடியவில்லை.
இந்தக் காணி சுவீகரிப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேசும்போது, அதன் தாற்பரியத்தை அவர்கள் சரிவர புரிந்து கொள்வதில்லை. இலங்கையர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு உட்பட எந்தப் பிரதேசத்திலும் வாழ முடியும் தானே. ஏன் அதனை தடுக்கின்றீர்கள் என தூதுவர்கள் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர்.
ஆனால், இங்குள்ள பிரச்சினையின் உண்மைத் தன்மையை தூதுவர்கள் புரிந்து கொள்வதில்லை. அரசாங்கம் வடக்கில் திட்டமிட்டு குடிப்பரம்பலை மாற்றும் திட்டத்தை முன்னெடுப்பதாக தெளிவுபடுத்தினாலும், அவர்கள் அதன் உள்ளார்ந்த சதியை புரிந்து கொள்வதில்லை. எனவே, தற்போதைய எமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.
கேள்வி: யாழ். வட பகுதியின் இராணுவ பிரசன்னம் அதிகரித்துச் செல்வது தொடர்பில்?
பதில்:  யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டது. விடுதலைப் புலிகளும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு அரசு தெரிவித்தாலும் அரசாங்கம் வடக்கு இராணுவ முகாம்களை பலப்படுத்தி வருகின்றது.
முல்லைத்தீவு, முறிகண்டி, கிளிநொச்சி பிரதேசங்களில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியமர்த்துவதற்காக பல்வேறு வீட்டுத் திட்டங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இனசுத்திகரிப்பிற்கு உள்ளாகியுள்ளோம் என்ற மனோபாவம் தலைதூக்கியுள்ளது. தாங்கள் இராணுவ ஆளுகைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்கள் என்ற எண்ணமும் தலைதூக்கியுள்ளது. வடக்கின் சிவில் நிகழ்வுகள் அனைத்திலும் இராணுவத்தின் தலையீடு மிகப் பெரியளவில் உள்ளது.
இது நிச்சயமாக இனங்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவர மாட்டாது. இராணுவம் விலக்கப்பட்டு சிவில் நிர்வாகம் அமுல்படுத்தப்படுவதன் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதன்போதே உண்மையான, நிலையான சமாதானம் உருவாகும்.
கேள்வி: வட மாகாணசபை தேர்தலில் செப்டம்பரில் நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இத்தேர்தல் நடக்குமா?
பதில்:  வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதி வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென பலமுறை அறிவித்தார். தற்போதும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படுமென தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இத் தேர்தல் நடத்தப்படுமானால் அதில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும். ஏனென்றால், வடக்கு மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றி அத்தியாவசியமானது.
அப்போதுதான் 80 சதவீதமான வடபகுதி தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தியை உலகிற்கு வழங்க முடியும்.
எனவே, தமிழ்க் கட்சிகள் தமக்குள் யார் பெரியவர்? யார் தாழ்ந்தவர்? என்ற பலப்பரீட்சையில் இறங்கக் கூடாது. இவ்வாறான தான்தோன்றித்தனமான நிலைப்பாடுகளை கைவிட்டு வட மாகாணசபை தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும். அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும். அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் பிரச்சினைகள் இருக்குமானால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்த்துக் கொளள்ப்பட வேண்டும்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பானது தனிக்கட்சி ஆதிக்கம் கொண்ட கட்சியல்ல என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் நலனுக்காக முன்னுரிமை கொண்டதாகவே கூட்டமைப்பு இருக்க வேண்டுமென்பதே “புளொட்” அமைப்பின் அபிலாஷையாகும்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தத்தமது தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால் அத் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு கூட்டமைப்பை ஒற்றுமையாக பலப்படுத்துவதன் மூலமே எமது அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வது மாத்திரமல்ல, இன்றிருக்கும் நிலைமையையாவது தக்கவைத்துக் கொண்டு சாத்வீக ரீதியாக அரசியல் தீர்வைப் பெற முடியும்.
கேள்வி: எமது பிரச்சினையில் இந்தியாவின் வகிபாகம் மற்றும் தற்போதைய அமெரிக்காவின் மௌனம் எதனை வெளிப்படுத்துகிறது?
பதில்:  அமெரிக்காவின் மௌனமென்பது எமது பிரச்சினையை கைவிட்டு விட்டதாக அர்த்தப்படாது என்பதே எனது நம்பிக்கையாகும். இலங்கைப் பிரச்சினை அமெரிக்காவிற்கு முதன்மையான பிரச்சினையல்ல. இதனை என்னைச் சந்தித்த அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா தனது நாடு சார்ந்த பாதுகாப்பு கேந்திரநிலை கொண்ட நாடுகளிலேயே தனது அதிக தலையீட்டை ஏற்படுத்தும். ஆனால் தமிழ்நாட்டின் தலையீடு காரணமாக இந்தியா எமது பிரச்சினையில் அதிக அக்கறையை தொடர்ந்து செலுத்திக் கொண்டேயிருக்கும். ஆனாலும் இந்தியாகூட தங்களுடைய நலன்களுக்குள்ளேயே எமது பிரச்சினைகளை அணுகும் என்பதை நாம் உணரவேண்டும்.
1980 தொடக்கம் எமது இயக்கம் சார்பாக இந்திய அரசியல் தலைமைகள், அதிகாரிகள் பலருடன் வைத்திருந்த தொடர்புகளால் இதனை எனக்கு நிச்சயமாக கூற முடியும். எது எவ்வாறாயினும் எமது பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசின்மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியாவே ஆகும்.
எனவே, இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து நட்புறவுகளை பேணிப் பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும் என புளொட் தலைவர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ad

ad