புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

அரசியல் ஒடுக்குமுறையால்தான் தமிழர் வெளிநாடுகளுக்குத் தப்பியோட்டம்; சரவணபவன் எம்.பி.

இலங்கை போன்ற இன ஒடுக்குமுறை நிலவும் நாடுகளில் இருந்தே மக்கள் வேறு நாடுகளுக்குத் தப்பியோடுகின்றனர்.
ஆபத்தான கடற் பயணங்களையும் கூட பொருட்படுத்தாமல் அவர்கள் பிற நாடுகளில் தஞ்சம் கோருவதற்காகச் செல்கின்றனர். அரசியல் தஞ்சம் கோரி செல்பவர்களில் அதிக எண்ணிக்கையானோர் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களே. அரசியல் ஒடுக்குமுறையே அதற்கான காரணம் என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சர்வதேச அகதிகள் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்சமயம் சர்வதேச அகதிகள் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி பல்வேறு கருத்தரங்குகள் வாதப் பிரதிவாதங்கள், அறிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

நாட்டை விட்டு சட்ட விரோதமாகவும் சட்டபூர்வமாகவும் வெளியேறும் அதிக அகதிகளின் நாடுகள் வரிசையில் இலங்கை ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்து வருகின்றது.

இலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணம் இலங்கையில் இடம்பெற்ற போர் என்றே ஒரு காலத் தில் கூறப்பட்டது. 

ஆனால் போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அகதிகள் வெளியேற்றம் குறைவடையவில்லை. நாளாந்தம் மக்கள் ஏதோ ஒரு வகையில் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். 

இதிலிருந்து, போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்கு முன்பும் போர் முடிவடைந்த பின்பும் மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலையே இலங்கையில் தொடர்கிறது என்பதை நாம் தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஐ.நா. குற்றச்சாட்டு

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு சட்டவிரோத ஆள்கடத்தல்களைத் தடுக்க இலங்கை பயனுள்ள வகையில் செயற்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. 

அடிப்படையில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு அகதிகளாக தஞ்சமடையும் தமிழ் மக்களை திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தும் வகையிலேயே சட்டவிரோத ஆள்கடத்தல்களைத் தடுக்கும் ஒரு பொறிமுறையாக இலங்கை கையாண்டு வருகின்றது. 

ஆனால் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யவோ அல்லது திட்டமிட்ட வகையில் ஆள்கடத்தல்களை கடத்தும் குழுக்களைக் கட்டுப்படுத்தவோ எந்தவித பயனுள்ள நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள் வதாக இல்லை. 

ஆனால் நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே வெளியேறுகின்றனர் என வெளிநாடுகளை நம்ப வைப்பதில் இலங்கை மிகமிக முனைப்பாகச் செயற்படுகிறது. சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்வோர், பொருளாதார அகதிகள், அரசியல் அகதிகள் என இரு வகையில் நோக்கப்படுகின்றனர்.

ஆனால் இலங்கை போன்ற இன ஒடுக்குமுறை நிலவும் நாடுகளிலிருந்து வெளியேறுவதற்குப் பிரதான காரணம் அரசியல் ஒடுக்குமுறையே. 

இனரீதியான ஒடுக்குமுறைகள், பாகுபாடுகள் தமிழ் மக்கள் தமது உழைப்பில் நிம்மதியாக வாழ்வதை தடை செய்கிறது. கொடிய வறுமைக்குள்ளும் பட்டினிக் குள்ளும் தள்ளுகிறது. 

இதற்கு அரசியல் ஒடுக்கு முறையே முற்று முழுதான காரணமாக அமைகிறது. எனவே இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிற நாடுகளில் தஞ்சம் கோருவோரில் மிக அதிக வீதமானோர் அரசியல் ஒடுக்குமுறைகளை அனுபவிப்பவர்களே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆபத்தான கடற்பயணம்

இந்த வகையிலே இலங்கையிலிருந்து ஏராளமான தமிழ் மக்கள் வெளியேறி பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகின்றனர். போர் முடிந்த பின்பு ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடு களுக்கு செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அதே போன்று பிரிட்டன், சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளை நோக்கியும் தமிழ் மக்கள்; இடம் பெயர்கின்றனர். உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு மக்கள் பயணிக்கின்றனர் என்றால் அவர்கள் கடற்பயணத்தை விட பெரும் ஆபத்தை இலங்கையில் சந்திக்க வேண்டிய நிலை நிலவுகிறது என்பதே அர்த்தம்.

போர் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் பலம் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பல்வேறு முனைகளில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சமாதானமாகவும் தங்கள் சொந்த இடங்களில் கூடி வாழ முடியாத நிலை அரசினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு வெளிநாடுகளுக்கு பிரசாரம் செய்கிறது.

போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் என்று சொல்லப்படுகிறது. வவுனியா செட்டிகுளம் அகதிகள் முகாம் மூடப்பட்டு விட்டமை உண்மையே. ஆனால் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இப்போதும் அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி அல்லற்பட்டு வருகின்றனர்.

வலி வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களில் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பெயரில் அவர்கள் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்த நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அவர்கள் தங்கள் குடியி ருப்புக்களை இழக்கச் செய்வது மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம், விவசாய நிலங்களையும், மீன்பிடித்துறைக்கு ஆதாரமான மீன்பிடி மையங்களையும் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வெட்ட வெளிச்சம். 

அவற்றை மீட்க அம்மக்கள் நடத்தும் போராட்டங்கள் வன்முறை வழிகளில் முறியடிக்கப்படுகின்றன. வலி.வடக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாகவும் தமிழ் மக்கள் 4 வருடங்கள் கடந்தும் அகதி வாழ்வில் அல்லற்படுகின்றனர்.

போர் முடிந்தும் கூட இனப்பிரச்சினைத் தீர்வுகாண எந்த உருப்படியான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் வெவ்வேறு சட்டங்கள் மூலம் பறிக்கப்படுகின்றன. 

இன்றும் காணாமற் போனோர், சரணடைந்து கைதுசெய்யப்பட்டோர் பற்றிய எவ்வித தகவல்களும் இன்றுவரை வெளி யிடப்பபடவில்லை. நீண்டகாலமாக சிறைகளில் வாடுபவர்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை.

ஊடகவியலாளர்கள் முதற்கொண்டு மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட மிகப்பலர் கொல்லப்படுகின்றனர் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதுமில்லை தண்டிக்கப்படுவதுமில்லை. 

அதாவது தமிழ் மக்கள் மீது மிகக் கொடூரமான முறையில் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அடிப்படையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சமாதானமாகவும் குடிவாழும் உரிமை பூரணமாகவே மறுக்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால், தமிழ் மக்கள் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை இலங்கை அரசாங்கத்தினாலேயே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமன்றி தமிழ் மக்களின் பணத்தைப் பறித்து ஏமாற்றுக்காரர்களும், கடத்தல்காரர்களும் அரச அனுசரணையுடனேயே செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுவதும் கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.

இன்று வரை ஆள்கடத்தலின் அடிப்படை மூலம் எதுவென்று கண்டுபிடிக்கப்ப டாமை இதை உறுதி செய்வதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

தடுக்க முடியாது

இந்நிலையில் உள்நாட்டிலேயே தமிழ் மக்களில் ஒரு பகுதியினரைத் தொடர்ந்து அகதிகளாக வைத்திருப்பதன் மூலம் இங்குள்ள தமிழ் மக்களை ஆபத்துக்களைப் பொருட்படுத்தாது நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதிலும் இலங்கை அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. 

எனவே சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு எதிரான அமைப்பின் இலங்கை மீதான குற்றச்சாட்டு நூறு வீதம் சரியானதே. ஓர் இனத்தின் மீதோ அல்லது ஒரு மக்கள் தொகுதியின் மீதோ கொடூரமான ஓடுக்குமுறை பிரயோகிக்கப்படுகின்ற போது எவ்விதத்தில்தானும் அகதிகள் வெளியேற்றத்தைத் தடுத்துவிடமுடியாது. 

எனவே ஒடுக்குமுறை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளின் நிலைமையைப் புரிந்துகொண்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்கிவரும் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது

ad

ad